ஒவ்வோராண்டும் உலக அளவில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். 

இதில் 15 சதவீத பெண்கள், முற்றிய நிலையில் புற்று நோய் கண்டறியப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் மரணத்தைத் தழுவுகிறார்கள். 

இந்நிலையில் மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறிந்தால், அவர்களை நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையாக குணப்படுத்தலாம். இந்நிலையில் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக உணவு முறை ஒன்றை மருத்துவத் துறையினர் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

பெண்கள் தங்களுடைய உடல் எடையைப் பராமரிப்பதற்காக பிரத்யேக உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வையும் பெற்று வருகிறார்கள். இந்நிலையில் மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு அதிக நார் சத்துள்ள உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

மாதவிடாய் சுழற்சிக்கு பின்னரும், முன்னரும் இத்தகைய உணவு முறையை பின்பற்ற தொடங்கியவர்களுக்கு மார்பகப்புற்றுநோய் ஏற்படுவது 8 சதவீத அளவுக்கு குறைந்திருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

இதன் காரணமாக மார்பக புற்றுநோயை தடுக்க அதிக நார்ச்சத்துள்ள உணவு முறையை பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

முழு தானியங்கள், ஓட்ஸ், பார்லி, கம்பு போன்ற காலை உணவுகளும், பேரிச்சம் பழம், முலாம்பழம், ஓரஞ்ச் போன்ற பழங்களும், ப்ராக்கோலி, கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளும், பட்டாணி, பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளிலும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன. 

இதனை நாளாந்த உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

டொக்டர் பிரேம் குமார்.

தொகுப்பு அனுஷா.