கொரோன வைரஸ் என்ற கொள்ளை நோய்ப் பரவலை இலங்கை அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி உள்ளது. அதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த நோய்த்தொற்று வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களின் மத்தியிலும், கடற்படையினர் மத்தியிலுமே இப்போது கண்டறியப்படுகின்றது.
வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றார்கள். அதேபோன்று கடற்படையினரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இதனால் அவர்கள் மத்தியில் காணப்படுகின்ற நோய்த்தொற்று சமூக மட்டத்திற்குப் பரவாமல் தடுக்கப்பட்டிருக்கின்றது என்று ஆறுதலடையக் கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் கொரோனா வைரஸ் பரவல் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றது என்ற முடிவுக்கு வர முடியாது.
கொரோனாவின் உலக ஒழுங்கின்படி கொரோனாவுடன் வாழ வேண்டிய நிலைமைக்கே இலங்கை மக்களும் ஆளாகி இருக்கின்றார்கள். ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். ஏனெனில் கொரோன வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்குரிய தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோன்று அந்த நோயைக் குணப்படுத்துவதற்குரிய மருந்தும் இன்னும் கண்டறியப்படவில்லை. கொரோனா வைரஸும் தானாவே அழிந்து போகவில்லை. அதற்கான அறிகுறிகளையும் காணவில்லை. ஆகவே, கொரோனா வைரஸுடன்தான் உலக மக்கள் வாழ வேண்டி இருக்கின்றது. இலங்கையர்களும் அதற்கு விதிவிலக்கில்லை.
கொரோன வைரஸின் அச்சுறுத்தலே தேர்தலுக்கு இடைஞ்சலாக உள்ளது. இந்த நோயிடர் சூழலில் தேர்தலை நடத்த முடியது என்பதே தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட பலதரப்பினரதும் நிலைப்பாடு. அதனைக் காரணம் காட்டி பொதுத் தேர்தலை நீண்ட காலத்திற்கு நடத்தாமல் ஒத்தி வைக்க முடியாது. ஒதுக்கி வைத்திருக்கவும் முடியாது.
ஆகவே கொரோனா வைரஸ் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன பொதுத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கின்றது. இதனை எவரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுக்க முடியாது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகின்றது. அதனையடுத்து புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதி. இது மீறப்பட முடியாதது. அது அரசியலமைப்புடன் சம்பந்தப்பட்டது என்பதே இதற்கான காரணம்.
தேர்தல் அவசியம்
சட்டத்திற்கமைய ஒழுக வேண்டும் என்ற நியதிக்கு அப்பால் நாடாளுமன்றம் இல்லாமல் நாட்டில் ஆட்சி செய்ய முடியாது. அரசாங்கமும் செயற்பட முடியாது. நிதி விடயங்களைக் கையாள்வதற்கு நாடாளுமன்றத்தின் செயற்பாடு அவசியம். நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதற்கான அங்கீகாரம் நாடாளுமன்றத்திடம் இருந்தே பெறப்பட வேண்டும்.
நிதி விடயங்கள் மட்டுமல்லாமல் நாளாந்த அரச நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் நாடாளுமன்றம் செயற்பட வேண்டியது அவசியம். அதுவோர் அத்தியாவசியத் தேவை. தவிர்க்க முடியாதது அரசியல் ரீதியாகவும்சரி, ஆட்சி நிர்வாக ரீதியிலும்சரி அது தவிர்க்கப்பட முடியாதது.
எனவே கொரோனாவுடன்தான் வாழ வேண்டும் என்ற வாழ்வியல் யதார்த்தத்தில் கொரோனாவுடன் தேர்தலை நடத்த வேண்டும். நடத்தியே ஆக வேண்டும் என்ற யதார்த்தமும் நிதர்சனமாகின்றது.
ஆனால் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் எவ்வாறு பொதுத் தேர்தலை நடத்துவது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு. தேர்தல் திணைக்களத்தினது மட்டுமல்லாமல் அரசாங்கத்தினதும், எதிர்க்கட்சிகளினதும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும். நாட்டில் ஜனநாயகம் நிலவ வேண்டும் என விரும்புகின்ற செயற்பாட்டாளர்கள் மட்டுமல்லாமல் நாட்டு மக்களுக்கும் இந்தப் பொறுப்பு உண்டு.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதில் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டு தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் தொடர்பாகவும், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்குகளில் நீதிமன்றம் அளிக்கின்ற தீர்ப்பு அல்லது இந்த விடயங்கள் தொடர்பிலான நீதிமன்றத்தின் சட்டவிளக்கம் அல்லது பொருள்கோடல் இதற்கு உதவியாக அமையக் கூடும். அதனைப் பயன்படுத்தி தேசிய அளவிலான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும்.
புறக் காரணங்கள்
தேசிய அளவிலான நிலைமை இவ்வாறிருக்க, பொதுத் தேர்தலுக்குத் தமிழ்த்தரப்பு தயாராக வேண்டிய தேவையும் எழுந்திருக்கின்றது. அரசியல் கட்சிகளும், அவைகளைச் சார்ந்து தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுமே தேர்தலுக்குத் தயாராவதே வழமையாகும். ஆனால் கொரோனா நோயிடர் சூழலில் அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்கள் மற்றும் அவற்றின் வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், தமிழ் மக்களையும் உள்ளடக்கிய தமிழ்த்தரப்பு இந்தப் பொதுத் தேர்தலுக்குத் தங்களைத் தயார்ப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்கான அரசியல் நிர்ப்பந்தம் உருவாகி இருப்பதே இதற்கான காரணம்.
தமிழ் மக்களுக்குப் பல்வேறு வழிகளில் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. அந்த முக்கியத்துவத்தினால் இந்தத் தேர்தலுக்கு முன்கூட்டியே அவர்கள் தங்களைத் தயார்ப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
சிங்கள பௌத்த மக்களின் ஒன்றிணைவின் மூலம் தனிச்சிங்களத் தேசியத்தைப் பிரதிபலிக்கின்ற ஒரு ஜனாதிபதியின் கீழ் இந்தத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. நாட்டின் வரலாற்றில் இத்தகைய சூழலில் இடம்பெறப் போகின்ற முதலாவது தேர்தலாக இது அமைகின்றது.
ஒரு நெருக்கடியான சூழலில் நாடாளுமன்றமே அவசியமில்லை. எதிர்க்கட்சிகளும் - அரசாங்கத்திற்கு அவைகள் முழு ஒத்துழைப்பை வழங்க முன்வந்தாலும்கூட, அவசியமில்லை. நிறைவேற்று அதிகாரம் என்ற அதிகார பலத்தைக் கொண்டு இராணுவத்தின் துணையுடன் நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியும். திறமையாக அதனைக் கையாள முடியும் என்பதை நிரூபித்துள்ள ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட முற்றிலும் இனவாதப் போக்கைக் கொண்ட ஒரு ஜனாதிபதியின் கீழ் இந்தத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இது இரண்டாவது காரணமாக அமைகின்றது.
இந்தப் புதிய நிறைவேற்றதிகார அரசியல் தலைமை என்பது, சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ்ப்பேசும் மக்களை முக்கியத்துவம் மிக்கவர்களாகக் கருதாத ஓர் அரசியல் போக்கைக் கொண்டிருக்கின்றது.
இன்னும் விரிவாகக் கூறுவதாயின், சிறுபான்மை இன மக்களை தொடர்ச்சியாக இராணுவத்தின் கண்காணிப்பில் - இராணுவச் சூழல் ஒன்றில் வைத்திருக்க வேண்டும் என்ற இராணுவமயப் போக்கைக் கொண்ட ஓர் அரச தலைவரின் கீழ் நடைபெறுகின்ற தேர்தல் என்பது மூன்றாவது விடயமாகும்.
அதிகாரத்துக்கு வந்த உடனேயே பெரும்பான்மை பலமில்லாத நாடாளுமன்றத்தைக் கலைத்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்கிவிட வேண்டும் என்பதற்காகத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மேற்கொண்டிருந்தார்.
கொரோனா நோயிடருக்கு மத்தியிலும் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்துவிட வேண்டும் என்பதற்காக அவர் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இத்தகைய சூழலில் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றார்கள் என்பது மற்றுமொரு முக்கிய விடயமாகும்.
அக நிலைமைகள்
ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கூட்டு அரசாங்க காலத்து அரசியல் நிலைமைகள் புதிய ஜனாதிபதியின் தலைமையிலான ஆட்சியில் தலைகீழாக மாறியிருக்கின்றது. சிறுபான்மை இன மக்களுக்கும் முக்கியத்துவமளித்துச் செயற்பட்ட ஓர் அரசியல் போக்கு இப்போது இல்லை.
அந்த கூட்டு அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் அளவற்ற ஆதரவை அந்த மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கியிருந்த போதிலும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. தீர்வு காண்பதற்கான வழிகள் திறக்கப்படவில்லை என்பது வேறு விடயம். ஆனாலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். அதற்காக முயற்சி செய்யலாம் என்ற ஒரு நப்பாசை இருந்தது. அந்த நிலைமை இப்போது இல்லை.
கடந்த ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்திற்கு பேராதரவு வழங்கிய போதிலும் தமிழ் மக்களுடைய எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. நீதி கிடைக்கவில்லை. நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் யுத்தகாலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிலைமாறுகால நீதியும் கிடைக்கவில்லை. பரிகாரங்களும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதுடன் வஞ்சிக்கப்பட்டுவிட்டோமே என்ற உணர்வே தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.
இந்த ஏமாற்றம் தமிழ் மக்களுக்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீதிருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டது. கூட்டமைப்புக்குப் பதிலாக மாற்றுத் தலைமையொன்றை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் தேவையை முதன்மைப்படுத்தியது. அதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளின்போது, தமிழ் மக்கள் மத்தியில் இருந்து புதிய புதிய அரசியல் கட்சிகளும் அரசியல் அமைப்புக்களும் தோன்றியிருக்கின்றன. தமிழ் மக்களை ஓரணியில் கொண்ட ஆளுமை மிக்கதோர் அரசியல் தலைமை உருவாக வேண்டும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இதனால் சிதைந்து சின்னாபின்னமாகி உள்ளது.
ஆளுக்கோர் அமைப்பு. வீட்டுக்கோர் கட்சி என்ற ரீதியில் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பிளவுபடவும், பலவீனமாக்குவதற்குமே இந்த நிலைமைகள் வழிவகுத்திருக்கின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் தமிழ் மக்களுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் உணர்ந்து அதற்கேற்ற வகையில் தங்களுக்குள் விட்டுக் கொடுப்புடன் நடப்பதற்குத் தாயராக இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் தேசிய அரசியலில் உருவாகியுள்ள வலுவான இனவாத அரசியல் போக்கைக் கவனத்திற் கொண்டு, சகிப்புத் தன்மையுடன் ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து பலமானதோர் அரசியல் அமைப்பை – அரசியல் அணியை உருவாக்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை. தேசிய ரீதியில் எழுந்துள்ள உடனடி மற்றும் எதிர்;கால சவால்களையும் கடினமான அரசியல் சூழலுக்கான நிலைமைகளையும் அவர்கள் உய்த்துணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
கூட்டமைப்புக்கு மாறாக மாற்று அணியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட முடியாத நிலையில் பிரிந்து செயற்படுகின்ற ஒரு நிலைமையே உருவாகி இருந்தது. இழுபறிகளுக்கு மத்தியில் ஒன்றுபட்டிருந்தாலும்கூட, அவர்களுடைய ஒன்றிணைவு எதிர்பார்த்த அளவில் ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்திருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் சரி, மாற்று அணியினரும் சரி இந்த இக்கட்டான கொரோனா நோயிடர் மற்றும் அரசியல் சூழலில் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவில்லை. மொத்தத்தில் மக்களை அவர்கள் அணுகவில்லை என்றே கூற வேண்டும். தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் சக்திகளிடமிருந்து மக்கள் தூர விலகி இருக்கின்ற ஒரு நிலைமையே தொடர்கின்றது.
ஏன் இந்த நிலைமை?
தமிழ் மக்கள் மீதான அழுத்தங்கள், அடக்குமுறைகள் என்பன முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்திருக்கின்றது. இவ்வாறு கூறத்தக்க வகையிலேயே இந்த நோயிடர் காலத்தில் வடக்கு கிழக்கு நிலைமைகள் காணப்படுகின்றன.
ஜனாதிபதி தேர்தலுடன் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், தமிழ்ப்பிரதேசங்களில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் நோயிடர் சூழல் இதற்கு வாய்ப்பான ஒரு நிலைமையை அரசுக்கு வழங்கி இருக்கின்றது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முழு நாடும் முடக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் நாட்டின் தென்பகுதிகளை விட, வடக்கிலும் கிழக்கிலும் - குறிப்பாக வடக்கில் இராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் வீதிச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வீதிகள் அனைத்திலும் பல வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் பதியப்படுகின்றார்கள். சோதனைக்கு உட்படுத்தப்படுகிpன்றார்கள் என்று மக்கள் முறையிட்டுள்ளார்கள்.
வடக்கில் அதுவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் ஏன் இந்த இராணுவ கெடுபிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன? என்று அந்த மாவட்டத்து மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.
இந்த வீதிச் சோதனைகளுக்கு உள்ளாகிய பலரும், விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் சண்டைகள் இடம்பெற்ற காலத்தைப் போலவே, இப்போதைய இந்த வீதிச் சோதனைச்சாவடிகளும், அவற்றில் படையினரின் பிரசன்னமும் அமைந்திருக்கின்றது என அவர்கள் கூறுகின்றனர். மீண்டும் ஒரு யுத்த சூழல் உருவாகிவிட்டதோ என்று எண்ணி அச்சமடையும் அளவுக்கு இந்த வீதிச் சோதனைச்சாவடி காட்சிகளும், வீதிச் சோதனை நிலைமைகளும் அமைந்திருக்கின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தென்பகுதிகளைப் போன்று வடக்கில் கொரோனா வைரஸ் நோயிடர் நிலைமை மோசமடையவில்லை. நோய் அச்சுறுத்தலும் இல்லை. நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கும், இடைவெளி பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளுக்கும் இங்குள்ள மக்கள் ஒப்பீட்டளவில் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள்.
இந்த நிலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தருணத்திலும், அதன் பின்னரான நிலைமைகளிலும் பாதுகாப்புப் படையினரின் நெருக்குதல்களையும் கண்காணிப்பு நடவடிக்கைளயும் அரசாங்கம், இங்கு சட்டரீதியாக அதிகரித்திருப்பது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தி இருக்கின்றது. அத்துடன் தமது எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கலைப்படவும் தூண்டியிருக்கின்றது.
மக்களின் பொறுப்பு
பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள இந்த நிலைமையில் தங்களுக்கான அரசியல் தலைமை குறித்து அவர்கள் அமைதியடையவோ அல்லது மன ஆறுதல் கொள்ளவோ முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அதேவேளை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏற்கனவே தென்னிலங்கையைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும், பல்வேறு தனியாட்களும், அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும்கூட வடக்கில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் சூடு பிடிக்கும்போது கவர்ச்சிகரமான பிரசாரங்களின் மூலம் தமிழ் மக்களைத் தங்கள் வசமாக்க அவர்கள் முயற்சிப்பார்கள். எப்படியாவது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகத் தேர்தல்கால அன்பளிப்பு மற்றும் வாக்குறுதி சார்ந்த பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் அவர்கள் நிச்சயமாக ஈடுபடுவார்கள்.
ஏற்கனவே தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளினாலும், ஒன்றிணைய முடியாத நிலையில் அவைகள் ஒருவரையொருவர் சாடுவதனாலும் குழம்பிப் போயுள்ள மக்களை தென்னிலங்கையின் இந்த கவர்ச்சிகரமான பிரசாரங்கள் கவர்ந்திழுக்கக் கூடும். அந்தப் பிரசாரங்களின் ஊடாக அவர்கள் ஏமாற்றப்படவும்கூடும். இந்த நிலைமைகள் குறித்து தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
ஆகவே, தேர்தலை நடத்தலாமா இல்லையா என்பது பற்றி உறுதியான ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, தேர்தலுக்கான திகதி இன்னும் குறிப்பிடப்படாதிருந்தாலும், தேர்தல் நடைபெறும். நடத்தியே ஆக வேண்டும் என்ற யதார்த்தத்தை தமிழ் மக்கள் நன்கு பரிந்து கொள்ள வேண்டும். உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆகவே முன்கூட்டியே இந்தத் தேர்தலில் என்ன செய்வது, யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பது தொடர்பில் இப்போதே அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்தத் தேர்தல் வழமையான தேர்தல் நடவடிக்கைகளைக் கொண்டிருக்க மாட்டாது. பல புதிய ஏற்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இடைவெளி பேண வேண்டி இருக்கும். கைகளைக் கழுவிய பின்னரே வாக்குச் சாவடிகளுக்குள் செல்ல வேண்டிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டி இருக்கும். இதையும்விட மேலும் புதிய நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டிய நிலைமையும் உருவாகலாம். மொத்தத்தில் வழமையைப் போன்று போன உடனே வாக்களித்துவிட்டுத் திரும்பக்கூடியதாக இல்லாமல், வாக்களிப்பது என்பது கால தாமதம் மிக்க ஒரு செயற்பாடாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகைய நிலையில் வாக்களிப்பது என்பது சிரமமான காரியம் என்ற காரணத்திற்காக வாக்களிக்கச் செல்லாமல் மக்கள் இருந்துவிடக் கூடாது. எத்தகைய கடினமான செயன்முறையாக இருந்தாலும், எத்தகைய கடினமான நிலைமைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குரிமையைப் பயனப்டுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயற்படவும் வேண்டும்.
கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் சின்னங்கள் உள்ள இடங்களை ஆய்வு செய்து பாராமரிப்பதற்காகப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி குழுவின் தலைவராக முன்னாள் இராணுவ அதிகாரியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமாகிய கமால் குணரட்ன நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த மாகாணத்தில் பௌத்த மதத் தொல்லியல் சின்னங்களைக் கொண்ட பல இடங்கள் இருப்பதாகவும் அவற்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து பராமரிப்பதன் மூலம் அந்தப் பிரதேசத்தில் பௌத்த மதத்திற்கு மீண்டும் உயிரூட்டுவதே இந்த செயலணியின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் முல்லைத்தீவு மாவட்டம் கொரோனா நோயிடர் காலத்தைப் பயன்படுத்தி இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அத்துடன் நந்திக்கடலைச் சூழ்ந்த பிரதேசத்தை இரரணுவத் தேவைக்காகக் கைப்பற்றும் நோக்கில் காணிகளைக் கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கூறியுள்ளார்.
இதுபோன்ற தமிழ் மக்கள் மீது நெருக்குதல்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள சூழலில் தமிழ் மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளாக இந்தத் தேர்தலில் யாரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். அதற்கான ஆயத்தத்தில் அவர்கள் இப்போதே படிப்படியாக ஈடுபட வேண்டும். அது குறித்து இப்போதே சிந்திக்கத் தொடங்கவும் வேண்டும்.
இது காலத்தின் அவசியம். கட்டாயத் தேவையும்கூட.
பி.மாணிக்கவாசகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM