(எம்.மனோசித்ரா)

நாம் எதிர்க்கட்சியாக இருந்த போது தேர்தலை நடத்தி அரசாங்கத்தை கவிழ்ப்பதே எமது தேவையாகக் காணப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

சனிக்கிழமை தளதா மாளிக்கைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த பிரதமர் ,

கேள்வி : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று பேராயர் குற்றஞ் சுமத்துகின்றார். இது பற்றி உங்கள் நிலைப்பாடு ?

பதில் : அது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலோட்டமாக விசாரணைகளை முன்னெடுத்து ஓரிருவருக்கு  மாத்திரம் தண்டனை வழங்குவது பொறுத்தமானதல்ல. இதன் பிரதான சூத்திரதாரிகள் இனங்காணப்பட வேண்டும். நாமும் இதன் பின்னாலேயே சென்று கொண்டிருக்கின்றோம்.

கேள்வி : தேர்தலுக்கு உங்களுடைய தயார் நிலை எவ்வாறுள்ளது ? வாக்குச் சீட்டுக்களை அச்சிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே ?

பதில் : ஆம். நிச்சயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமல்லவா? தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தயாராக வேண்டும். அது அவரது கடமையும் பொறுப்புமாகும். தேர்தலை நடத்துவதே ஆணைக்குழுவின் பிரதான பொறுப்பாகும். அதற்கே ஆணைக்குழு இயங்குகிறது. நீதிமன்ற தீர்ப்பு வெளியானவுடன் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும்.  

கேள்வி : இது தேர்தலுக்கு பொறுத்தமான சந்தர்ப்பம் அல்ல என்று ஐக்கிய தேசிய கட்சி குற்றஞ்சுமத்துகின்றதே ?

பதில் : அவர்கள் ஏன் அவ்வாறு கூறுகின்றார்கள் என்று எமக்குத் தெரியாது. நாம் எதிர்க்கட்சியாக இருந்த போது அரசாங்கத்தை வீழ்த்துவதே எமது பிரதான குறிக்கோளாக இருந்தது. அத்தோடு தேர்தலை முடிந்தளவு விரைவில் நடத்த வேண்டும் என்பதே எமது தேவையாகவும் இருந்தது. அப்போது அரசாங்கமே தேர்தலை காலம் தாழ்த்த பாடுபட்டது. ஆனால் தற்போது நிலைமை தலை கீழாகவுள்ளது.

அரசாங்கம் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறது. எதிர்க்கட்சி தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.