பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள அரசியல் ஆளுமையின் இழப்பு 

30 May, 2020 | 03:10 PM
image

- ரொபட் அன்டனி  

யுத்தம் முடிந்ததும்  2010 ஆம் ஆண்டளவில் இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் 50000  வீடுகளை  நிர்மாணிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.   அதில்  4000 வீடுகள் மலையகத்தில் நிர்மாணிக்கப்படவிருந்தன. இது தொடர்பான  கலந்துரையாடல் ஒன்று   அன்று  கொழும்பில்  அரச அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் இந்திய தூதரக அதிகாரிகள்  அப்போதைய அரசாங்கத்தின்  முக்கிய அமைச்சர்கள்  அதிகாரிகள் என பலரும்  பங்கேற்றிருந்தனர். அப்போதைய அமைச்சர் ஆறுமுகன்  தொண்டமானும்  முக்கிய  தரப்பாக அதில்  பங்கேற்றிருந்தார். 

அதாவது குறித்த இந்திய அரசாங்கத்தின் உதவியுடனான  4000 வீடுகளை மலையகத்தில் எங்கே நிர்மாணிப்பது என்பது குறித்த கல்நதுரையாடலே அதுவாகும். இதன்போது பல விடயங்கள் பேசப்பட்டன. ஆறுமுகன் தொண்டமான் இது இப்படித்தான் நடக்கவேண்டும் என்று சில விடயங்களை கூறியிருக்கின்றார். 

அது தொடர்பில்  மாற்றுக்கருத்தக்கள் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.  ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்ள  ஆறுமுகன் தொண்டமான் தயாராக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் இது இப்படித்தான் நடக்கவேணடும் என்று கூறிவிட்டு ஆறுமுகன் தொண்டமான் கூட்டத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டார். அதிகாரிகள் அமைச்சர்கள்  என அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இங்கே கூற விளைவது இதுதான் ஆறுமுகன் தொண்டமானின் அனுகுமுறையாகும். தனது மக்களுக்கு எது நல்லதோ எனது சரியானதோ அதற்காக  உடன் மற்றும் அதிரடி தீர்மானம் எடுப்பதில்  ஆறுமுகன் தொண்டமான் மிக தெளிவாக இருந்தார். அது எவ்வகையான விமர்சனங்களை கொண்டுவரும் என்பது குறித்து அவர் கவலையடையவில்லை. அவ்வாறான ஒரு ஆளுமைமிக்க அரசியல் தலைவரை  மலையகமும் ஒட்டுமொத்த தமிழ் சமூகம் இழந்துநிற்கிறது.  அதிரடி தீர்மானங்களை எடுப்பதில் ஆறுமுகன் வல்லவராகவே இருந்தார். ஆனால் அந்த தீர்மானங்கள் ஒருபோதும்   மலையக மக்களுக்கு பாதகமானதாக இருக்கவில்லை.  

அந்தவகையில் தற்போதைய  நிலைமையில்   ஆறுமுகன் தொண்டமானின்  இழப்பு என்பது  சொற்களினால் விபரிக்க முடியாததாகும்.  

ஆறுமுகன்  தொண்டமானின்  மறைவு  எந்தளவு தூரம்  இழப்பு என்பது தொடர்பில்  அவரது  சக   அரசியல்வாதியான  பாராளுமன்றத்தில் எதிரெதிர் திசையில்  செயற்பட்ட மனோ கணேசன் தெரிவித்துள்ள விடயங்களே  பறைாசாற்றுகின்றன. 

’இ.தொ.கா.வை விட்டுஇ பலர் பல காரணங்களை முன்வைத்து  பிரிந்து சென்ற போதெல்லாம்இ அதை பலவீனமடைய விடாமல் கொண்டு நடத்தியவர் ஆறுமுகன் தொண்டமான். மலையக தமிழ் மக்களின் நலன்களை தனக்கே உரியஇ தான் நம்பும் வழிமுறைகளில் அவர் பிரதிநிதித்துவம் செய்து வந்தார்.

நமது மக்கள் எதிர்நோக்கும் சவால் மிக்க இன்றைய காலகட்ட பின்னணியை கணிக்கும் போதே ஆறுமுகன் தொண்டமானின் திடீர் இழப்பின் ஆழம் புரிகின்றது. வேதனை விளங்குகிறது. அவருடன் அரசியல்ரீதியாக முரண்படுகின்றவர்களுக்கு கூட அவரது இன்றைய மறைவின் வெறுமை தெரிகின்றது  என்று   அரசியல் ரீதியில்  மாற்று அணியில்  இருக்கும்  மனோ கணேசன் கூறியிருக்கின்றார். 

அதாவது அவருடன் அரசியல் ரீதியாக முரண்படுகின்றவர்களுக்கு கூட அவரது மறைவின் வெறுமை  தெரிகின்றது என்று  அவர் தெரிவித்திருக்கின்றார். அந்தவகையில் ஒரு ஆளுமைமிக்க அரசியல்  தலைவரை  மலையகம் இழந்திருக்கின்றது. ஏன் இலங்கையின்  முழு  தமிழ் சமூகமும்  அவ்வாறான  ஒரு தலைவரை  இழந்து நிற்கிறது என்பதே யதார்த்தமாகும். 

அரசியல்வாதிகள் தலைவர்கள் என்பவர்கள்  தீர்மானம் எடுப்பதில் பின்நிற்கக்கூடாது என்று கூறுவார்கள். அந்தவகையில்  உடன் தீர்மானம்  எடுப்பதில்  ஆறுமுகன்  தொண்டமான் கை தேர்ந்தவராக இருந்தார். அரசியல் என்று வரும்போது பேச்சுவார்த்தை நடத்தி    ஜனநாயக ரீதியில் தீர்மானம் எடுக்கவேண்டும் என்பது  கோட்பாடாகவோ அல்லது அல்லது அனுகுமுறையாகவோ உள்ளது.  ஆனால் அந்தவகையில் ஆறுமுகன்  தொண்டமான் தீர்மானம்  எடுக்கும்போது சில சந்தர்ப்பங்களில் அவசரம் இருந்தாலும்  அது தனது மக்களின் நலன் சார்ந்தாக  இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

சிறிய வாக்குவாதம் காரணமாக  தனது அணியினருடன் 2007 ஆம் ஆண்டளவில் அப்போதைய  மஹிந்த அரசாங்கத்திலிருந்து திடீரென ஆறுமுகன் தொண்டமான்   வெளியேறிவிட்டார்.  பின்னர் சில  தினங்கள் கடந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே  மீண்டும் அந்த அரசாங்கத்துடன்  இணைந்து செயற்பட்டார்.  அவர் தீர்மானம் எடுக்கும் விதம் அவ்வாறே இருந்தது. ஒரு பங்காளிக் கட்சி அரசாங்கததிலிருந்து விலகும் முன் பல கோணங்களில் சிந்திக்கும். ஆனால் ஆறுமுகன் தொண்டமான் உடனடியாகவே வெளியேறினார்.  அவர் தீர்மானம் எடுக்கும் விதம் அப்படி இருந்தது. 

மேலும்  மலையக தமிழ் அரசியல்வாதிகள் எப்போதும் அமைச்சர்களாகவே இருக்கின்றார்கள்  எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்ற  குற்றச்சாட்டு பொய் என்பதை கடந்த  நல்லாட்சி காலத்தில் நிரூபித்திருந்தார் ஆறுமகன் தொண்டமான். கடந்த நான்கரை வருடங்களில் அவர்  அமைச்சுப் பொறுப்பை ஏற்கவில்லை. 

அது மட்டுமன்றி எப்போதும  தனது மக்கள் குறித்து சிந்தித்துக்கொண்டிருப்பார் என்பதனை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே தெரிவித்திருக்கின்றார்.   அவரின் மறைவு செய்தி கேட்டு உடனடியாக  தலங்கம வைத்தியசாலைக்கு சென்ற   பிரதமர்  உருக்கமாக சில விடயங்களை பகிர்ந்தார். 

’மறைந்த  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன்  தொண்டமான்  எப்போதும் மலையக மக்களை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தவர்.   இறுதியாக  என்னை சந்தித்த போதும்  மலையக மக்கள் குறித்தே பேசினார்.    என்னுடன்  மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றியே பேசினார்.    அவரது மறைவு   மலையக மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பேரிழப்பாகும்.  நல்ல மனிதர். சிறந்த அரசியல்வாதியாவார்’  என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார். 

இதன் ஊடாக சில சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கே  தெரியாமல் அவர் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்பது தெரிகின்றது.  

கடந்த 1993 ஆம் ஆண்டு அரசியல் களத்தில் பிரவேசித்த ஆறுமுகன் சத்தமின்றி ஆர்ப்பாட்டமின்றி பல விடயங்களை சாதித்திருக்கின்றார்.  1993 ஆம் ஆண்டு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதில் நிதி செயலாளராக ஆறுமுகன் தொண்டமான் நியமிக்கப்பட்டார்.   இவரது வருகையின் பின்னர்  அப்போது  இலங்கை தொழிலாளர் காங்கிரஸில்  முக்கிய பொறுப்பிலிருந்த எம்.எஸ். செல்லச்சாமி உள்ளிட்டோர்  கட்சியை விட்டு வெளியேறியிருந்தனர்.  

எனினும்  ஆறுமுகன்  தொண்டமான் தளர்ந்துவிடவில்லை. அவர் தனது தலைமைத்துவத்தில் ஆர். யோகராஜன் போன்றவர்களின் ஒத்துழைப்புடன்   இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற அந்த  நிறுவனத்தை  தொடர்ந்து பலப்படுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் ஆர். யோகராஜனும்  கட்சியிலிருந்து வெ ளியேறினார். எனினும்    மலையகத்தின்  மிகப்பெரிய  தனிக்கட்சியாக  இ.தொ.கா.வை   வலுவானதாக  ஆறுமுகன்  வழிநடத்தியிருக்கின்றார்.  

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில்  போட்டியிட்ட ஆறுமுகன் தொண்டமான் வெற்றிபெற்றார்.  அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் அவர் வெற்றிபெற்றார். ஆறுமுகன் தொண்டமான் 1999 ஆம் ஆண்டு  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவியை ஏற்றது முதல்  மறையும்வரை  21 வருடங்களாக அந்தக் கட்சியை வலுவானதாக  கட்டியெழுப்பி வந்துள்ளார்.  

மலையக மக்கள் விடயத்தில் ஆறுமுகன் தொண்டமான முக்கியமாக தீர்க்கமான விடயங்களை முன்னெடுத்துள்ளார்.  2001 ஆம் ஆண்டு  முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா குமாரதுங்கவினால் 17 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் கொண்டவரப்பட்டது. அப்போது அரசியலில் அது முக்கியமான விடயமாக கருதப்பட்டது. அதாவது அந்த 17 ஆவது  திருத்த சட்டத்தின் ஊடாக     அரசியல் யாப்பு சபை நிறுவப்பட்டது.  

அந்த அரசியலமைப்பு சபையில்  ஆரம்பத்தில்  இலங்கை வாழ் தமிழர்கள் சார்பாக  ஒரு பிரதிநிதியை  நியமிப்பதற்கு  முடிவு செய்யப்பட்டிருந்தது.   எனினும்  ஆறுமுகன் அந்த இடத்தில் அரசியல் இராஜதந்திரத்துடன் செயற்பட்டார்.  இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சார்பில்  அந்த அரசியல் யாப்பு சபையில்  ஒரு பிரதிநிதியை நியமிப்பதற்கு ஆறுமுகன் தொண்டமான்  கடும் அழுத்தம் பிரயோகித்திருந்தார்.    இறுதியில் அந்த முயற்சியில் ஆறுமுகன்  தொண்டமான் வெற்றிபெற்றார்.  இது இலகுவான விடயமல்ல.  ஆனால் அதனை  லாவகமாக  ஆறுமுகன் தொண்டமான் செய்து முடித்தார். 

அதேபோன்று  1988 ஆம் ஆண்டு  முன்னாள் ஜனாதிபதி  ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில்  இந்திய வம்சாவளி மக்களுக்கு  பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.  ஆனால்   இந்திய கடவுச்சீட்டினை வைத்திருந்த  மற்றும் இந்திய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்திருந்த 3 இலட்சம் பேர்  பிரஜைவுரிமை அற்றவர்களாக இலங்கையில் இருந்தனர்.  

இந்நிலையில்  2003 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில்  ஆறுமுகன் தொண்டமான்  இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டார்.  அதன்படி  குறித்த இந்திய  கடவுச்சீட்டு வைத்திருந்த  3 இலட்சம் பேருக்கும்  பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.   இதுவும் அவரது தலைமையில் பெறப்பட்ட முக்கிய வெற்றியாக காணப்படுகின்றது.   நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின்  விளைவாக இந்த வெற்றி அடையப்பட்டது.  

2005ஆம் ஆண்டு  மலையகத்தில்  3179 ஆசிரியர்களை ஒரே தடவையில் நியமிப்பதற்கு  ஆறுமுகன் தொண்டமான்  நடவடிக்கை எடுத்திருந்தார்.       இதன்போது  தடைகள் வந்தன. எனினும் வழக்காடி  இந்த முயற்சியில் வெற்றியடைந்தார். இன்று  மலையகம் கல்வியில் முன்னேற்றத்தை காட்டுகின்றதாயின் அதற்கு இந்த ஆசிரியர் நியமனங்களும்  பிரதான காரணமாகும்.  

2001 ஆம் ஆண்டு   குறைந்தபட்ச சம்பளமாக  200 ரூபா வழங்கப்படவேண்டும்  என்ற கோரிக்கை  தோட்டத் தொழிலாளர்களின் சார்பில் முன்வைக்கப்பட்டது.  எனினும் அதனை  முதலாளிமார் சம்மேளனம்  ஏற்க மறுத்ததையடுத்து  ஆறுமுகன் தொண்டமான் போராட்டத்தில் குதித்தார். 

 மல்லிகைப்பூ சந்தியில் 25 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டம்  ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதுடன்   இதில் 200 ரூபா  குறைந்த சம்பளம்  உறுதிப்படுத்தப்பட்டு  அந்தப்போராட்டம்  வெற்றிபெற்றது. அரசியல் தலைவர் ஒருவர்  நேரடியாக  களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியை பெற்றுக்கொடுத்த புதிய அத்தியாயத்தை  ஆறுமுகன் தொண்டமான்   ஏற்படுத்தினார்.  

மேல் கொத்மலை திட்டத்தின்போதும் ஆறுமுகன் தொண்டமான்  வெறுமனே இருந்துவிடவில்லை. ஐந்து நீர்வீழ்ச்சிகளை ஒன்றிணைத்து  உருவாக்க திட்டமிடப்பட்ட இதன்  பிரதிகூலங்கள் குறித்து  போராட்டம் நடத்தினார். இறுதியில்  ஒரு நீர்வீழ்ச்சியை மட்டும் கொண்டு மேல் கொத்மலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

இவ்வாறு  ஆறுமுகன்  தொண்டமான்    பெற்ற வெற்றிகள்  மற்றும் முன்னெடுத்த செயற்பாடுகள் பல காணப்படுகின்றன.  இவை  எல்லாவற்றின்போதும் ஆறுமுகன்  தொண்டமான் சிறந்த தீர்மானம் எடுக்கும் அரசியல் ஆளுமைமிக்க தலைவராக செயற்பட்டிருக்கின்றார். 

ஆறுமுகன்  மிகவும் கடினமானவர்  என்று பரவலாக கூறப்படுவதுண்டு.   ஆனால்  கடந்த ஜனாதிபதி  தேர்தலின்போது வீரகேசரி சார்பாக   நேர்காணல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது.  அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு   தெளிவாக  அதேநேரம் மிகவும் நேர்ததியாகவும் பதிலளித்தார். ஜனாதிபதி  தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கோத்தாவின் ஆட்சியில் மலையத்துக்கு சுபீட்சம் கிடைக்கும்  என்பதே அவர் அளித்த அனைத்து பதில்களினதும்  சாரம்சமாக  இருந்தது. 

எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் தவரிக்கிறார்  என்று தோன்றியபோதிலும் கூட அவர் பிரயோகித்த  ஓரிரு வார்த்தைப் பிரயோகங்களிலும்   ஆழமான முறையில் என்ன கூற விளைகிறார் என்பதனை புரிந்துகொள்ள முடிந்தது.  

அந்தளவுக்கு  தான் எடுத்த முடிவுகளில் தெளிவாக இருந்தது மட்டுமன்றி அரசியலில் அப்போது மிகவும் சரியான தீர்மானத்தை கணித்து அவர் எடுத்திருந்தார்.  அவர் அதிரடி தீ ர்மானங்களை எடுத்தாலும்  அவை ஒருபோதும் மலையக மக்களுக்கு பாதகமானதாக இருந்ததில்லை.   

அது மட்டுமன்றி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அரசியல் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்களிலும்  தனது நிலைப்பாட்டில்  தொடர்ந்து உறுதியாக இருந்தார்.  இந்த விடயத்தில் மிகவும் நேர்மையாக   அவர் நடந்துகொண்டார்.  அதனை பற்றி  தனிக்கட்டுரையே எழுத முடியும்.  

அந்தவகையில் மலையக அரசியல்  பரப்பில் மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் ஒன்றை ஆறுமுகன் தொண்டமானின் பிரிவு ஏற்படுத்தியிருக்கின்றது.  விசேடமாக ஆளுமைமிக்க  ஒரு திடமான உறுதிமிக்க  உடன்  தீர்மானங்களை எடுக்கவல்ல தலைவரை  நாடு இழந்துள்ளது. 

இதன் பின்னர் அவர் மலையக மக்களுக்காக முன்னெடுத்த சேவைகளை மற்றும்  அவர் அடைய  எண்ணிய இலக்குகளை  அவரை  பின்பற்றிவருகின்ற அடுத்த தலைவர்கள் முன்னெடுக்க  வேண்டும். மலையக மக்கள்  தொடர்பில் அவர் கண்ட கனவுகளை நனவாக்க  அவருடன்  இருந்த அனைவரும்  அர்ப்பணிப்புடன்    செயற்படுவதே தற்போதைய  பிரதான  தேவையாக உள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04