இன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்  

31 May, 2020 | 09:30 AM
image

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அரச மரியாதைகளுடன் இடம்பெறவுள்ளன.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொட்டகலை சீ.எல். எவ் வளாகத்திலிருந்து அட்டன், டிக்கோயா வழியாக நோர்வூட் தொண்டமான் மைதானத்திற்கு பூதவுடல் எடுத்து செல்லப்பட்டு  4 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதும் ஆயிரக்கணக்கான மக்கள் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்திய வந்தவண்ணமுள்ளனர்.

நேற்றுக்காலை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம் அங்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதலுடல் தாங்கிய பேழையுடன் நான்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

இறம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுக்கலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சி.எல்.எப். வளாகத்துக்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டது. 

கொட்டகலை - சி.எல்.எப். இல் வைக்கப்பட்டுள்ள அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல், இன்று பிற்பகல் 1.30 மணியளவில், ஹட்டன் - டிக்கோயா வழியாக நோர்வூடில் உள்ள சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்குக்கு, இறுதிக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருப்பதால் அனுமதி பெற்றவர்களை மாத்திரம் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்க பாதுகாப்புத் தரப்பு தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக நோர்வூட்க்குச் செல்லவுள்ளார்.

அரசியல் பிரமுகர்கள் பலரும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right