(செ.தேன்மொழி)

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கி மற்றும் வெடிப்பொருட்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு நேற்று சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 25,31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து டீ56 உள்நாட்டு துப்பாக்கி, வெளிநாட்டு ரிவோல்டர் ரக துப்பாக்கி , துப்பாக்கி தோட்டா மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கடந்த மாதம் 25 ஆம் திகதி கொலன்னாவ பகுதி வீடொன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  வேன் ஒன்றின் மீது துப்பாக்கியை பிரயோகித்தமை மற்றும் நபரொருவரை கொலைச் செய்வதற்காக திட்டமிட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

வெல்லம்பிட்டி  பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.