அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் அனைத்தையும் குழப்பியுள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலின் பின்னர்  புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதே சிறந்ததாக அமையும். அதனால் அடுத்த புதிய அரசாங்கத்தில்  புதிய அரசியலமைப்புக்கே செல்வோம்.  இது தொடர்பில்   கொள்கை பிரகடனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது  என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். 

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர்  இதனை குறிப்பிட்டார்.  

செவ்வியின் முழு விபரம் வருமாறு 

கேள்வி - உங்கள் அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து? 

பதில் - ஆறுமுகன் தொண்டமானின் மறைவு  மிகப்பெரிய இழப்பாகும்.  அவர் சிறந்த அரசியல்வாதியாவார்.  சிங்கள மக்களுடனும் சிங்கள அரசியல்வாதிகளுடனும்  சிறந்த முறையில் ஆறுமுகன்  பழகினார். அவரது  தொழிற்சங்கத்தில்   சிங்கள மக்களும் அங்கம் வகிக்கின்றனர்.  ஆறுமுகனுக்கும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்  இடையில் மிக நெருங்கிய உறவு காணப்படுகின்றது. இறுதிவரை அவர் மஹிந்தவுடன்தான்  இருந்தார்.   நான்கரை வருடங்கள் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்தார்.   சிறந்த அரசியல்வாதியை  நாடு இழந்துள்ளது. 

கேள்வி - வெளிநாடுகளில்  உள்ள 38000  இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களை  அழைத்து வரும் செயற்பாடு தாமதமடையுமா? 

பதில்  அந்த நடவடிக்கை  குறித்து ஆழமாக ஆராயவேண்டியுள்ளது.   ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை  38000 இலிருந்து குறைவடைந்திருக்கும் என்று நம்புகிறேன்.  காரணம்  ஐரோப்பிய நாடுகளில்  நிலைமை  சீரடைவது போன்றுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில்   இந்த எணணிக்கை குறைவடையும். விண்ணப்பத்தவர்களும் தற்போது வர விரும்புவார்களா என்று பார்க்கவேண்டும்.  தற்போது இத்தாலிக்கு பயணிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.  நிலைமை அவ்வாறு  மாறுகின்றதை நாங்கள் காண்கிறோம்.  ஆனால்  அவ்வளவு பேரையும் எப்படி அழைத்து வருவது என்றும் சிந்திக்கவேண்டும்.  ஒரு விமானத்தில்  300 பேரை அழைத்து வரலாம். எத்தனை முறை இதனை செய்வது? எனவே அனைத்து கோணங்கள் குறித்தும் பார்க்கவேண்டும். 

கேள்வி  - எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றி எவ்வாறு உள்ளது? 

பதில்  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அரசாங்கம் பாரிய வெற்றியை பெறும். நவம்பர்  16  ஆம் திகதி எமக்கு கிடைத்த வெற்றி மேலும் பலமடையும்.   ஐக்கிய தேசிய கட்சி உடைந்துவிட்டது.  ஆனால் நாம் பாரிய கூட்டணியாக உருவெடுத்துள்ளோம். எனவே  எமது வெற்றி நிச்சயமாகும்.  தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.  

கேள்வி - தேர்தலில் ஆளும் கட்சியினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியுமா? 

பதில் -பாராளுமன்ற தேர்தலில்  ஆளும் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதனை மீண்டும் கூறுகிறேன்.   

கேள்வி - அடுத்த ஆட்சியில்  தற்போதைய  பாராளுமன்ற தேர்தல் முறை மாற்றப்படுமா? 

பதில் - நிச்சயமாக பாராளுமன்றத் தேர்தல் முறையை மாற்றியமைக்கவேண்டும். அதாவது கலப்பு தேர்தல் முறைக்கு செல்வோம்.  இதற்கு முன்னர் என்னுடைய தலைமையில் தேர்தல் முறை மாற்றம்  குறித்து ஆராய்ந்த போது 70 வீத தொகுதி முறையிலும் 30 வீத விகிதாசார  முறையிலும் அமைந்த கலப்பு தேர்தல்  முறையை யோசனையாக முன்வைத்தோம்.  அதனை அடிப்படையாகக்கொண்டு புதிய  கலப்பு  தேர்தல் முறையை  கொண்டுவர முயற்சிப்போம். 

கேள்வி - நிச்சயம் தேர்தல் முறை மாற்றப்படுமா? 

பதில் - அரசாங்கம் அதனை செய்ய எதிர்பார்க்கின்றது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அந்த விடயம் உள்ளது. அது தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம். சிலவேளை   தொகுதி மற்றும் விகிதாசார விகிதங்களில் மாற்றங்கள் வரலாம். அதாவது 60 வீத  தொகுதி முறை மற்றும்  40 வீத விகிதாசார முறை என்ற வகையில் புதிய யோசனை அமையலாம். அவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியே இறுதி தீர்மானம் எடுக்கப்படும். நாங்கள் ஏற்கனவே  2012  ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறை மாற்றத்தை சிறப்பாக செய்திருந்தோம். எந்த சிக்கலும் குழப்பங்களும் இல்லாமல்  அதனை உருவாக்கியிருந்தோம். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் அதில் திருத்தங்களை செய்து அதனை குழப்பி விட்டது.  

கேள்வி - அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படுமா? அல்லது புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமா? 

பதில்  - அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டம் அனைத்தையும் குழப்பியுள்ளது.  பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் மேலும் விடயங்கள் உள்ளன. எனவே புதிய அரசியலமைப்புக்கு செல்வதே சிறந்ததாக அமையும். எனவே புதிய அரசியலமைப்புக்கு செல்வோம். 

கேள்வி - அப்படியானால்  வடக்கு கிழக்கு அரசியல் தீர்வு விடயம் எவ்வாறு பார்க்கப்படும்? 

பதில்  - அது தொடர்பில் புதிய பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற     தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். 

கேள்வி - அரசியல் தீர்வைவிட அபிவிருத்தியே முக்கியம் என்று அரசாங்கம் கருதுகின்றதா?

பதில் - வடக்கு கிழக்கில் அபிவிருத்தி முக்கியம் என்று அரசாங்கம் கருதுகின்றது.  எமது ஆட்சியில்  வடக்கு மாகாண சபையை பெற்றுக்கொடுத்தோம். ஆனால் அங்கு என்ன செய்தார்கள்? கூட்டமைப்பினர் தங்களுக்குள்   சண்டை பிடித்துக்கொண்டிருந்தார்கள்.  இவர்களின் சண்டை காரணமாக மாகாண சபை ஊடான அபிவிருத்தியின் பலன் மக்களை  சென்றடையவில்லை.  

அதுமட்டுமன்றி இன்று மாகாண சபை தேர்தல்கள் தாமதமடைவதற்கு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணமாகும். தமிழ்க் கூட்டமைப்பே இந்த நிலைக்கு பொறுப்புக்கூறவேண்டும்.   கூட்டமைப்பு அன்று  அந்த மாகாண சபை தேர்தல் மாற்ற  யோசனையை ஆதரித்திருக்காவிடின் இன்று மாகாண சபை இயங்கியிருக்கும். எமது பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் அன்று   அந்த மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள். அதனால் இன்று என்ன நடந்தது என்று பாருங்கள்.  மாகாண சபை ஒன்றையே  சரியாக நடத்த தெரியாதவர்கள் எப்படி வேறு விடயங்களை முகாமைத்துவம் செய்வார்கள்.  அவர்களினால் முகாமைத்துவம் செய்ய முடியாது  என்பதனை வெளிகடகாட்டியுள்ளனர். 

கேள்வி - வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு புதிய முதலமைச்சர் வந்தார். அவருடன் நீங்கள் எவ்வாறு செயற்பட்டீர்கள்?  

பதில் - பல விடயங்கள் நடைபெறும் என்று கருதினோம்.  அப்போது நான் நீர்வழங்கல் அமைச்சராக செயற்பட்டேன்.   வடக்கு  மாகாணத்தில் நீர்த்திட்டங்களை முன்னெடுக்க யோசனைகளை எனது அமைச்சின் ஊடாக முன்வைத்தோம். ஆனால் அவை ஏற்கப்படவில்லை.  எமது அதிகாரிகள் வடக்குக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எனினும் அவை நிறைவேறவில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தன.  அவ்வாறு   தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்த   பிரச்சினையினால் வடக்கு மாகாண சபையின் ஊடான அபிவிருத்தி நன்மையை மக்களினால் பெற முடியாமல் போய்விட்டது. 

கேள்வி - கொரோனா தடுப்பு செயற்பாடுகள் குறித்து? 

பதில் - கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு  விடயத்தில் இலங்கை முழு உலகுக்கும் முன்னுதாரணமாக செயற்படுகின்றது. பருத்தித்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை ஒரு பொறிமுறை செயற்படுத்தப்பட்டது. ஜனாதிபதியின் கீழ் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. மாகாண சபை இல்லாததால் உள்ளூராட்சிமன்றங்களை கொண்டு ஜனாதிபதி இந்த செயற்பாட்டை முன்னெடுத்தார்.  மிகவும் சிறந்த முறையில் அரசாங்கம் இதனை  செயற்படுத்தியிருந்தது.  

கேள்வி  - ஐரோப்பிய நாடுகளில் கொரோனா  நிலைமை மோசமடைய என்ன காரணம்? 

பதில் - ஐரோப்பிய நாடுகளின் சமூக அபிவிருத்தி முறைகள் கட்டமைப்புக்கள்   நகரை சார்ந்தே காணப்படுகின்றன. அதேபோன்று  அரச சுகாதார சேவையைவிட    தனியார் துறையின் ஆதிக்கம் அதிகம்.  இலங்கையில்   அரச மருத்துவ துறை  சிறந்த கட்டமைப்பையும் செயற்றிறனையும் கொண்டுள்ளது. அதனால்தான் எமது செயற்பாடுகள் செயற்றிறனாக அமைந்திருந்தன.   சுகாதார துறையை காப்பாற்றுவதிலும் அதனை அரச துறையில் தொடர்ந்து பேணுவதிலும்   நாம்  போராடி வந்துள்ளோம். 

கேள்வி - ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலிருந்து இலங்கை விலகியதா? அல்லது  அனுசரணையிலிருந்து விலகியதா? 

பதில் - நாங்கள் பிரேரணையிலிருந்துதான் விலகியிருக்கின்றோம்.  அனுசரணையிலிருந்து விலகுவது  பிரேரணையிலிருந்து விலகுவதுதான். எமது நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில்   ஜெனிவா பிரேரணை காணப்பட்டதால் அதிலிருந்து விலகினோம்.  

கேள்வி - அப்படியானால் அந்த பிரேரணையின் எந்த விடயமும் அமுல்படுத்தப்படமாட்டாதா? 

பதில் - நாங்கள் பிரேரணையிலிருந்து விலகியுள்ளோம். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு அமைய செயற்படுவோம். ஆனால் எமது நாட்டின் அரசியலமைப்புக்கு மாறாக செயற்படமாட்டோம். அரசியலமைப்பை மீறி செயற்பட முடியாது.  குறிப்பாக வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கைக்குள்  அனுமதிக்க முடியாது. அதேபோன்று எமது படையினரை நாங்கள் பாதுகாப்போம்.   படையினரை பாதுகாக்கவேண்டிய .பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.  

கேள்வி - காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பதிலே  இல்லையா? 

பதில் - எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம். இலங்கை சட்டத்துக்கு அமைவாக   வழக்கு தாக்கல் செய்யலாம். அரசியலமைப்பை மீறாமல் இந்த விடயத்தில் செயற்படலாம். அவ்வாறு  தகவல்களை  தேடும் பணிகள்  இடம்பெறுகின்றன. 

கேள்வி - காணாமல் போனோர் குறித்த அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பன தொடர்ந்து இயங்குமா? 

பதில்  - அவை தொடர்ந்து இயங்கும். அதாவது பாராளுமன்ற  சட்டத்துக்கு ஏற்ப   இயங்குபவை இயங்கலாம்.   காணாமல் போனோர் அலுவலகத்திலும் எதுவும் நடக்கவில்லை. வெறும் வாய்ப்பேச்சு மட்டும்தான்  இடம்பெற்றுள்ளது.   ஆனால் எமது நாட்டின் இறைமையை சுயாதீனம் என்பனவற்றை  விட்டுக்கொடுக்க முடியாது. 30–1 ஜெனிவா பிரேரணையானது இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாகவே அமைந்திருந்தது.  

கேள்வி - பாராளுமன்ற தேர்தல் விடயத்தில்   ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு மத்தியில்  தேர்தல்  ஆணைக்குழு  தொடர்பில்  அரசாங்கம் அதிருப்தியுடன் உள்ளதா? 

பதில்  - அது  தொடர்பில் நான் ஒன்றும் கூற முடியாது. ஆனால்  பாராளுமன்ற தேர்தலை விரைவாக நடத்த தேர்தல்  ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் விரைவாக நடைபெறவேண்டும்.   ஜனநாயக நாட்டில் தேர்தலை தொடர்ந்து தாமதிக்க முடியாது.   அதனால் விரைந்து தேர்தலை நடத்த முயற்சிப்பது  மிக அவசியமாகும்.  

கேள்வி - எனினும்  தற்போதைய நெருக்கடி நிலையில் தேர்தல் நடத்தும் முறையில் மாற்றங்களை செய்தால்  சட்டதிட்டங்களை மாற்றவேண்டுமே? 

பதில்  - இதனைவிட இக்கட்டான காலத்தில் விதிகளில் மாற்றம் செய்து தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.  இக்கட்டான சூழலில் வடக்கிலும் தெற்கிலும் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.   

கேள்வி - எனினும் நாட்டில் தற்போது ஒரு பிரச்சினை உள்ளதே? 

பதில் - நாம்  எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்கவேண்டும். அவ்வாறு வரலாற்றில் நடைபெற்றுள்ளது.   எனவே தேர்தல் விரைவில் நடைபெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.  பாராளுமன்ற  தேர்தலை விரைவாக நடத்த தேர்தல்  ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  அவர்களின் பணியில் நாம் தலையிடமாட்டோம். 

கேள்வி - அப்படியாயின் தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என்று ஆணைக்குழுவுக்கு எவ்வாறு கூறுகின்றீர்கள்? 

பதில்   - தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்த விடயத்தை வலியுறுத்திவருகின்றோம். 

கேள்வி - பாராளுமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என்று கருகின்றீர்கள்? 

பதில் - முடியுமானவரை விரைவாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.   பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு விரைவாக புதிய பாராளுமன்றம் அமையவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.  

நேர்கண்டவர் - ரொபட் அன்டனி