- சிவலிங்கம் சிவகுமாரன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகங்களுடன் என்றுமே முரண்பட்டுக்கொள்பவர் ஊடகங்களை அல்லது ஊடகவியலாளர்களை பொருட்படுத்துவதில்லை என்ற விமர்சனங்கள் இல்லாமலில்லை.

ஆனாலும் எமது நிறுவன பிரசுரங்களுக்காக அதிக முறை அவரை நேர்கண்டவன் என்ற முறையிலும் இறுதியாக எமது பத்திரிகைக்காக அவரை சந்தித்து மலையக மக்களின் நெருக்கடி நிலைமைகள் மற்றும் எதிர்காலம் பற்றி உரையாடியவன் என்ற வகையிலும் ஊடகவியலாளர்களை அவர் எந்தளவுக்கு மதிப்பவர் என்ற அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு வரி பதில்கள்

அமைச்சர் ஆறுமுகனுடன் நேர்காணல் ஒன்றை செய்வதென்பது சவாலுக்குரிய விடயமாக சில ஊடகவியலாளர்கள் நினைப்பதற்குக் காரணம் அவர் பதில் சொல்லும் பாணியாகும். அதாவது நீண்ட கேள்வியாக இருந்தாலும் அவர் ஒரு சொல்லில் பதில் கூறி முடிப்பார். அடுத்தடுத்த கேள்விகளுக்கும் அப்படியே பதில்கள் இருக்கும் பட்சத்தில் சில நேரங்களில் ஐந்து நிமிடங்களுக்குள் நேர்காணல்கள் முடிந்து விடும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. 

இலத்திரனியல் ஊடகங்களின் நேரலை நேர்காணல்கள் மற்றும் அரசியல் கலந்துரையாடல்களை அமைச்சர் ஆறுமுகன் முற்றாக தவிர்த்தே வந்திருக்கிறார். ஏனெனில் நேரடி ஒளிபரப்புகளின் போது அவரை சங்கடப்படுத்தும் கேள்விகள் கேட்கப்பட்டால் அதற்கு அவரின் வெளிப்படுத்தல்கள் எப்படி இருக்கும் என்பதை பலரும் புரிந்தே வைத்திருக்கின்றனர்.

அவரை நேர்காணல் செய்வதற்கு முதலில் ஊடகவியலாளர்கள் மனரீதியாக தம்மை தயார்ப்படுத்துவது முக்கியம். நான் அறிந்த வரை பத்திரிகை உலகில் ஒரு முறை அவரை நேர்கண்டவர்களில் எத்தனைப்பேர் மறுமுறை அவரை நேர் கண்டிருக்கின்றனர் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனெனில் தனக்கு பிடிக்காத முறையில் எரிச்சலூட்டும் வகையில் எவராவது கேள்விகளை எழுப்பியிருந்தால் மறுமுறை அவருக்கு சந்தர்ப்பங்களை அவர் வழங்குவதில்லை.

அதேவேளை அவரை தனியாக நேர்காணல் செய்வது கடினம். அவரைச்சுற்றி குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள். அவர்களின் முன்பே கேள்விகளை கேட்கச்சொல்லுவார். இதனால் கேள்வி கேட்பவர்களுக்கு அது ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும்.

அதேவேளை கையடக்கத் தொலைபேசியில் அவரை தொடர்பு கொள்வதென்பது மிகக்கடினம். அவரது பிரத்தியேக கையடக்கத்தொலைபேசியானது அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமே இருக்கும். அவரது ஊடக இணைப்பாளரை தொடர்பு கொண்டாலும் கூட ஊடக நிறுவனத்தின் பெயரை கேட்டே பதில் கூறுவதா வேண்டாமா என அவர் தீர்மானிப்பார்.

இவை எல்லாமே அமைச்சர் ஆறுமுகனைப் பற்றி அவரிடம் நேர்காணல்களை செய்யாதவர்கள் கூட கூறும் கதைகள். ஆனால் அவரின் மறுபக்கத்தை ஒரு சிலருக்கே புரிந்திருக்கின்றனர் என்பதே உண்மை. அதில் நானும் ஒருவன்.

இருப்பினும் சில சிக்கலான அதேவேளை அவருக்கு சினத்தை ஏற்படுத்தாத கேள்விகளை எவ்வாறு கேட்க வேண்டும் என்ற விடயமும் அவரின் மனநிலை அறிந்து கேள்விகளை சாமர்த்தியமாக கேட்டு அதற்கு பதில் பெறும் திண்ணமும் சில சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு இருக்கின்றன. 

தன்னை சந்திக்க வரும் ஊடகவியலாளர்களிடம் அவர் அடிக்கடி கூறும் விடயம் “என்னிடம் கேட்பது போல் ஏன் மற்றவர்களிடம் நீங்கள் கேட்பதில்லை” என்பதாகும். அதை விட “ நான் கூறுவதை எனது பாஷையில் அப்படியே போட வேண்டும் அதற்கு சம்மதம் என்றால் அமருங்கள்” என்பார். இளம் ஊடகவியலாளர்கள் சிலர் இதை ஒரு உத்தரவாக நினைப்பதுண்டு, ஆனால் அவரிடம் நெருங்கிப் பழகிய ஊடகவியலாளர்கள் பலருக்கு அவர் நகைச்சுவையாகவே இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது நன்கு புரியும்.

எனினும் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களுக்குப்பிறகு அவர் ஊடகவியலாளர்களிடம் சற்று மென்மை போக்கை கடைப்பிடித்து வந்தார் என்று கூறலாம். 

எனக்கு எதற்கு ஊடகங்கள்?

கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களுக்குப் பிறகு அமைச்சராக பொறுப்பேற்றார் ஆறுமுகன். இவ்வருடம் ஜனவரி மாதம் அவரை சந்திப்பதற்கு தொடர்பு கொண்டிருந்தேன். “நான் அமைச்சராக பதவியேற்ற உடனேயே எங்கே அந்த ஆயிரம் ரூபா என்று தான் ஊடகக்காரர்களாகிய நீங்கள் எல்லாம் கேள்வி எழுப்பியிருந்தீர்கள் அதே கேள்வியைத் தானே கேட்கப்போகின்றீர்கள் சரி வாங்களேன் பார்ப்போம் என்று பதில் கூற சந்தர்ப்பம் தராது தொலைபேசியை துண்டித்தார்.

அவரை சந்திக்க சென்றிருந்தேன். அவரோடு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். நான் எப்போதும் நேர்காணல்களில் பாராம்பரிய முறைகளை பின்பற்றுவதில்லை. உரையாடல் மூலமான நேர்காணலாக அது இருக்கும். அதேவேளை ஒலிப்பதிவு சாதனங்களையும் பயன்படுத்துவதில்லை. இதன் காரணமாக நேர்காணல் செய்பவரிடம் இயல்பாக பேச முடியும். அடுத்த கேள்வி என்ன என்று யோசிக்க வேண்டிய அவசியமில்லை. மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருந்தார். வரவேற்றார். “ அந்த ஆயிரம் ரூபா கேள்வியவே நினைச்சிட்டு வந்திங்க போல என்று ஆரம்பித்தவர் அதை எனது மக்களுக்கு எப்படியும் பெற்றுக்கொடுப்பேன் என்று கூறி அந்த கேள்வியை கேட்க முடியாது செய்தார்.

உரையாடலுக்கு இடையே அவர் மனநிலை அறிந்து ஊடகங்களுடன் ஏன் உங்கள் உறவு முறை அப்படியுள்ளது ? ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகின்றதே என்று மெதுவாக கேட்டேன். 

இல்லையே இதோ என் அருகில் அமர்ந்து தானே கேட்கின்றீர்கள் என்று சிரித்தவாறு கூறியவர் அழுத்தம் திருத்தமாக பின்வருமாறு கூறினார். “இலங்கையிலேயே ஊடகங்களை தேடிப்போகாமால் அரசியல் செய்யும் ஒரே அரசியல்வாதி நான் தான். நான் என்ன செய்கிறேன் என்பது எனது மக்களுக்கு தெரிந்தால் புரிந்தால் போதும் வேறு எவருக்கும் படம் போட்டுக் காட்ட வேண்டிய தேவை இல்லை தானே? அப்படி இருக்கும் போது ஏன் வீண் சிரமம்? “ என்று கேட்டார்.

பின்பு தொடர்ந்தார் “எனக்கு ஊடகங்கள் மீதோ ஊடகவியலாளர்கள் மீதோ எந்த கோபமும் இல்லை ஆனால் அவர்கள் சரியானதை எழுத வேண்டும். அவர் இதை செய்தார் இதை ஏன் நீங்கள் செய்யவில்லை போன்ற கேள்விகளைத் தான் கேட்கிறார்கள் ஆனால் இது நாள் வரை என்ன செய்தோம் என்பதை எவராவது திரும்பிப் பார்ப்பதில்லை. அதை படித்து விட்டு வந்து என்னிடம் கேட்கலாம், அதேவேளை யாருக்காகவும் எனது ஸ்டைலை நான் ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? என்றார். ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச இருந்த வேளை தனது கோரிக்கை ஒன்றை அவர் சரியாக செவிமடுக்கவில்லை என்பதற்காக அவ்விடத்திலிருந்து உடனடியாக வெளியேறியதையும் பின்பு தொலைபேசியில் ஜனாதிபதி அவரிடம் அதற்கு வருத்தம் தெரிவித்ததையும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.

“ஜனாதிபதியிடமே நான் அப்படித்தான் நடப்பேன் அதான் எனது குணம் பின்பு என்ன? “ என கேட்டதை மறக்க முடியாது.

உபசரிக்கும் உயர்ந்த பண்பு

ஊடகவியலாளர்களுடன் முரண்படும் ஒருவர் என ஆறுமுகனை பலரும் கூறினாலும் யார் வந்தாலும் அவர்களை உபசரிக்கும் பண்பில் அவரை மிஞ்ச எவருமில்லை. கேள்விகளுக்கு பதில் தராவிட்டாலும் அவர்களை உபசரித்து அனுப்புவார். அதில் தானும் கலந்து கொள்வார். அவர் உணவருந்தும் வேளை ஊடகவியலாளர்கள் எவராவது சென்று விட்டால் “வாருங்கள் உணவருந்திக்கொண்டே பேசுவோம் என்பார். சிலர் நாகரிகமாக அதை மறுத்து விட்டாலும் “சரி உங்கள் வேலையை முடியுங்கள் நான் பிறகு சாப்பிடுகிறேன்” என்பார்.

கடந்த மாதம் நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச நிருபர்கள் அனைவருக்கும் உலர் உணவு பொதிகளை அவர் அனுப்பி வைத்திருந்தமை பலருக்கும் தெரியாது. ஒவ்வொருவருடைய வீட்டிற்கும் நேரடியாகச் சென்று அப்பொருட்களை ஒப்படைத்து விட்டு வரவேண்டும் என்பது அவரது கண்டிப்பான உத்தரவாக இருந்தது. இறுதியாக அவரை கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி கொட்டகலை C.L.F. வளாகத்தில் சந்தித்தேன். வீரகேசரி வாரளியீட்டுக்காக அவரை நேர்கண்டேன். கொரோனா தொற்று நெருக்கடி மற்றும் வேலைப்பளுவால் அவர் களைப்படைந்திருந்தமை புரிந்தது.

எனினும் உரையாடல் திருப்திகரமாகவே இருந்தது. ஓரிடத்தில் அவர் கூறிய விடயங்கள் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. இங்கே பாருங்கள் எல்லோரும் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை பற்றியே கேட்கிறார்கள். தற்போது நாம் எத்தகைய நெருக்கடியில் இருக்கிறோம்? நாடு மட்டுமல்ல உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது நான் ஜனாதிபதியை சந்திக்கும் போதெல்லாம் ஆயிரம் ரூபாவைப் பற்றி கேட்டுக்கொண்டிருப்பது அழகா? அதை எப்போது பெற்றுத்தர வேண்டும் என்பது எனக்குத்தெரியும். அரசாங்கத்துக்கும் தெரியும்.

மக்களின் உயிர் பாதுகாப்புக்கு முன்னால் எனக்கு இப்போது வேறு எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை. மாவட்டத்தில் சகல மட்டங்களிலும் நாம் முன்னெடுக்கும் சுகாதார வேலைத்திட்டம் காரணமாக இது வரை எமது பிரதேசத்தில் ஒரு கொரோனா தொற்று நோயாளி கூட அடையாளம் காணப்படவில்லை. அது குறித்து யாராவது பேசுகிறார்களா என்று கேள்வி எழுப்பினார். அது தான் அவர் ஒரு தேசிய பத்திரிகைக்கு இறுதியாக வழங்கிய நேர்காணலாக அமைந்தது.

அரசியல் செயற்பாடுகளிலும் , தீர்மானங்கள் எடுப்பதிலும் ஆரம்பத்திலிருந்தே அதிரடி அரசியல்வாதியாக தனது துணிச்சலான சுபாவத்தை மாற்றிக்கொள்ளாதவராக இருந்த அவர் அண்மைக்காலங்களில் மிகவம் பக்குவப்பட்டவராக சில விடயங்களை முன்னெடுத்திருந்தார்.

அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் இப்போது அது குறித்து அதிகமாகவே கதைக்கின்றனர். அரசியல் ரீதியாக அவரை எதிர்ப்பவர்கள் கூட சில நேரங்களில் அவரது அதிரடி செயற்பாடுகளைப் பற்றி பேசாமல் இருக்கமாட்டர்.

இனி ஆறுமுகன் தொண்டமான் பேச மாட்டார் . ஆனால் தான் இறந்தாலும் தன்னைப் பற்றி பேசிக்கொண்டேயிருக்க வேண்டிய அளவுக்கு தனது அரசியல் செயற்பாடுகளை பதிவு செய்து விட்டிருக்கிறார் ஆறுமுகன் தொண்டமான். அவரது ஆத்மா சாந்தியடைவதாக.