மழை ஓய்ந்தாலும் தூவானம் விட்ட பாடில்லை என்ற நிலையே தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து வருகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய   காணிகள் பல, கடந்த கால போர் நடவடிக்கைகளின் போது கபளீகரம் செய்யப்பட்டன.  பின்னர் மக்கள் நடத்திய போராட்டங்களை தொடர்ந்து, அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு காணிகள் மீள கையளிக்கப்பட்டன. 

எனினும் தங்களுக்கு உரிய பயிர் செய்யக்கூடிய காணிகள் பலவும் தொடர்ந்தும் படையினர் வசமே உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். 

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின், எல்லைக் கிராமமான  சகலாத்து வெளி , எரிஞ்சகாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு, தமது சொந்தக் காணிகளில் பயிர்ச் செய்கையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மக்கள் கடந்த வருடம் இங்கு நெற் செய்கைகையை மேற்கொண்டிருந்தனர். 120 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் சுமார் 490 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த வருடம் விவசாய செய்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

எனினும் தற்போது குறித்த மக்களின் காணிகளை அபகரித்து,  அவர்கள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கபட்டுள்ளது . தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை அபகரித்து பாரிய குடியேற்றத் திட்டம் ஒன்றை அமைக்கும் நோக்கில் வனவள திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் , மகாவலி அதிகார சபை ஆகியன திட்டமிட்டு செயற்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார். 

இதேபோல மக்களின் காணிகளை பெற்று இராணுவம்  பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகவும் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து, மக்களின் காணிகள் குறித்த விவரங்களைக்  கோரி இராணுவத்தினர் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் சிவமோகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்வதுடன் அப்பாவித் தமிழ் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ள முயற்சிக்கக் கூடாது .

இதேவேளை தமிழ்த் தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர், இந்த விஷயத்திலாவது ஒற்றுமையுடன் செயற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்