(தி.சோபிதன்)

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு புகுந்து தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரால் அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு 20 வயது யுவதி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலையில் நடந்த குறித்த கடத்தலை வாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட குழுவினரே மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இன்று அதிகாலை வேளை கொடிகாமத்தில் உள்ள வீடொன்றிற்குள் 7 பேர் கொண்ட குழுவினர் புகுந்துள்ளனர்.

வீட்டிற்குள் புகுந்த அவர்கள் தங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், தமது கைகளில் இருந்த கத்தி, வாள் போன்றவற்றால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர் அந்த வீட்டில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் யுவதியை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர். 

இருப்பினும் குறித்த யுவதி கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் அருகில் உள்ள கோவிலில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.