இந்தியாவில் கொரோனோ தொற்று பரிசோதனைக்கான இரத்த மாதிரிகளைக் குரங்குகள் பறித்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அசாதாரணமான வகையில் இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக அறியப்படுகிறது.

இந்தியாவின் வடபகுதி மாநிலமான உத்தரபிரதேசத்திலுள்ள மீரட் நகரிலுள்ள மருத்துவக் கல்லூரியில் கொரோனோ நோய் தொற்று சந்தேகத்தின் பேரில் 19 பேரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது, குரங்குக் கூட்டமொன்று திடீரென அதை எடுத்துச் சென்ற ஊழியர் மீது பாய்ந்து அதில் குறைந்தது மூவரின் மாதிரிகளைப் பறித்துச் சென்றன.

குரங்குகளால் பறித்து செல்லப்பட்ட இரத்த மாதிரிகளை அளித்த மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடமிருந்து பரிசோதனைக்காக மீண்டும் இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மீரட் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் பெரும் பிரச்சினையாக உள்ளது என்று, கூறும் வைத்தியர்கள், இதற்கான தீர்வைக் காண்பதில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்கிறார்கள்.

மீரட் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியுள்ளது.

அந்தக் காணொளியில் இரத்த மாதிரிகளைப் பறித்துச் சென்ற குரங்கொன்று அந்தப் பொதியைக் கடித்து உண்பதைக் காண முடிகிறது.

வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாலும் அந்தக் குரங்குகள் பிடிக்கப்படவில்லை என்று அந்த வைத்தியசாலையில் தலைமை கண்காணிப்பாளர் வைத்தியர் தீரஜ் பாலயான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த இரத்த மாதிரிகளைப் பறித்துச் சென்ற குரங்குக் கூட்டத்திலிருந்த குரங்கொன்று அந்தப் பொதியைக் கடித்துக் குதறியதில் அதன் பகுதிகள் நிலத்தில் விழுந்துள்ளன. அவையும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனில் டிங்ரா கூறியுள்ளார். எனினும் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியுள்ள அந்தக் காணொளியைத் தான் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் மிக அதிகமாக இருப்பதாலும் மாதிரிகளைப் பறித்துச் சென்ற குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அலைந்து திரிந்ததால் இச்சம்பவத்தின் மூலம் கொரோனா தொற்று குறித்த அச்சம் மீரட் நகரிலுள்ள மக்களிடையே எழுந்துள்ளது.

கொரோனா தொற்று விலங்குகள் மூலம் பரவக் கூடும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இதுவரை இல்லாத நிலையில், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் சந்தேக நபர்களின் மூக்கு மற்றும் வாயிலிருந்து பஞ்சு மூலம் எடுக்கப்பட்ட மாதிரிகளை அந்தக் குரங்குகள் பறித்துச் செல்லவில்லை என்று வைத்தியசாலையில் தலைவர் எஸ் கே கர்க் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.