அமெரிக்காவில் பொலிஸாரினால் கறுப்பின இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு உருவாகிய பெரும் போராட்டத்தினால் முக்கிய நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினேபொலிஸ் நகரில், கடந்த 25 ஆம் திகதி, ஜோர்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை 8 நிமிடங்களுக்கு மேலாக காலால் நசுக்கினார்.

இதில், ஜோர்ஜ் பிளாய்ட், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் அவர் தன்னால் மூச்சு விட முடியவில்லை என்னை கொன்றுவிடாதீர்கள் என பேசும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, பொலிசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

ஜோர்ஜ் பிளாய்ட் பொலிஸாரின் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த ஒரு சம்பவம் மட்டும் காரணமல்ல அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் அங்கு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

மின்னபொலிசில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், நியூயோர்க், துல்சா, லொஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களிலும் பல பொலிஸ் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.

கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் உடைத்து எறியப்பட்டு கண்ணாடிச் சில்லுகள் வீதிகள் முழுதும் சிதறிக்கிடந்தன.

பல ஆண்டுகளாக கருப்பினத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்ற குரல் ஓங்கத் தொடங்கி அமெரிக்காவின் தேசிய விவகாரமாக இது பூதாகாரம் எடுத்துள்ளது.

மக்கள் எதிர்ப்பெனும் பூகம்பம் வெடித்த வெள்ளிக்கிழமை இரவு பலதரப்பட்ட மக்களும் தெருவில் இறங்கி அமைதிவழியில் எதிர்ப்பைக் காட்டினர். முதல் நாள் போராட்டமும் அமைதியாகத்தான் தொடங்கியது, ஆனால் திடீரென வன்முறைகள் தொடங்கின.

வொஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகிலேயே புலனாய்வு அமைப்புக்கு எதிராகவும் அதிபர் ட்ரம்புக்கு எதிராகவும் கடும் கோஷங்கள் எழுந்தன.

பாதுகாப்பு தடுப்புகளையும் அவர்கள் தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றனர். ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பி பத்திரிகையாளர்களிடம் பேசாமலேயே உள்ளே சென்றார்.

பிலடெல்பியாவில் அமைதி போராட்டம் வன்முறையாக மாற 13 பொலிஸார் படுகாயமடைந்தனர்.

4 பொலிஸ் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. பல இடங்களிலும் ஆங்காங்கே தீவைப்பு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஓக்லஹாமாவின் துல்சா கிரீன்வுட் மாவட்டத்தில் உள்ள 1921 கறுப்பினரத்தவர்கள் படுகொலைசெய்யப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் கடுமையாக நடைபெற்றது.

இங்கு 2016 இல் பொலிஸ் அதிகாரியினால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான கிரட்சர் என்பவர் பெயரைக் குறிப்பிட்டு மக்கள் கோஷம் எழுப்பினர்.

லொஸ் ஏஞ்சல்ஸில் ‘கறுப்பினத்தவர்களின் உயிர்கள் முக்கியம்’ என்ற கோஷங்கள் விண்ணைப்பிளந்தன. பொலிஸார் தடியடி மற்றும் ரப்பர் குண்டுபகளை பிரயோகித்தனர். அதே இடத்தில் பொலிஸ் காரின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டது, ஒரு கார் எரிக்கப்பட்டது.

மேலும், நேற்று சனிக்கிழமை இரவு இண்டியானாபொலிஸ் நகரத்தில் நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக இண்டியானாபொலிஸ் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டம் தீ போல் பரவ 16 மாநிலங்களில், லொஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா. மியாமி,சிக்காக்கோ மற்றும் பிலடெல்பியா உள்ளிட்ட 25 அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு அமுலாகியுள்ளது.

16 நகரங்களில் இதுவரை 1400 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் லொஸ் ஏஞ்சல்ஸில் மட்டும் 500 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.