அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் அண்மைய வாரங்களில் ஒரு தாழ்வெல்லைக்கு கீழ்நோக்கிச் சென்றன.மத்திய சீன நகரான வூஹானில் இருந்து பரவத்தொடங்கிய கொவிட் -- 19 தொற்றுநோய் தொடர்பாக சீனாவுடனான " முழு உறவுகளையும் துண்டிக்கப்போவதாக " ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மே 15 அச்சுறுத்தினார். முன்னதாக கொரோனாவைரஸை " சீன வைரஸ் " என்று அழைத்த அவர் தொற்றுநோய் பரவலின் விளைவாக ஏற்பட்ட சேதங்களுக்காக சீனாவிடமிருந்து இழப்பீட்டைக் கோரப்போவதாகவும் அச்சுறுத்தினார்.

அமெரிக்காவில் பணியாற்றுகின்ற சீன ஊடகவியலாளர்கள் மீது விசா கட்டுப்பாடுகளை இம்மாத ஆரம்பத்தில் விதித்த ட்ரம்ப் நிர்வாகம், அவர்கள்  பணியாற்றுவதற்கான  காலகட்டத்தை 90 நாட்களாக மட்டுப்படுத்தியது. "தேசிய பாதுகாப்புக்கு ஆபத்துக்களை தோற்றுவிக்கின்ற கம்பனிகளினால் " தயாரிக்கப்படும் ரெலிகோம் உபகரணங்களை அமெரிக்க கம்பனிகள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்தவாரம்  மேலும் ஒரு வருடத்துக்கு ட்ரம்ப் நீடித்தார்.இதற்கெல்லாம் , சில சந்தர்ப்பங்களில், அரச ஊடகங்களின் ஊடாக பதிலடி கொடுத்த சீனா, ட்ரம்பின் கருத்துக்களை "கிறுக்குத்தனமானவை " என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவை " கெடுதியான அரசியல்வாதி " என்றும் அழைத்தது.சீனாவை எதிர்த்தல்
இரு வல்லரசுகளுக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரிப்பு  புதியதொரு பனிப்போர்(Cold War )  குறித்த எச்சரிக்கையை விடுக்க பல நிபுணர்களை தூண்டியிருக்கிறது." சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போரைப்  போன்று சீனாவை எதிர்த்தல் என்பது அமெரிக்க வெளியுறவுக்கொள்கையை உருவாக்கம் செய்யும் கோட்பாடாக மாறவேண்டும் என்ற கோலிக்கை அமெரிக்காவில் உரத்து ஒலிக்கிறது" என்று வெளியுறவு கொள்கைகள் கவுன்சிலின் தலைவரான றிச்சர்ட் ஹாஸ் மே 7 வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் எழுதியிருந்தார்.அவ்வாறு சீன எதிர்ப்பை கோட்பாடாக்குவது ஒரு மூலோபாயத் தவறாக அமையும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.பெய்ஜிங்கை நோக்கி மேலும் கூடுதலான அளவு ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைப்பிடிக்கவேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் இருக்கும் கடும்போக்காளர்கள் வெளிப்படையாகவே வலியுறுத்துகிறார்கள்.

கொவிட் --19 தொற்றுநோய்க்கு வெகு  முன்னதாகவே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் படிப்படியாக தரங்கெடத் தொடங்கிவிட்டன. சீனாவை அமெரிக்காவின் பண்பு மதிப்புகளுக்கும் நலன்களுக்கும் நேர்முரணானதான ஒரு உலகை வடிவமைப்பதையும் அமெரிக்காவின் பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் படிப்படியாக அழிப்பதையும் நோக்கமாகக் கொண்ட " ஒரு திரிபுவாத வல்லரசு" என்று சீனாவை ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்திட்ட அறிக்கை 2017 ஆம் ஆண்டில வர்ணித்தது.சீனாவினால் தோற்றுவிக்கப்படக்கூடிய பாதுகாப்புச் சவால்களை கையாளுவதற்கு அமெரிக்க அரசாங்கம் மூலோபாயமொன்றை வகுக்கின்றது என்று உதவி இராஜாங்க அமைச்சர் கிறிஸ்தோபர் போர்ட் தெரிவித்த கருத்துக்கு பெய்ஜிங்கில்  பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சு " பனிப்போர்க்கால மனோபாவத்தை கைவிடுமாறு நாம் அமெரிக்காவில உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம் " என்று கூறியது.

நோவிகோவ் தந்திச்செயதி
கொவிட் -- 19 தொற்றுநோய், ஏற்கெனவே வாணிப, தொழில்நுட்ப மற்றும் கடல்சார் தகராறுகளின் கீழ் தடுமாறிக்கொண்டிருக்கும் இரு நாடுகளையும், ஒன்றுக்கு எதிராக மற்றது கூடுதலான அளவுக்கு பகைமையான நிலைப்பாட்டை எடுக்க உந்தித்தள்ளுகிறது." சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் அண்மைய வருடங்களில் முன்னர் இல்லாத அளவு வெப்பநிலை காணப்பட்டது.தொற்றுநோய் இதற்கு விதிவிலக்கல்ல.உறவுமுறையை இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டாபோட்டியே வழிநடத்துகிறது.இசைவிணக்கத்தன்மையும் விவகாரங்களை கையாளுவதில் பக்குவமும் இரு தரப்பிலுமே பெருந்தட்டுப்பாடாக இருக்கிறது.வாணிப பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்கின்ற விவகாரமாக இருந்தாலென்ன அல்லது கிழக்கு மற்றும் தென்சீனக்கடல்களில் உள்ள தகராறுகள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பிரச்சினை அல்லது கொவிட் --19 சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பரஸ்பரம் சேறு பூசுவதாக இருந்தாலென்ன சகலதிலுமே நிச்சயமற்ற நிலையே காணப்படுகிறது " என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச்செயலாளர்( 2009--2011) திருமதி நிரூபமா ராவ் ' த இந்து ' வுக்கு தெரிவித்தார்.

சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சு ஏப்ரில் முற்பகுதியில் நாட்டின் உயர் தலைவர்களுக்கு அனுப்பிவைத்த உள்ளக அறிக்கையொன்றில் கொரோனாவைரஸ் பரவலுக்கு பின்னரான பகைமை அமெரக்காவுடனான உறவுகளை ஒரு மோதல்நிலைக்குக் கொண்டுசெல்லக்கூடும் என்று குறிப்பிட்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையொன்றின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. அமைச்சின் இந்த அறிக்கையை ' நொவிகோவ் தந்திச்யெதியின் ' (China's version of Novikov Telegram )  சீனப்பதிப்பாக சீன புலனாய்வுச் சமூகத்தில் உள்ள சிலர் நோக்குவதாக அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் கூறினார்.1946 செப்டெம்பரில் வாஷிங்டனில் இருந்த சோவியத் தூதுவர் நிக்கலோய் நொவிகோவ் அமெரிக்காவின் நடத்தை பற்றிய தனது ஆய்வை ஒரு அறிக்கையாக மாஸ்கோவுக்கு அனுப்பினார்.அதுவே நொவிகோவ் தந்திச்செய்தி என்று கூறப்படுகிறது.

சோவியத் தலைவர் ஜோசப் ஸ்ராலினுக்கும் வெதியுறவு அமைச்சர் வியாஷேஸ்லேவ் மொலட்டோவுக்கும் அனுப்பிய அந்த அறிக்கையில் நோவிகோவ் உலக மேலாதிக்கத்தில் அமெரிக்கா மிகவும் உறுதியாக இருந்ததாகவும் அதனால் சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பாவில் தாக்குதல் தடுப்பு வலயம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் என்றும் கூறினார்.மாஸ்கோவில் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி ஜோர்ஜ் கெனன் வாஷிங்டனுக்கு அனுப்பிய 8000 சொற்கள் அடங்கிய ' நீண்ட தந்திச்செய்தி' க்கு பதிலாகவே நோவிகோவின் தந்திச்செய்தி அமைந்தது. தனது தந்திச்செய்தியில் கெனன், " பாரியளவில் படைபலத்தையும் ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு சோவியத் யூனியன் கம்யூனிசத்தை பரப்புவதற்கு திடசங்கற்பம் பூண்டிருக்கிறது.சோவியத்துடன் சமாதான சகவாழ்வு சாத்தியமற்றது " என்று குறிப்பிட்டிருந்தார். இந்த இரு தந்திச்செய்திகளிலுமே பனிப்போரின் மூலமுதல்களை வரலாற்றாசிரியர்கள் அடையாளம் காண்பதுண்டு.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது தற்போதைய நெருக்கடி எங்கே சென்றுகொண்டிருக்கிறது ? பதற்றநிலை நீங்கப்போவதில்லை என்று வாஷிங்டனிலும் பெய்ஜிங்கிலும் இந்தியத்தூதுவராகவும்  பணியாற்றிய நிரூபமா ராவ் கூறுகிறார்." அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரை இந்த நிலைவரத்தில் தணிவு சாத்தியமில்லை. தேர்தலுக்குப் பிறகு வெப்பநிலை குறைவடையக்கூடும்.ஆனால், சீனாவை நோக்கிய ஆழமாகப்பதிந்த வெறுப்புணர்வு அமெரிக்காவில் மக்களினது அரசியல் வர்க்கத்தினதும் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கிறது.சீனாவில் தலைமைத்துவமும் மக்களின் அபிப்பிராயமும் மிகையான தேசியவாத உணர்வைக்கொண்டவையாக இருப்பதுடன் ட்ரம்ப் நிர்வாகமே முதன்மையான எதிராளியாக நோக்கப்படுகின்றது.எதிர்கால நிலைவரம் பற்றிய மதிப்பீடு உற்சாகம் தருவதாக இல்லை " என்று அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுமே ஏற்கெனவே பனிப்போரொன்றில் இறங்கிவிட்டன என்று இது அர்த்தப்படாதா? "தற்போதைய நெருக்கடிக்கும் பனிப்போருக்கும் இடையில் ஒற்றுமைகள் இருக்கின்றன.அந்த நாட்களில் சோவியத்யூனியனையும் அமெரிக்காவையும் போன்று இன்று அமெரிக்காவிலும் சீனாவிலும் உள்ள அரசியல் உயர்குழாம்கள் ஒன்றை ஒன்று பிரதான பகையாளிகளாக நோக்குகின்றன.இந்த பகைமை அரசியல் உயர்குழாமில் இருந்து  பொதுமக்களின் உணர்வுகளுக்கு செல்வதையும் எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது.அமெரிக்காவில் இருக்கும் சீன இனத்து துறைசார் நிபுணர்கள் மற்றும் ஏனையவர்கள் இலக்குவைக்கப்படக்கூடும்.அதேபோன்றே சீனாவில் உள்ள அமெரிக்க நபர்களும் நிறுவனங்களும் இலக்குவைக்கப்படலாம் " என்று சிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியரான யாபின் ரி.ஜாக்கோப் கூறினார்.

 கோட்பாட்டு முரண்நிலை
" ஆனால், முக்கியமான வேறுபாடுகளும் இருக்கின்றன.பனிப்போர் காலகட்டத்தின்போது எம்மால் காணக்கூடியதாக இருந்த மறைமுக மோதல்கள்( Proxy war ) மாதிரியானவற்றை   இப்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நாம் காணவில்லை.உலகம் இனிமேலும் இருதுருவமயப்பட்டதாக இல்லை.ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற மூன்றாம் தரப்புகள்  இருக்கின்றன.சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முரண்நிலையுடன் தொடர்புபட்ட பிரச்சினைகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பிரச்சினையின் அடிப்படையில் எந்தத் தரப்பை ஆதரிப்பது என்பதை தீர்மானிப்பதே பொருத்தமானது என்று இந்த மூன்றாம் தரப்புகள் கருதுவதால், எந்த வல்லரசுடன் அணிசேருவது அல்லது அணிசேராமல் விடுவது என்பதில் அவற்றுக்கு தெரிவு தெளிவானதாக இருக்கிறது.இது பனிப்போர் காலத்தில் இருந்தததையும் விட மிகவும் வேறுபட்டதான சர்வதேச ஒழுங்கொன்றுக்கே இட்டுச்செல்கிறது" என்றும் ஜாக்கோப் ' த இந்து  ' வுக்கு கூறினார்.

ஆனால், நவம்பர் தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமான திருப்பத்தை எடுக்கக்கூடும் என்று ஜாக்கோப் எச்சரிக்கிறார்."  பனிப்போர் கம்யூனிஸ்ட் முகாமுக்கும் முதலாளித்துவ முகாமுக்கும் இடையிலான முற்றுமுழுதான கோட்பாட்டு அடிப்படையைக் கொண்டதாகும்.சீனாவைப் பொறுத்தவரை,அது  கம்யூனிஸ்ட் கட்சியொன்றினால் ஆட்சிசெய்யப்படுகின்ற நாடாகும்.அங்கு அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியைப் பேணிப்பாதுகாப்பதே அரச இயந்திரம் முழுவதினதும் பிரதான இலக்காகும்.அது எப்போதுமே கோட்பாட்டு அடிப்படையிலானதாகவே இருந்து வந்திருக்கிறது.சீனாவைப் பற்றிய இந்த கோணத்தை அமெரிக்கா இப்போது விளங்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.குடியரசுகட்சியும்  கோட்பாட்டு ரீதியான உலப்பார்வைகளைக் கொணடிருக்கிறது.ட்ரம்ப் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டால், அமெரிக்க - சீன போட்டிமனப்பான்மையின் கோட்பாட்டு கட்டுமானம் மேலும் கெட்டியாக்கப்படக்கூடும்" என்று அவர் விளக்கினார்.

ஸ்ரான்லி ஜொனி