அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி - 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,

உலகில் என்ன நடக்கிறது என்பதை ஜி-7 கூட்டமைப்பு சரியாக பிரதிபலிக்கவில்லை என நான் உணர்கிறேன். அதனால் இந்த உச்சி மாநாட்டை ஒத்திவைக்கிறேன் என்றார்.

ஜி-7 உச்சிமாநாட்டை அடுத்த மாதத்திற்கு பதிலாக செப்டெம்பரிலோ அல்லது அதற்கு பிறகோ நடத்தப்போவதாகவும், சிறப்பு அழைப்பாளர்களின் பட்டியலில் அவுஸ்திரேலியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் இந்தியாவை இணைத்து விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரலில் இருந்து வொஷிங்டனுக்கு திரும்பியபோது ஊடகவியலாளர்களினடம் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப்,

உலகின் மிக முன்னேறிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 அதன் தற்போதைய வடிவத்தில் "மிகவும் பழமையான நாடுகளின் குழு" என்றார்.

"எனவே, ஜி 7 கூட்டமைப்பு, தற்போது உலகில் நடப்பதை சரியாக பிரதிபலிப்பதாக நான் உணரவில்லை. எனவே, தற்போது திட்டமிடப்பட்டிருந்த ஜி 7 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை ஒத்திவைக்கிறேன்" என்று ட்ரம்ப் தெரிவித்தார். 

மொஸ்கோ உலக அளவில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்ட நாடு என இதற்கு முன்னதாக பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ள ட்ரம்ப், ஜி-7 கூட்டமைப்பில் ரஷ்யாவைச் சேர்க்குமாறும் பரிந்துரைத்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி-7 நாடுகள் அமைப்பு உள்ளது. இதில் கனடா பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன. 

ஐரோப்பிய ஒன்றியமும் இந்த கூட்டமைப்பின் கூட்டங்களில் கலந்துகொள்கிறது. மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட நேரடியான ஜி-7 மாநாட்டை, கொரோனா வைரஸின் தாக்கத்தால் ரத்து செய்திருந்த ட்ரம்ப், அண்மையில் மாநாட்டை நடத்த முயன்றார்.

நேரடியான கூட்டம் நடத்தும் யோசனையை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆதரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஆனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல கேள்விகள் எழுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த உச்சிமாநாட்டில் தான் கலந்துகொள்ள முடியாது என்று ஜேர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல் இந்த வார தொடக்கத்திலேயே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.