“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இவ் வருடம் இன்றுவரையான 5 மாதங்களில் 2 ஆயிரத்து 195 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது” என்று யாழ் போதனா வைத்தியசாலை பொது மருத்துவ நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்தார்.

தற்போதைய டெங்கு தாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மருத்துவ நிபுணர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்ககூடிய சாத்திய கூறுகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணப்படுகின்றது. எனவே டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். யாழ் மாவட்டச் செயலாளர், அடுத்த வாரத்தை டெங்கு விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளார்.

டெங்கு நோய் கடந்த 20 வருடமாக இலங்கையின் பல பகுதிகளிலும் தாக்கி வரும் நோய் குறிப்பாக 15 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களையும் சிறுவர்களையும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தும். இது நுளம்பினால் பரப்பப்படும் ஒரு நோயாகும்.

இந்த நோயினால் கடந்த வருடம் இலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். அதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த வருடம் எட்டாயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். 

அவர்களுக்குரிய சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டது. எனினும் இந்த வருடம் மே மாதம் வரை 2 ஆயிரத்து 195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஏனெனில் அந்த காலப்பகுதியில் மழைவீழ்ச்சி அதிகம் காணப்பட்டமையினால் குறித்த தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

அதேபோல் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கூடுதலாக சங்கானை, உரும்பிராய், நீர்வேலி மற்றும் சுண்டுக்குளி போன்ற இடங்களில் இருந்து நோயாளர்கள் கூடுதலாக வருவதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

எனவே இந்த நோய் நுளம்பினால் பரவுகின்ற ஒரு நோயாகும். சிரட்டை, யோக்கட் கப், ஐஸ்கிரீம் கப், தகரப்பேணிகள் இப்படியானவற்றை நாங்கள் அவதானம் இல்லாமல் கண்ட இடங்களில் எறியும் போது, மழை நீர் தேங்கி நின்று அந்த நீரில் நுளம்புகள் முட்டையிடும்.

 அந்த முட்டை பொரித்து 5 தொடக்கம் 10 நாட்களுக்குள் அது நுளம்பாக மாற்றமடைந்து டெங்கு வைரஸினை காவிக்கொண்டு மக்களினை கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகின்றது.

இந்த நுளம்புகள் குறிப்பாக மாலை வேளைகளில்தான் அதிகமாக மக்களை தேடிச்சென்று கடிக்கின்றது. எனவே மக்கள் வீடுகளில் இருக்கும் போது மாலை நேரங்களில் தமது அறையின் கதவுகளை சாத்திவிட்டு இருப்பது மிகவும் சிறந்தது.

இல்லாவிட்டால் கொல்லி மருந்துகள் மற்றும் நுளம்புத்திரி போன்றவற்றினை கொளுத்தி வீடுகளில் வைப்பதன் மூலம் குறித்த நுளம்புத் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் – என்றார்.