-என்.கண்ணன்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் பரப்பிலும், தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தொண்டமானின் மறைவு குறித்து இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்த பலரும், அரசியல் பரப்பிலும், தொழிற்சங்கப் பரப்பிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வகிபாகம் குறித்தும், அதன் எதிர்காலம் குறித்தும் சிலாகிக்கத் தவறவில்லை.

அதனால் தான், இ.தொ.கா. தகுந்த தலைமைத்துவத்திடம் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

இ.தொ.கா.வுக்கு சரியான தலைமைத்துவம் பற்றி வலியுறுத்தியவர்களில் இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒருவர் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இன்னொருவர் அவரது கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா.

ஒரு கட்சிக்கோ இயக்கத்துக்கோ தலைமைத்துவ வெற்றிடம் ஏற்படுகின்ற போது, அதனை நிரப்புபவர் யார் என்ற கேள்வி எழுவது இயல்பு.

முன்னைய தலைமையின் ஆற்றல், ஆளுமைக்கு ஒப்பான ஒருவர் அந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும் வழக்கம். ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்தை இலகுவாக யாராலும் நிரப்பி விட முடியாது- இதனை, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இ.தொ.கா.வின் தலைமை மாத்திரமன்றி, எங்கெல்லாம் வெற்றிடங்கள் ஏற்படுகின்றனவோ, அங்கெல்லாம், தகுதியானவர் ஒருவர் மூலமோ அல்லது பொருத்தமற்ற ஒருவர் மூலமோ அது நிரப்பப்பட்டே தீரும். அது உலக நியதி.

இவ்வாறான நிலையில், இதொகாவில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தகுதியான ஒருவர் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விக்னேஸ்வரன், சிறிகாந்தா போன்றவர்களுக்கு ஏற்பட்டிருப்பதற்கு, அவர்களின் கடந்தகால அனுபவங்கள் காரணமாக இருக்கக் கூடும்.

தமிழ்த் தேசிய அரசியலில், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், சரியான தலைமைத்துவம் இல்லை என்ற கருத்து மிக வலுவாகவே இருக்கிறது. விடுதலைப் புலிகளால் தலைமை தாங்கப்பட்ட தமிழரின் அரசியல் போராட்டம், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், சரியான கைக்கு மாறியதா என்ற கேள்வி பலருக்கு உள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக தேர்தல் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்ட போதும், அவர்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம், குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளதை மறுக்க முடியாது.

இரா.சம்பந்தனின் தலைமைத்துவம் மீது அதிருப்தி கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் தான், சி.வி.விக்னேஸ்வரன், சிறிகாந்தா போன்றவர்கள்.

அவர்கள் இதொகாவின் புதிய தலைமைத்துவம் பொருத்தமான ஒருவரிடம், கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதில் ஆச்சரியமில்லை.

சி.வி.விக்னேஸ்வரன், சிறிகாந்தா போன்றவர்களின் இந்த அறிக்கைகள் வெளிவர முன்னரே- ஆறுமுகன் தொண்டமானின் மறைந்து 24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே, செந்தில் தொண்டமான் தலைமையிலான இதொகா குழுவொன்று பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தது.

நுவரெலிய மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமானின் இடத்துக்குப் பதிலாக, அவரது மகன் ஜீவன் தொண்டமானை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டது அந்தக் குழு.  அதனைப் பிரதமர் மகிந்தவும் விருப்புடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

26 வயதுடைய இளைஞனான ஜீவன் தொண்டமான் அரசியலில் ஆரம்ப புள்ளியை வைத்திருந்தாலும், இ.தொ.கா.வை வழிநடத்தும் அளவுக்கு அவருக்கு ஆளுமை உள்ளதா என்ற கேள்வி ஏராளமானோரிடம் உள்ளது.

ஆனால், இ.தொ.கா. ஒரு குடும்ப அரசியல் சொத்தாகவே இருக்கிறது என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பரம்பரை அல்லது குடும்ப அரசியல் பாரம்பரியம் உள்ளது.

சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்குப் பின்னர், அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க, அவரது மகள் சந்திரிகா குமாரதுங்க, மகன் அனுர பணடாரநாயக்க போன்றவரகள் அரசியலுக்கு வந்தார்கள். இப்போது அந்த பரம்பரை அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி விட்டது.

டி.ஏ.ராஜபக்சவில் தொடங்கிய அரசியல் பரம்பரை, அவரது மகன்களான சமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் மட்டுமன்றி பேரன்களான, நாமல் ராஜபக்ச, ஷசீந்திர ராஜபக்ச போன்றவர்கள் வரை வந்து விட்டது.

அதுபோலத் தான், தொண்டமான் பரம்பரையும். இந்தியாவில் நேரு பரம்பரை, எவ்வாறு காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்குகிறதோ, கருணாநிதி குடும்பம் எவ்வாறு திமுகவை ஆள்கிறதோ அதுபோலத் தான், இதொகாவின் நிலையும். சௌமியமூர்த்தி தொண்டமான், தனது பேரன் ஆறுமுகன் தொண்டமானை தனது அரசியல் வாரிசாக வளர்த்தார்.

ஜீவன் தொண்டமானின் இப்போதைய வயதான 26 வயதிலேயே, 1990 ல் ஆறுமுகன் தொண்டமானும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

1994 இல் நுவரெலிய மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாக தெரிவான போது, அவருக்கு 30 வயது தான் ஆகியிருந்தது. 1999 இல் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் இதொகாவின் தலைமையை ஏற்றுக் கொண்ட போது ஆறுமுகன் தொண்டமானுக்கு வயது 35 தான்.

இவ்வாறானதொரு நிலையில் இருந்து பார்க்கும் போது, ஆறுமுகன் தொண்டமானுக்குப் பின்னர், இதெகா கட்சியை அவரது மகனோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள வேறு ஒருவரோ தான் வழிநடத்தப் போவது உறுதி.

ஏனென்றால் இந்திய, இலங்கை அரசியல் பாரம்பரிய குடும்பங்களில் இது சகஜமானது. ஆளுமை, தகுதி, ஆதரவு என்பனவற்றுக்கு அப்பால், அனுதாபம், குடும்ப ஆதிக்கம் ஆகியவற்றுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கப்படும்.

1984 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 31ஆம் திகதி காலையில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணம் நிகழ்ந்து சில மணித்தியாலங்களில், அவரது மகன் ராஜிவ் காந்தி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

அதுபோலவே, சிறிபெரும்பதூரில் 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி இரவு ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்படுகிறார். மறுநாளே அவரது மனைவி சோனியா காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1994 ஒக்ரோபர் 24ஆம் திகதி தொட்டலங்கவில் நடந்த குண்டுவெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்க கொல்லப்பட்டவுடன், அவரது மனைவி சிறிமா திசநாயக்கவை வேட்பாளராக அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி.

ஆனால் அவரால் தேர்தலிலும் சரி, அரசியலிலும் சரி வெற்றிபெற முடியவில்லை. எனினும், அவரது மகன்களான நவீன் திசநாயக்கவும், மயந்த திசநாயக்கவும், அரசியலில் இருக்கிறார்கள்.

இவ்வாறான ஒரு பாரம்பரியத்தின் வழியே தான், அரசியல் வாரிசு கட்சிகளின் தலைமைத்துவம் நிரப்பப்பட்டு வந்திருக்கிறது.

இதே வழியில் தான் இதொகாவும், வாரிசு அரசியல் பாரம்பரியத்துக்கு அமைய தனது தலைமையை தெரிவு செய்து கொள்ளப் போகிறதா அல்லது தகுதியான பொறுப்புவாய்ந்த தலைமைத்துவத்தை தேடப் போகிறதா என்ற கேள்வி உள்ளது.

வாரிசு அரசியல் தலைமைத்துவம் என்பது எல்லா இடங்களிலும் தவறானதான தெரிவாக இருந்தது என்று கூறமுடியாது. பண்டாரநாயக்க பரம்பரையின் அரசியல் தலைமைத்துவம் வெற்றிகரமாகவே கோலோச்சியது.

நேரு குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் இப்போது தளர்ந்து போயிருப்பினும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று, பலம்வாய்ந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்தவரையில், சௌமியமூர்த்தி தொண்டமானின் அளவுக்கு ஆறுமுகன் தொண்டமானிடம், தலைமைத்துவ ஆளுமை இருந்தது என்று கூறமுடியாது.

சௌமியமூர்த்தி தொண்டமான் தொழிற்சங்கப் போராட்டங்களால் தலைமைத்துவத்தை உறுதியாக கட்டியெழுப்பியவர். அவர் கீழ் இருந்து மேல் நோக்கி வளர்ச்சி பெற்ற ஒரு தலைவர். ஆனால், ஆறுமுகன் தொண்டமான் அப்படியல்ல.

அவர், சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமைத்துவத்தில் இருந்து, தன்னை வளர்த்துக் கொண்டவர். மேல் நிலையில் இருந்து கொண்டு அதனை தக்கவைத்துக் கொண்டவர்.

இப்போது ஆறுமுகன் தொண்டமானின் வெற்றிடத்தை நிரப்பப் போகும் தலைவர், கீழ் இருந்து மேல் நோக்கி கிளம்பும் ஒருவராக இருக்கப் போகிறாரா அல்லது, ஏற்கனவே மேல் நிலையில் இருந்து கொண்டு, அதனை தக்க வைக்கும் ஒருவராக இருக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

இ.தொ.கா. என்ற கட்சியின் தலைவராக இருப்பதை விட, மலையக மக்களின் அபிமானம் பெற்ற தலைவராக மிளிரக் கூடியவர் தான் முக்கியம்.

பொதுவாகவே, வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது, எல்லா சந்தர்ப்பங்களிலும், சரியானதாக நிரப்பப்படுவதில்லை. ஈழத் தமிழரின் அரசியல் தலைமை வெற்றிடங்களும் கூட, சரியான முறையில் எல்லா சந்தர்ப்பங்களிலும் நிரப்பப்பட்டது என்று கூறமுடியாது. காலத்தின் தேவையும் சந்தர்ப்ப சூழ்நிலையும் அவ்வப்போது பொருத்தமற்ற தலைமைகளுக்கும் இடமளித்திருக்கிறது.

அவ்வாறான நிலை இ.தொ.கா.வுக்கு வந்து விடக்கூடாது என்ற கரிசனை, வடக்கின் அரசியல் தலைமைகளுக்கு வந்திருப்பதற்கு, காரணம், அவர்கள் மீதான அனுதாபம் என்று கூறுவதை விட, அனுபவம் என்று கூறுவது தான் பொருத்தம்.