(தொகுப்பு:- ஆர்.ராம்)

தமிழின விடுதலைக்கான போராட்டம், சாத்வீக முறையில் ஆரம்பிக்கப்பட்டு, ஆயுதரீதியில் உச்சமடைந்து அது மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகளாகின்ற நிலையில் தற்போது போருமில்லை சமாதமுமில்லை என்றவொரு சூன்யமான காலத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இக்காலத்தில் நீதிக்கோரிக்கையை முன்னிலைப்படுத்தியதொரு போக்கும்,  ஆயுதவிடுதலையை அரவணைத்தொருதரப்பும் அதற்கெதிரான மனநிலையுடை பிறிதொருதரப்பும் பரஸ்பர விமர்சனங்களை முன்னெடுக்கின்றதொரு போக்குமே தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் காணப்படுகின்றமை வெளிப்படை. இத்தகையதொரு நிலையில்ரூபவ் உள்நாட்டிலும் பிராந்திய, பூகோளத்திலும் அரசியல் சூழமைவுகள் மாறியுள்ள நிலையில் தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்டம் என்ன?

அதற்கான அணுகுமுறைகள் யாவை? என்பது பற்றி ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் அரசியல் ஆய்வாளருமான இராதந்திரி.கலாநிதி தயான் ஜயத்திலகவின் வீரகேசரி வாரவெளியீட்டுடனான கருத்துப்பகிர்வு வருமாறு,

உலகில் சிறுபான்மை சமூகங்கள் எத்தகைய அரசியல், பொருளாதார அணுகமுறைகளைச் செய்துள்ளன என்ற அனுபவத்தினை தமிழத்தரப்பு முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

அடுத்ததாக, தமிழர் அரசியல் தரப்புக்கள் இதுகால வரையிலான அரசியல் செயற்பாடுகளில் எவ்வாறான பாரிய தவறுகளை இழத்துள்ளன என்பதை சீர்தூக்கிப் பார்த்து சுயபரிசீலனை செய்ய வேண்டியதும் இன்றியமையாதவொன்றாகின்றது.

அண்மையில் சம்பந்தன், சுமந்திரனோடு இணைந்ததாக தமிழினக் குழுமத்திற்குள் எழுந்த வாதப்பிரதிவாதங்கள் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட பாரிய தவறுகளை திருத்துவதற்கோ, சீர்தூக்கிப்பார்ப்பதற்கோ விரும்பாத பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அக்குழுமத்திற்குள் காணப்படுகின்றார்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது.

உலகில் வடக்கு அயர்லாந்தில் செயற்பட்ட ‘ஷிங்பேன்’ அமைப்பானது தனது அரசியல் செயற்பாட்டு பயணத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த அமைப்பு எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளது என்று பார்த்தோமாக இருந்தால் அயர்லாந்து குடியரசில் அரச அதிகாரங்களை வசப்படுத்தக்கூடியளவு தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளது. உயர்ந்த கல்வி அறிவும் ஆற்றலும் கொண்ட தமிழ் தரப்பினரால் அவ்வாறானதொரு நிலையை அடைய முடியாது போனதேன் என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

செய்யக்கூடாதவற்றை செவ்வனே செய்தார்கள்

இனவிடுதலைக்காக, அதிகாரங்களுக்காக போராடும் உலகில் எந்தவொரு நாட்டினது இனக்குழுவினரும் தமக்கு அதிகாரங்களைப் பெற்றுதருவதற்கான கரிசனையுடன் செயற்படும் அயல்நாட்டிற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி அதன் மூலம் கிடைக்கும் அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு விளைவார்களே தவிர, கரிசனையுடன் செயற்படும் அயல்நாட்டின் படைகளுக்கு எதிராக போர் புரியமாட்டார்கள்.

ஆனால் துரதிஷ்டவசமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அவ்வாறு செயற்பட்டார்கள். அவர்கள் அவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டார்கள் என்பதற்கு அப்பால் அவர்களின் செயற்பாட்டிற்கு தமிழ் மக்களின் பெரும்பான்மையானோரும் ஆதரவை நல்கியுள்ளார்கள்.

அக்காலத்தில் இருந்த சூழலில் அவ்வாறு தமிழ் மக்கள் ஆதரவினை நல்கியிருந்தாலும் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த நொடி வரையில் அன்று விடுதலைப்புலிகள் நடந்துகொண்ட விதம் தவறு என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையே தற்போதும் நீடிக்கின்றது.

அதுமட்டுமன்றி எந்தவொரு விடுதலை அமைப்பும் செய்வதற்கு தயங்கும் செயற்பாட்டை விடுதலைப்புலிகள் செய்தனர். அதாவது, தமது இனத்திற்காக கரிசனையுடன் செயற்பட்ட அயல்நாட்டுத் தலைவரை அவர்கள் படுகொலை செய்தார்கள். அதனைக்கூட தமிழ்த் தரப்பினர் தற்போது வரையில் தவறு என்று ஏற்றுக்கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தகாலத்தில் 2003 ஏப்ரலில் டோக்கியோவில்  உதவியளிக்கும் மாநாடு நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனால் அதனை விடுதலைப்புலிகள் நிராகரித்துவிட்டார்கள். உலகில் வேறெந்த கொரில்லா இயக்கத்திற்கு அவ்வாறான வாய்ப்பொன்று அளிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக அந்த மாநாட்டில் பங்கேற்றிக்கும். ஆனால் அம்மாநாட்டை விடுதலைப்புலிகள் நிராகரித்தபோதும் அதன் ஆழத்தினை புரியாது தமிழ் மக்களும் ஆதரவளித்தார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் நினைவலைகளை மீள்நினைவுபடுத்திக்கொண்டும் அரவணைத்துக்கொண்டும் இருப்பதானது தமிழ் மக்களின் தேசிய தேவைப்பாடுகளுக்கு மிகப்பெரும் பாதகமான நிலைமைகளேயே ஏற்படுத்துகின்றனது. சர்வதேசத்தில் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் சாதமான நிலைப்பாடுகள் காணப்பட்டன. ஆனால் விடுதலைப்புலிகள் தொடர்பில் எதிர்மறையான நிலைப்பாடுகள் காணப்பட்டன. இந்த நிலைமைகள், தமிழர்களின் பிரச்சினைகள் மீதான பின்னடைவுகளுக்கு வித்திட்டுள்ளன.

ஷிங்பேன் அமைப்பு இந்த விடயத்தில் சிறந்த மூலோபயத்துடன் செயற்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் கடந்த காலவிடயங்களை பேசிக்கொண்டிருக்காதுரூபவ் அவற்றைக் கடந்து முன்னோக்கி பயணித்துள்ளார்கள்.

கைக்கு வந்த அதிகாரமும் தவறவிடப்பட்ட வாய்ப்பும்

விடுதலையைக் கோரிநின்ற தரப்புக்கள் தமக்கு கிடைக்கின்ற முதல் அதிகாரத்தினை பயன்படுத்தி அரசியல்ரூபவ் பொருளாதார ரீதியாக தமது மாகாணத்தினையோ, பிராந்தியத்தினையோ தயார்ப்படுத்தலுக்கு உட்படுத்தவே முயற்சிகளை மேற்கொள்ளும். ஆனால்ரூபவ் 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவிருந்த 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக அப்போதைய இந்தியப்பிரதமர் ரஜீவ் காந்திக்கு தமிழ் கட்சிகள் கடிதமெழுதிக்கொண்டிருந்தன.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அமையவுள்ள மகாண சபை முறைமையையும் அதன் அதிகாரங்களையும் பயன்படுத்துவதற்கு முன்னதாகவே அதனை எவ்வாறு எதிர்க்க முடியும்.

ஸ்கொட்லாந்துக்கு ஆரம்பத்தில் ஸ்கொட்டிஸ் ஓபிஸ் என்ற வெறுமே சிற்றறையொன்றே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை ஏற்றுக்கொண்டவர்கள் ஜனநாயக ரீதியில் பரந்துபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து இன்று தனிநாடாக பிரிந்து செல்வதற்கான கோரிக்கை எழுமளவிற்கு செயற்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் அவ்வாறானதொரு முறையை முன்னெடுத்திருக்கவில்லை.

உச்சக்கோரிக்கையால் எஞ்சியது எதுமில்லை

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் புதிய அரசியலமைப்பு பற்றிய கவனம் செலுத்தப்பட்டபோது “புதிய அரசியலமைப்பினை கோராதீர்கள். அவ்வாறு புதிய அரசியலமைப்பினை மையப்படுத்திய கோரிக்கையை முன்வைப்பீர்களானால் சிங்கள, இனவாதம் தலைதூக்கும்” என்று தமிழ் தரப்பினரிடத்தில் கூறியிருந்தேன். அதுமட்டுமன்றி அக்கோரிக்கையால் “ஐக்கிய தேசியக் கட்சியும் செல்வாக்கு இழந்து சிதைந்துபோகும்” என்றும் கூறியிருந்தேன். ஆனால் அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. ஆனால் அதுவே தற்போது நடைபெற்றிருக்கின்றது.

மேலும், புதிய அரசியலமைப்பினை உருவாக்குதல் என்ற பெயரில் எழுத்துருவடிவங்களை வழங்குவீர்களாக இருந்தால் 13ஆவது திருத்தச்சட்டமும் அரசியலமைப்பிலிருந்து மறைந்துபோய் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரான நிலைமையே ஏற்படும் என்பதையும் எடுத்துக்கூறி தமிழ்த் தரப்பினருக்கு முன்னெச்சரிக்கை செய்திருந்தேன். ஆனால் அவர்கள் அதனை பொருட்டாக கொண்டிருக்கவில்லை.

தற்போதைய ஜனாதிபதியினதும், அவரைச் சூழ உள்ளவர்களினதும் மனநிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவதானித்தால் 1984இல் ஜி.பார்த்தசாரதி இலங்கைக்கு வருகைதந்து மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற முன்வைக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கு எதிரானதாகவே உள்ளது. அவர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தம்ரூபவ் 13 ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமை ஆகியவற்றுக்கு எதிரான மனநிலையிலேயே உள்ளார்கள்.

இவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு அத்தரப்பினர் எவ்வாறு வந்தார்கள் என்பதை ஆழமாக கவனிக்க வேண்டியுள்ளது. தமிழின அரசியல் தரப்பினர் கிடைத்த அதிகாரங்களை முறையாக பயன்படுத்தாது அதற்கு மேலதிகமாக கோரிக்கை விடுத்து வந்ததன் பின்னணியிலேயே ஆகும்.

தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் என்னவாகும் என்ற கேள்விக்குறியுடனான நிலைமைகளே எழுந்துள்ளன. அவ்வாறான போக்கு 1984இற்கு முன்னர் காணப்பட்ட சூழமைவுகளுக்குச் சென்றுவிட்டது.

இந்தியாவாலும் இயலாது

தற்போதைய சூழலில் அயல் நாடான இந்தியா இந்த விடயங்களில் அதிகளவு தலையீடுகளைச் செய்யும் என்று கருதமுடியாது. காரணம்ரூபவ் தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளவர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் கொள்கை அளவில் ஏகோபித்த போக்கு காணப்படுகின்றனது.

இந்தியா கஷ்மீர் தொடர்பில் அவ்வாறான முடிவெடுக்கையில் எம்மால் ஏன் அதையொத்து சிந்திக்க முடியாது என்று கருதுபவர்களும் ஆட்சியினுள் இல்லாமில்லை. ஆகவே அடுத்த கட்டம் எவ்வாறு செல்லும் என்பதை கூறமுடியாது. நிலைமகள் பாரதூரமடையவும் வாய்ப்புக்கள் இல்லாமலில்லை.

ஆகவே கிடைத்த அதிகாரங்களை தமிழ்த் தரப்பு முதலில் பாதுகாத்திருக்க வேண்டும். இலங்கையில் இந்தியாவின் 70ஆயிரம் போர்வீரர்கள் நிலைகொண்டிருந்தனர். ஆயுதவிடுதலைக்காக செயற்பட்ட பல தமிழ் இயக்கங்கள் காணப்பட்டன. வலுவான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தது. இவை அனைத்துமே இருந்தும் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்ல முடியாது போய்விட்டது. அதுவே அதியுச்சமாக இருகின்றது. ஆகவே 13ஆவது திருத்தச்சட்டத்தினையும், விடுதலைப் புலிகள் தொடர்பிலும் நிலைப்பாட்டினை மாற்றாத வரையில் இந்தியாவின் ஆதரவினை பெறுவது தொடர்ந்தும் கடினமானதாகவே இருக்கும்.

இரண்டில் ஒன்றே சாத்தியம்

ஆனால்,  ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்த நிலையில், இந்தியப் படையினர் இல்லாத நிலையில், ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வினை பெறுவதாக கூறி புதிய அரசியலமைப்பினை மேற்கொள்ள முனைந்ததால், தற்போது சிங்கள அடிப்படைவாத ஆட்சியொன்று உருவாகியுள்ளது.

அவ்வாறான ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தரப்பு “தக்கவைத்துக் கொள்ளும்” அரசியலையே முன்னெடுக்க முடியும். அதாவது 13 ஆவது திருத்தச்சட்டத்தினை பாதுகாப்பதற்கே போராட வேண்டியிருக்கும். தமிழ்த் தரப்பினரால் முன்னோக்கிய நகர்த்தல் அரசியலை தொடரமுடியாது.

விடுதலைப்புலிகள் அமைப்பினை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவுபடுத்திக்கொள்ளுவதால் வெளிநாடுகளின் ஆதரவு குறைவடைந்து கொண்டே செல்லும். உதாரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் ஆட்சி வீழ்ச்சியடைந்து புதிய ஆட்சி ஏற்பட்டாலும் தமிழர்களால் விடுதலைப்புலிகள் அமைப்பினை அரணவணைத்துக்கொண்டும் வலிந்த கோரிக்கைகளையும் ஏகநேரத்தில் முன்வைத்தால் எந்தவிதமான பலனும் கிடைக்கப்போவதில்லை.

அதேபோன்று பொறுப்புக்கூறல் கோரிக்கையையும்ரூபவ் விடுதலைக் கோரிக்கையையும் ஏககாலத்தில் நகர்த்திச் செல்லமுடியாது. ஏற்கனவே நான் கூறிய ஷிங்பேன் அமைப்பு பொறுப்புக்கூறல் விடயத்தினை கையிலெடுக்காது விடுதலைக் கோரிக்கையை மையப்படுத்தி இயலுமானவரையில் முன்னோக்கிச் சென்றிந்தது.

தற்போதைய சூழலில் தமிழினம் சார்ந்த கலந்துரையாடல்கள் உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு மட்டங்களில் இடம்பெற்றுக்கொண்டிருகின்றன. அந்த இனத்தின் அடுத்த சந்ததியினர் உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், விடுதலைப்புலிகளையும், அவர்கள் செயற்பாடுகளையும் அரவணைத்துச் செல்லும் போக்கினால் நன்மதிப்பினை பெற்றுக்கொள்ளும் நிலைக்குச் செல்ல முடியாதிருக்கின்றது.

தமிழ் மக்கள் கல்வி அறிவுடைய புத்திஜீவிகளைக் கொண்ட இனக்குழுமத்தினர். ஆகவே அவர்கள் தற்போது தம்மினத்தின் நிலைமையை சீர்தூக்கி பார்த்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

உடனடியான செயற்பாடுகள்

என்னுடைய வாழ்நாளில் தமிழின அரசியல் இத்தகையதொரு பாரிய பின்னடைவில் இருந்திருக்கவில்லை. தற்போதைய நிலையில் தமிழர் தரப்பினர் தாமதமின்றி சில செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்வுடன் இணைந்து செயற்பட்டதைப்போலல்லாது, சஜித்பிரேமதாஸ,  மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இதர தென்னிலங்கை தரப்பினரின் ஆதரவினைப் பெறக்கூடியவாறான கொள்கை செயற்றிட்டத்தினை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

அடுத்து ஆட்சியில் அமரவுள்ள அரசாங்கம் தமிழர்கள் விடயத்தில் வரையறைகளுடனேயே செயற்படும். அதேநேரம்,  ரணில், மங்கள போன்றவர்களின் நிலைப்பாடுகளைக் கொண்ட அரசாங்கம் மீண்டும் ஆட்சியில் அமரப்போவதுமில்லை.

மேலும், அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் எவ்வளவுதூரம் ஆதரவினை வழங்கினாலும் பாரியதொரு தாக்கம் ஏற்படாது. ஆகவே இந்தியாவின் ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் தமிழ்த் தரப்பு பெற வேண்டும்.

விடுதலைப்புலிகள் இல்லாத தற்போதைய சூழலில் தமிழர் அரசியல் வரலாற்றினை மீட்டுப்பார்க்க வேண்டும். மறைந்த தலைவர்களையும்ரூபவ் செயலிழந்துபோன விடுதலை இயக்கங்களையும், பற்றிச் சிந்திக்க வேண்டும். 1984 இற்கு முன்னர் காணப்பட்டவாறு மீண்டும் இந்தியா உட்பட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனைத்து தரப்பினருடனும் புதிய அனுகுமுறையொன்றை முன்னெடுக்க வேண்டும். அதற்கான புத்திக்கூர்மை தமிழினத்திடம் உள்ளது.