“செளமியமூர்த்தி தொண்டமான் , ஆறுமுகன் தொண்டமான் மரபை பேணி பாதுகாக்க மகன் ஜீவன், மருமகன் செந்திலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியிருக்கும்“

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் எதிர்பாராத மரணம் இ.தொ.கா.வின் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது.

சிங்கள பெரும்பாண்மைவாத கட்சிகளின் ஆதிக்கத்தினுள் உள்ள இலங்கை அரசியல் முறைமையின் ஊடாக வெற்றிகரமாக பயணம் செய்வதற்கு ஆறுமுகனைப் போன்று துணிச்சலும் அரசியல் செயல் நோக்கும் ஆற்றலும் கொண்ட ஒரு தலைவரை இ.தொ.கா. கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பல்வேறு போட்டிக் குழுக்களாக பிளவுப்பட்டு போகாமல் இ.தொ.கா வை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு தேவைப்படுகின்ற உறுதியான துணிவாற்றலும் சாதுரியமும் புதிய தலைவருக்கு இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தனியான மிகப்பெரிய ஒரு தொழிற்சங்கமாகவும் அரசியல் கட்சியாகவும் இ.தொ.கா விளங்குகிறது. இ.தொ.கா 1939 ஆம் ஆண்டிலிருந்து மிகவும் செம்மைப்படுத்தப்பட்ட இயந்திரத்துடனான வரலாற்றைக் கொண்டிருக்கிறது என்று அதன் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பி.பி. தேவராஜ் கூறுகிறார். இதுவரையில் இ.தொ.காவுக்கு செளமியமூர்த்தி தொண்டமானும் அவரது பேரனான ஆறுமுகன் தொண்டமானும் பலம்பொருந்திய உயர் தலைவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.

மூத்த தொண்டமான் நாடற்றவர்களாக இருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொடுத்ததுடன், அரசியல் பேதங்களுக்கு அப்பால் அரசாங்கங்களின் இணைந்து தொடர்ந்து செயற்படக்கூடிய போக்கையும் அவர் வகுத்தார். அவ்வாறு அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே  இலங்கைச் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய சமூகத்தவராக இருந்துவந்த தோட்ட தொழிலாளர்களுக்கு உருப்படியான வேலைகளை செய்யலாம் என்பது அவரின் உறுதியான நம்பிக்கை. 

ஆறுமுகன் தொண்டமானை பொறுத்தவரை இ.தொ.கவின் அரசியல் கலாச்சாரத்துக்கு அவர் கொண்டுவந்த ஆக்ரோஷமான துணிச்சல் வரலாற்று ரீதியாக பின்தங்கியவர்களாக இருந்துவந்த  தோட்டத் தொழிலாளர்கள் , தோட்ட முகாமைத்துவங்களுடனும், சிங்கள அரசியல்வாதிகளுடனும் அரசாங்கத்துடனும் விவகாரங்களை கையாளுவதற்கு ஒருவித அதிகார உணர்வை கொடுத்தது. இ.தொ.கா.வில் தகுதிவாய்ந்த, படித்த, ஆற்றல்மிகு இரண்டாவது மட்ட தலைவர்களும் நீண்ட காலமாகவே இந்து வந்திருக்கிறார்கள்.

இ.தொ.கவிலும் பிளவுகள் ஏற்பட்டு பல முக்கியமான தலைவர்கள் தனியான தொழிற்சங்கங்களையும், கட்சிகளையும் அமைப்பதற்கு வெளியேறிச்  சென்றிருந்தாலும் கூட, அது பெருந்தோட்டத் துறையில் தனியான மிகவும் பலம்பொருந்திய ஒரு சக்தியாக தொடர்ந்து விளங்கிவரக்கூடியதாக இருந்தது.

புதிய தலைவர் தற்போதுள்ள நிலவரத்தை பேணிக்காக்க வேண்டியவராக மாத்திரமல்ல இ.தொ.கா.வின் அந்தஸ்தையும் பலத்தையும் மேம்படுத்த வேண்டியவராக இருக்கிறார். ஆறுமுகனின் மகன் ஜீவன் தொண்டமானும், அவரது மருமகன் செந்தில் தொண்டமானுமே அந்த உயர் பதவிக்கு வரக்கூடிய சாத்தியத்தை கொண்டவர்களாக நோக்கப்படுகிறார்கள்.

ஜீவன் ஒரு பாரிஸ்டராகவும் அறிவாற்றலைக் கொண்டவராகவும் இருக்கின்ற அதேவேளை, 24 வயதான அவருக்கு அரசியலில் வெறுமனே ஒரு வருட அனுபவம் மாத்திரமே உள்ளது. அவருக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அனுகூலம் காலஞ்சென்ற தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் என்பதே ஆகும். தெற்காசிய அரசியல் பாரம்பரியத்தின்படி நோக்குகையில் ஜீவன் இ.தொ.காவின் தலைவர் பதவிக்கு தன்னியல்பாக வருவதை சோகத்தில் ஆழ்திருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீவனுக்கு இருக்கக்கூடிய அனுபவக் குறைவை அனுபவம் நிறைந்த இரண்டாவது மட்ட தலைவர்களின் அணியொன்றை உருவாக்கி அவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பதன் மூலம் ஈடுகட்ட முடியும் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மேலும், அனுபவமும் தகுதியும் வாய்ந்த இ.தொ.கா முக்கியஸ்ர்கள் அன்றாட அடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பணிப்புரைகளுக்காக ஒரு தலைவரை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. இது ஜீவனின் அனுபவமின்மையை சமாளிப்பதற்கு உதவ வேண்டும்.

அடுத்ததாக  தலைவர் பதவிக்கு வருவதற்கான சாத்தியத்தைக் கொண்டவரான செந்தில் தொண்டமான் ஆறுமுகன் தொண்டமானின் மருமகனுக்கு புறம்பாக அரசியலில் பத்து வருட கால அனுபவத்தை கொண்டவராக இருக்கிறார். அத்துடன் ஊவா மாகாணத்தில் அமைச்சர் பதவியையும் வகித்து வந்திருக்கிறார். ஊவா மாகாண முதலமைச்சராகவிருந்த சசீந்திர ராஜபக்சவுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பவர் என்ற வகையில் செந்தில் ஆளும் ராஜபக்ச வம்சத்துக்கும் நெருக்கமானவராகவும் விளங்குகிறார். சசீந்திர ராஜபக்ச முதலமைச்சராக இருந்தபோது, அவர் மூலமாக அன்று ஜனாதிபதியாவிருந்த இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் செல்வாக்கைச் செலுத்தி,செந்தில் தனது அமைச்சின் கீழான  திட்டங்கள் பலவற்றுக்கு அரசாங்கத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளக்கூடியவராகவும் இருந்தார். ராஜபக்சாக்களுடன் செந்தில் நெருக்கமான உறவை தொடர்ந்து பேணி வந்துகொண்டிருக்கிறார். தற்போது அவர்  தோட்டத் தொழிற்துறையுடனான பிரதமர் ராஜபக்சவின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கிறார்.

ஆறுமுகன் தொண்டமானின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட உடனடியாக தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்த இலங்கையின் முதலாவது உயர்மட்ட தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், செந்தில் தொண்டமானுக்கு ஒரு குறைபாடு இருக்கிறது. ஜீவன் தொண்டமானைப்போல, செந்திலின் அரசியல் தளம் மலையகத்தமிழர்கள் பிரதானமாக வாழுகின்ற மத்திய மலைநாட்டடின் நுவரெலியா மாவட்டம் அல்ல. அவர் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தையே தனது அரசியல் தளமாகக்கொண்டு செயற்பட்டு வந்திருக்கிறார். 

இ.தொ.கா.வின் உயர்மட்டத் தலைவர்களின் பெரும்பாலானவர்கள் நுவரெலியா மாவட்டத்திலிருந்தே வந்திருந்திருக்கிறார்கள்.  அந்த மாவட்டம் பெருமளவான இந்திய வம்சாவளி தமிழ் உறுப்பினர்களை அனுப்புகிறது. செந்தில் தனது அரசியல் செயற்பாட்டுக்களத்தை நுவரெலியாவுக்கு மாற்றுவதற்கு விரும்பக்கூடும் என சில வட்டாரங்கள் கூறுகின்றன. அவ்வாறு நடைபெறுமானால் அவர் ஜீவனுடன் முரண்பட வேண்டியிருக்கும். அதன் விளைவாக நுவரெலியாவில் இதொகாவில் ஒரு பிளவு கூட ஏற்படலாம்.  இதொகாவிக் அடுத்த தலைவராக யார் வரப்போகிறார்கள் என்பதை தீர்மானிப்பதில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒரு பங்கு இருக்கக்கூடடும் என்றும் கூறப்படுகிறது.

செந்தில் தொண்டாமனுடன் அவர் பேணி வருகின்ற நெருக்கமான உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் அவர் செந்திலை ஆதரிக்கக்கூடும். ஆனால், இதொகா உறுப்பினர்கள் ஜீவனை ஆதரிப்பார்களேயானால், மஹிந்த ராஜபக்ச அவருக்கு தனது ஆதரவை அளிக்கலாம். ஏனென்றால் இதொகாவின் ஐக்கியம் பேணப்படுவதற்கு உதவுவதில் அவர் அக்கறை கொண்டுள்ளார். இதொகா பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள தமிழர்கள் மத்தியில் ராஜபக்சாக்களுக்கான ஆதரவின் முக்கியமானதொரு தூணாக விளங்குகிறது.

பி.கே. பாலச்சந்திரன்