சுமந்திரனின் வெற்றியும் தோல்வியும்

31 May, 2020 | 03:43 PM
image

-கபில்

கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களைக் கடந்தும், தமிழர் தரப்பு அரசியலில், தவிர்க்க முடியாத வகிபாகத்தைக் கொண்டிருப்பவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியானது, தமிழரின் ஆயுதப் போராட்டத்தை தவறு என்று கூறி விட்டார் என்று தமிழ் அரசியல் பரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

சுமந்திரன், அவ்வாறு கூறியிருந்தால் அது முற்றிலும் தவறானது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாத்திரமன்றி, அவரது தமிழ் அரசுக் கட்சிக்குள்ளேயே இந்தக் கருத்து சுமந்திரனுக்கு எதிரான அலையை தோற்றுவித்தது.

சுமந்திரனின் ஆட்கள் என்று கூறப்பட்டவர்கள் கூட, இந்தக் கருத்தினால் சினமடைந்தனர். அறிக்கைகளை வெளியிட்டனர். எனினும், தவறான மொழியாக்கத்துடன், தமது செவ்வி தவறான முறையில் அர்த்தப்படுத்தப்பட்டு விட்டதாக சுமந்திரன் அதனை நியாயப்படுத்திக் கொண்டார்.

அது மாத்திரமன்றி, தவறான நோக்கத்துடன் கேட்கப்பட்ட கேள்வியை, சரியானமுறையில் அணுகியிருக்கிறார் சுமந்திரன் என்று சான்றிதழ் கொடுத்து இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முயன்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.

எவ்வாறாயினும், அந்தச் செவ்வியில் ஆயுதப் போராட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று அவர் கூற முயன்றது அவரது சொந்தக் கருத்தாகவே இருந்தாலும்- தமிழர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டதை, அந்தச் சந்தர்ப்பத்தில் சுமந்திரன் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்பதே, பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

கொரோனாவுக்குப் பின்னர் தமிழ் அரசியல் பரப்பில் சூட்டைக் கிளப்பி விட்ட இந்த விவகாரம் இப்போது சற்று அடங்கி விட்டது.

சுமந்திரனும் இப்போது கொழும்பில் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும், வழக்கில் கவனம் செலுத்தி வருகிறார். ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்து உத்தரவிடக் கோரியும், நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி உத்தரவை ரத்துச் செய்து உத்தரவிடக் கோரியும், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தான் முக்கியமாக வாதிட்டு வருகிறார்.

முதலாவதாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த சரித்த குணரத்னவின் சார்பில், அவர் முன்னிலையாகிறார். இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா - இல்லையா என்ற பரிசீலனையே தற்போது உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாமின் முன்பாக நடந்து வருகிறது.

கடந்த 18ஆம் திகதி தொடங்கிய இந்தப் பரிசீலனை, இந்தப் பத்தி எழுதப்படும் போது, இரண்டாவது வாரமாகவும், நடந்து கொண்டிருக்கிறது. பூர்வாங்க விசாரணைகளின் முடிவில் இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதா என்று உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும்.

நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, தேர்தலை பிற்போட வேண்டும், நாடாளுமன்றத்தை கூட்டி, பிரச்சினையை கையாளும் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பது, ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு.

எதிர்க்கட்சிகளின் இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கிலேயே, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்த மனுக்களில், சட்டத்தரணி சுமந்திரனின் வாதங்கள் மிகமுக்கியமானவை. ஆனால், அவர் இந்த மனுக்கள் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பைப் பெற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கூட்டு அரசாங்கத்தில் இருந்து திடீரென விலகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்து, உத்தரவிட்டார்.

அதற்கு எதிராக அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் முதலில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் சுமந்திரன் தான் மிக முக்கியமாக வாதிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி செல்லுபடியற்றது என்று அப்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பு சுமந்திரனுக்கு கொழும்பு அரசியலில் பெரும் புகழைத் தேடிக் கொடுத்திருந்தது. அதேவேளை, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காகத் தான் வாதாடுகிறார், ரணில் விக்ரமசிங்கவின் பதவியைக் காப்பாற்றுவதற்கே வழக்காடினார் என்ற குற்றச்சாட்டுகளும் தமிழ் அரசியல் பரப்பில் முன்வைக்கப்பட்டன.

அண்மையில் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, பிணை கோரி, நீதிமன்றத்தில் சுமந்திரன் முன்வைத்த வாதங்களும் தமிழ் அரசியல்பரப்பில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களுக்கு உள்ளாகின.

அவர் தனது சட்டப் புலமையை, தமிழ் மக்களின் நலனுக்காக , அவர்களின் உரிமைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே கூறப்பட்டு வருகின்றன.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, வடக்கு, கிழக்கு இணைப்புக்காக, ஏன் அவர் இதனைப் பயன்படுத்த வில்லை என்று, தமிழ் மக்களின் உணர்வுபூர்வ பிரச்சினைகளுடன் சுமந்திரனை தொடர்புபடுத்தி விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறானதொரு நிலையில், தமது கட்சியினராலேயே சுமந்திரன் பெரிதும் கைவிடப்பட்ட நிலைக்குள்ளாகியிருக்கும் சூழலில் தான், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீது அவர் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனையில் அளிக்கப்படப் போகின்ற தீர்ப்பு, சுமந்திரனைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.

இதில் வெற்றி பெற்றால், 2018 அரசியல் குழப்பத்தை முடித்து வைத்த வரலாற்றுத் தீர்ப்பு எந்தளவுக்கு சுமந்திரனுக்கு புகழைத் தேடிக் கொடுத்ததோ, அதுபோன்றதொரு புகழை அவருக்கு கொடுக்கக் கூடும். உயர்நீதிமன்றத்தில் 7 மனுதாரர்கள் சார்பில் வேவ்வேறு சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தாலும், சுமந்திரனின் வாதமே பிரதானமாக இருக்கிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக கிடைக்கக் கூடிய புகழும் சரி, விமர்சனங்களும் சரி சுமந்திரனுக்கானதாகவே இருக்கப் போகிறது.

இந்த தீர்ப்பில் வெற்றியைப் பெற்றாலும் கூட, தமிழ் அரசியல் பரப்பில் சுமந்திரனின் வாதத்திறமை போற்றப்படுமே தவிர, அவர் தெற்கின் அரசியல் சக்திகளுக்காகத் தான் வாதாடுகிறார் என்ற விமர்சனங்கள் முடிவுக்கு வரப்போவதில்லை.

அதேவேளை இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் நிலை ஏற்பட்டால், அதுவும் கூட சுமந்திரனின் தோல்வியாகத் தான் தமிழ் அரசியல் பரப்பில் பிரசாரப்படுத்தப்படும்.

எதிர்க்கட்சிகளின் தோல்வியாக அது பார்க்கப்படுவதை விட, சுமந்திரனின் தோல்வியாகவே அடையாளப்படுத்தப்படும். ஏனென்றால் அவர் அரசியலில் தோற்கடிக்கப்பட வேண்டிய ஒருவராக பெரும்பாலானவர்களாக பார்க்கப்படுகிறார்.

அவ்வாறான ஒருவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணியாக தோல்வியடையும் போது கூட, அரசியல்வாதியின் தோல்வியாகத் தான் பூதாகாரப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை.

எனவே, இந்த மனுக்களைப் பொறுத்தவரையில் சுமந்திரனுக்கு மிக முக்கியமானவை. உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பு அவருக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம். ஆனால், அது தமிழ் அரசியலில் அவருக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04