- சதீஷ் கிருஷ்ணபிள்ளை

கொவிட்-19 தொற்று ஏறுமுகமாக இருக்கிறது. மரணங்களும் அதிகரித்துசெல்கின்றன. ஒருபுறம் தீவிர பொருளாதார தாக்கங்கள். மறுபுறத்தில், இயல்புநிலை பற்றிய புதிய யதார்த்தங்கள். கொரோனா-வைரஸுடன் வாழப்பழகிக் கொள்வதே புதியயதார்த்தம். நாம் முன்னர் இயல்புநிலை என்றுஎ தனைக் கருதினோமோ, அதுபுதிய இயல்புநிலையாக இருக்கப் போவதில்லை என்ற உபதேசங்களைக் கேட்கிறோம்.

இந்த நெருக்கடிக்குத்  தீர்வேகிடையாதா, இதில் இருந்து வெளியேற முடியாதா என்ற கேள்விகள். இரண்டுக்கும் பதிலாக அமையக் கூடியது,கொவிட்-19 ஆட்கொல்லிக்கு தடுப்பு மருந்தொன்றைக் கண்டுபிடிப்பதுதானென கூறலாம். 

எனினும், தடுப்பு மருந்து சிம்மசொப்பனமாக இருக்கிறது. அதனைக் கண்டுபிடித்து, முறையாக பரிசோதித்து, மருத்துவ நடைமுறைகளுக்கு அமைய அங்கீகாரம் பெற்று, போதியளவு உற்பத்திசெய்து, தேவை அடிப்படையில் விற்பனை செய்வது தொடர்பான படிமுறைகளில் பல சிக்கல்கள். இவை காரணமாக, குறுகிய காலத்திற்குள் தடுப்பு மருந்தை கொண்டு வருவது சாத்தியமானது அல்ல என்ற யதார்த்தத்தையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

தடுப்பு மருந்தை உருவாக்குதல் என்பது கடினமான இலக்கு. இந்த இலக்கை நோக்கிய பயணங்களை இரண்டாகப் பிரிக்கலாம். முதல் பயணம், சகலநாடுகளும் ஒன்று கூடிய சர்வதேச ஒத்துழைப்புடன், உலகப் பொதுநலன் கருதிய பொதுவான தடுப்பு மருந்தை உருவாக்குவதாகும். மற்றைய பயணம், நான் தான் முதலில் உருவாக்க வேண்டும் என தனித்தனிநாடுகள் இடும் போட்டியாகும். 

தடுப்புமருந்து தேசியம்!

உலக பொதுமக்கள் முதல் பயணத்தைவிரும்புவார்கள். எனினும், சாத்தியமாகி இருப்பதென்னவோ இரண்டாவது பயணம் தான். நாடுகளின் சுயநலப் போட்டி எல்லாவிடயங்களிலும் இருப்பதைப் போன்று, இதிலும் அமெரிக்காவும், சீனாவும் போட்டிபோடுகின்றன. இதில் இரு நாடுகளின் தலைவர்களது கௌரவமும் இருக்கிறது. எதிர்கால வல்லாதிக்க அரசியல் வியூகத்தின் சூட்சுமங்களும் கலந்திருக்கின்றன.

வூஹானில் கொரனா-வைரஸ் பரவத் தொடங்கிய சமயத்தில், சீன ஜனாதிபதிமுறையாகக் கட்டுப்படுத்தி இருக்கலாம். அவ்வாறு நடந்திருந்தால், இந்தளவிற்கு பிரச்சனை தீவிரம் பெற்றிருக்காது என்ற விமர்சனத்தை சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் எதிர்கொள்கிறார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில்,டொனல்ட் ட்ரம்ப்பின் விட்டேத்தியானபோக்கினால் தான், இவ்வளவுபேர் ஆட்கொல்லி நோய்க்குப் பலியானார்கள் என்றபரவலானவிமர்சனம் உள்ளது.

எனவே,எவ்வளவு சீக்கிரமாக வைரஸ் கண்டுபிடிக்கப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரமாக நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்ளமுடியுமென இரு தலைவர்களும் கருதுகிறார்கள்.

இதற்காக இரு தலைவர்களும் மாறுபட்ட தந்திரோபாயங்களை அனுசரிக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதிக்கு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல் பற்றிய அக்கறை. சீன ஜனாதிபதிக்கோ, அவப்பெயரைத் துடைத்தெறிந்து, எவ்வாறு உலகநாடுகளை தமதுகைக்குள் போட்டுக் கொள்வது என்ற கரிசனை.

அமெரிக்க ஜனாதிபதி Operation Warp Speed என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இவ்வாண்டுக்குள், முடிந்தால் அதற்கு முன்னதாக, தடுப்பு மருந்தை உருவாக்கலாம் என்று அவர் கூறுகிறார். இங்கு‘அதற்குமுன்னதாக’என்பதுமுக்கியமானது.

கடந்தவாரம், AstraZeneca என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு 120 கோடி டொலரை வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்தது. இந்த நிறுவனம் ஒக்டோபர் மாதத்திற்குள் தடுப்பு மருந்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்பது ட்ரம்பின் ஆதங்கம்.

மறுபுறத்தில், சீனா தடுப்பு மருந்து ராஜதந்திரத்தை அனுசரிக்கிறது. அபிவிருத்தி கண்டுவரும் நாடுகளுக்கு உதவி செய்வதற்காக 200 கோடி டொலரை செலவு செய்யப் போவதாக சீன ஜனாதிபதி அறிவித்துள்ளார். 

இந்த ராஜதந்திரம் சூசகமானது. சீனாவும், அமெரிக்காவும் உலகசுகாதார ஸ்தாபனத்துடன் கொண்டுள்ள உறவுகளை அடிப்படையாகக் கொண்டது.

அமெரிக்க ஜனாதிபதிக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கும் இடையில் ஏழாம் பொருத்தம். இவ்வமைப்பு சீனாவுக்கு பக்கசார்பாக நடக்கிறதென டொனல்ட் ட்ரம்ப் சாடுகிறார். இதற்குரிய நிதிப் பங்களிப்பை நிறுத்துவதாக எச்சரிக்கிறார்.

இந்த இடத்தில் சீனா ராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்கிறது. உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு உதவிசெய்யப் போவதாக கூறுகிறது. இந்த ஸ்தாபனம் நிறைவேற்றிய தீர்மானமொன்றில் கையெழுத்திட்ட நாடுகளில் சீனாவும் ஒன்று.

கொவிட்-19 ஆட்கொல்லிக்காக உருவாக்கப்படும் எந்தவொரு தடுப்பு மருந்தும் உலகப் பொதுநலன் கருதியதாக இருக்கவேண்டும் என்பது தீர்மானத்தின் சாராம்சம். அந்த மருந்தை பரவலாகவும், நியாயமாகவும், மலிவாகவும் விநியோகிக்கக் கூடியதாக இருக்கவேண்டும் என்றநிபந்தனையும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தீர்மானத்தில் உள்ளது.

இங்கே பாருங்கள். நான் உலகப் பொது நலனுக்காக பாடுபடுகிறேன். மற்றைய நாடுகளுக்கு உதவி செய்கிறேன் என்று உரத்துச் சொல்லும் பிரசாரத் தொனியை அதில் காணலாம்.

உலகப் பிரசாரப் போரில் தாம் தோற்றுப் போவதைப் போலொரு நிலைமை ஏற்பட்டபோது, அமெரிக்கா வேறு அஸ்திரத்தைப் பிரயோகித்தது. அது இணைய வழி ஊடுருவல் (Hacking) பற்றிய குற்றச்சாட்டாகும். மேலைத்தேய மருந்துக் கம்பனிகள் தடுப்பு மருந்துக்காக கடும் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், சீன உளவாளிகள் கம்பனிகளை Hacking செய்து தகவல்களைத் திருட முனைந்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சுமத்தினார்கள். 

அமெரிக்காவில் மேற்கொள்ளும் எந்தவொரு ஆய்வின் பெறுபேறுகளையும் பெற்றுக் கொள்வதற்கு தமது சக்திக்கு உட்பட்டவாறு சீனா எதனையும் செய்யக் கூடுமென அமெரிக்காவின் தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிலையத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் பில் இவானினா என்பவர் நேரடியாகவே குற்றம் சுமத்தினார்.

இந்தப் போட்டி ஒருபறம் இருக்கட்டும். ஒரு தடுப்பு மருந்தை உருவாக்குவதில் ஒருநாடோ, தனியொரு கம்பனியோ வெற்றி பெறலாம். எனினும், கொவிட்-19 நெருக்கடி உலகளாவியது என்பதால், இதற்கு பூகோள ரீதியான தீர்வே அவசியம்.

அமெரிக்கா நிதியுதவி அளிக்கும் AstraZeneca என்ற கம்பனியையே உதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியும். இது பிரிட்டன் - ஸ்வீடன் கூட்டுக் கம்பனியாகும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தடுப்புமருந்தைத் தயாரிக்கத் திட்டமிடுவதாக AstraZeneca கம்பனிஅறிவித்துள்ளது. இது பலநாடுகளிலும் பரந்து விரிந்த வலைப்பின்னலைக் கொண்ட நிறுவனமாகும். 

அமெரிக்க அரசாங்கம் நிதியுதவி செய்து, அதன் மூலம் AstraZeneca நிறுவனம் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது, உலக மக்களில் யாருக்கு மருந்தை முதலில் வழங்க வேண்டும், எந்த நாட்டுக்கு தேவை குறைவு என்ற கேள்விக்குப் பதிலைத் தேடுவது சிரமமாக அமையும். அந்தப் பதில் உலகப் பொதுநலன் கருதியதாக அமையவும் மாட்டாது. ஏனெனில்,ட்ரம்ப்பைப் பொறுத்தவரையில்,America First என்பதே தாரகமந்திரமாக இருக்கிறது.

கடந்த காலங்களில், புதிதாக உருவாக்கப்பட்ட ஓளடதங்களும், தடுப்பு மருந்துகளும் முதன் முதலாக செல்வந்த நாடுகளுக்கு வழங்கப்படுவது வழமையாக இருந்தது. அதனை கொவிட்-19 விடயத்திலும் எதிர்பார்க்கலாம். எனினும், எந்த நாட்டில் முதன் முறையாக தடுப்பு மருந்து உருவாக்கப்படுகிறதோஅந்தநாட்டில் முதலாவதாக தடுப்பு மருந்து விநியோகிக்கப்படக் கூடும். 

கொவிட்-19 ஆட்கொல்லிநோயால் செல்வந்த நாடுகளே கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், இந்தநாடுகளில் வைரஸ் தொற்று குறைந்து வருகையில், சில வளர்முக நாடுகளில் தீவிரமாக அதிகரித்து வருகிறது. பிரேசில் சிறந்தஉதாரணமாகும். 

வறிய நாடுகள் மீது அதிக கவனம் செலுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்க சர்வதேச மட்டத்திலான சுகாதாரஅமைப்புக்கள் பாடுபடுகின்றன. எனினும், மருந்து உற்பத்திக் கம்பனிகளைக் கையாள்வது எளிதானகாரியம் அல்ல. அதற்குள் அரசியல் இருக்கிறது. பெரும் வணிகமும் உள்ளது.

எந்தளவு மருந்தை உற்பத்தி செய்ய வேண்டும் , எந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும், எந்த வாடிக்கையாளருக்கு முதலில் விநியோகிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதெல்லாம் குறித்த மருந்து உற்பத்திக் கம்பனிகள் தான். உலகப் பொது நலனுக்காக பாடுபடும் அமைப்புக்கள், அத்தகைய கம்பனிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒழுங்குறுத்துவதற்குரிய ஏற்பாடுகளும் கிடையாது.

ஒரு தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுவிட்டதாக வைத்துக்கொள்வோம். அதற்கான கிராக்கி மிகவும் அதிகமானதாக இருக்கும். அந்த மருந்து எந்தநாட்டில் உருவாக்கப்பட்டதோ, அந்நாடும், அரசியல் தலைவர்களும், மருந்துக் கம்பனிகளும் பல விதமான அழுத்தங்களை எதிர்கொள்ளலாம். உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய மருந்தை உற்பத்தி செய்ய வேண்டும். அதுதவிர, மற்றைய நாடுகளுக்கு பரவாலம், நியாயமாகவும், மலிவாகவும் விநியோகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் எதிர்கொள்ளலாம்.

இதற்கு ஐ.நா.கட்டமைப்புக்குள் தீர்வுகாண முடியாது. ஐ.நா.வின் முகவராண்மையாக இயங்கும் உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வுகளை முன்மொழியலாமே தவிர, அவற்றை அமுலாக்கும் அதிகாரம் அதற்குக் கிடையாது. எனவே, தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் அதிகாரப் போராட்டம் வரத் தான் போகிறது. இது இன்னொரு அரசியல்-பூகோளவியல் போராட்டமாகத் தான் இருக்கப் போகிறது.