கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு ஆரம்பமானது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் தோன்றிய பனிப்போர் இறுதியில் கட்சியை சின்னாபின்னமாக்கி விட்டது என்றே கூறவேண்டும்.

இதேவேளை முக்கிய தீர்மானங்களை எடுக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று வெள்ளிக்கிழமை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது. 

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸா உட்பட 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கபட்டுள்ளது . 

கட்சியின் யாப்பினை மீறி செயற்குழுவின் அனுமதியின்றி வேறு கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்ததின் காரணமாக அவர்களின் உறுப்புரிமையை ரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மாற்று அரசியல் கட்சியில் இணைந்து கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார்.

 அத்துடன் வேறு கட்சியின் சார்பில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை மீறியுள்ளதாகவும் இதனால் கட்சியின் உறுப்புரிமை மற்றும் வகித்த பதவிகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுவதாகவும் ஏதேனும் கருத்து கூற விரும்பின் 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார். 

இதற்கமைய அந்த 7 நாட்கள் நேற்று முடிவடைந்ததை அடுத்து கட்சியின் 99 உறுப்பினர்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த தீர்மானம் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியானது  அரசாங்க ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நடந்துகொள்கிறது. எமக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு உரிமை கிடையாது என தெரிவித்துள்ளார் .

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடவுள்ள கட்சி உறுப்பினர்களும் எதிரும் புதிருமாக, தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இரு தரப்பினரும் முட்டி மோதிக் கொள்வதால்  தாம் சார்ந்த கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதேவேளை ஆளும் தரப்பு தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவ்வாறு தேர்தல் நடைபெறும் பட்சத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறலாம் என்றும் எதிர்பார்த்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் பிரதான கட்சி ஒன்றுக்குள் ஏற்படும் பிளவு ஆளும் தரப்புக்கு சகல வழிகளிலும் சாதகமாகவே அமைந்து விடும் .

மறுபுறம் பலம் வாய்ந்த எதிரணி ஒன்றை இல்லாமல் செய்து விடும் . இது ஜனநாயக நாட்டுக்கு  பேராபத்தை ஏற்படுத்தும் என்பதனையும் மறந்துவிடக்கூடாது. 

இதேவேளை நாடு சர்வாதிகார போக்கை நோக்கி செல்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பிரதான அரசியல் கட்சிகள் இவ்வாறு பிளவுபடுமானால் நாட்டில் சர்வாதிகார போக்கு இயல்பாகவே உருவாகும் என்பதே யதார்த்தம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்