(எம்.எப்.எம்.பஸீர்)


பொதுத் தேர்தலை திட்டமிட்ட பிரகாரம் நடாத்த முடியாமை மற்றும் அதற்கான காரணங்களை  தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் திங்களன்று  உயர்நீதிமன்றுக்கு விபரமாக அறிவிக்கவுள்ளதாக,  ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இன்று உயர் நீதிமன்ற ஐவர் கொண்ட நீதியர்சர்கள் குழாமுக்கு அறிவித்தார்.

தேர்தல் தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக வழிகாட்டல்கள் பல வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்த வழிகாட்டல்களுக்கு அமைய எவ்வாறு தேர்தல் நடை பெறுவது பிற்போகும் என்பது குறித்து தான் விரிவாக மன்றில் விடயங்களை முன்வைக்க எதிர்ப்பார்ப்பதாகவும்  ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்  சுட்டிக்காட்டினார்.

ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான  பரிசீலனைகள் இன்று 9 ஆவது நாளாகவும் மன்றில் பரிசீலிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார,  சிசிரடி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர்   கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றின் 501 ஆம் இலக்க அறையான உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு நிகழ்வுகள் மண்டப அறையில் இவை பரிசீலனைக்கு வந்தன.

இந்நிலையில் அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 15 இடையீட்டு மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்று இன்று நிறைவுக்கு வந்தன.

இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  7 அடிப்படை உரிமைமீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என தீர்மானிக்க முன்னர், மனுதாரர்களுக்கு பதில் வாதங்களை முன்வைக்க கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. 

இந்நிலையிலேயே இன்று மனுக்கள் மீதான பரிசீலனைகள்  நிறைவுக்கு வந்த போது, எதிர்வரும் திங்களன்று விஷேடமாக விடயங்களை தெளிவுபடுத்த எதிர்பார்ப்பதாக கூறி, தேர்தல்கள் ஆணைக் குழு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்படி விடயங்களை மன்றுக்கு தெளிவுபடுத்தினார்.

இடையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்த  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலர் மஹிந்த அமரவீர சார்பில் மன்றில் அஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மன்றில் வாதங்களை முன்வைத்தார். 

பாராளுமன்றை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி பிரகடனத்தில் குறிப்பிடப்படும் தேர்தல் திகதியை மாற்றவோ, அல்லது அதனை பிற்போடவோ, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக அவர் வாதிட்டார்.

அதன்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு அப்பால் உள்ள ஒரு திகதியை தேர்தல் தினமாக தேர்தல்கள் ஆணைக் குழு தீர்மானித்தமை  சட்ட விரோதமானது என மனுதாரர்கள் முன்வைக்கும் தர்க்கம் அடிப்படையற்றது என ஜனாதிபதி சட்டத்ரதரணி பைசர் முஸ்தபா வாதிட்டார். 

இந்நிலையில் ஜனாதிபதியின் வர்த்தமானி பிரகடனம் வலுவிழக்காது எனவும் அதனால் மன்றில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்காது  நிராகரிக்குமாறும் கோரினார்.

இந்நிலையில், மற்றொரு இடையீட்டு மனுதாரரான, அனுர பொன்சேகா சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ, கொவிட் 19 நிலைமையின் இடையே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு எதிர்க்கட்சியின் தலைவர்கள் பலர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு முன்வைத்த மனு அடிப்படையற்றது என தெரிவித்தது.

 கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்டுவதன்  ஊடாக தேர்தலை பிற்போடுவதே, அவர்களது மறைமுக எண்ணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

 வேட்புமனு ஏற்பு உள்ளிட்ட தேர்தல்கள் நடவடிக்கைகள் பல நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல்கள் திகதியை ஆணைக் குழு தொடர்ந்து பிற்போடுவது, தம்மை பொருத்தவறை திருப்தியற்ற செயற்பாடு எனவும் அதனால் தாமதமின்றி  தேர்தலை நடாத்த ஆணைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அவர் உயர் நீதிமன்றில் கோரினார்.

 இதனையடுத்து சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்தவின் இடையீட்டு மனு சார்பில் மன்றில் ஆஜராகிய, சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க விதாரன,  ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலத்ததுடன் அந்த பாராளுமன்றத்தின் காலம் நிறைவுக்கு வருவதாக சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு அவசர நிலைமை ஒன்றினை தவிற ஏனைய சந்தர்ப்பங்களில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்ட ஜனாதிபதி அரசியலமைப்பு ரீதியாக  கட்டுப்பட்டவர் அல்ல என அவர் வாதிட்டார். தேர்தலை நடாத்துவதை தேர்தல்கள் ஆணைக் குழு,  வேண்டுமென்றே பிற்போடுவதன்  ஊடாக பொது மக்களின் வாக்குரிமையை மீறியுள்ளதாகவும், அதனால் அடிப்படையற்ற இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்குமாறு கோரினார்.

 மற்றொரு இடையீட்டு மனுதாரரான, சீத்தாவக்க  பிரதேச சபை உறுப்பினர்  பிரதீப் குமார பனாகொட சார்பில் மன்றில் ஆஜரான  சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய,  பாராளுமன்றம் இல்லாமல், குடியரசொன்று இருக்க முடியாது என வாதிட்டார்.

  கடந்த மார்ச் 2 ஆம் திகதி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி பிரகடனம், ஜூன் 2 ஆம் திகதிவரை மட்டுமே  அதிகாரம் மிக்கதாக இருக்கும் என அவர் வாதிட்டார்.

அரசியலமைப்பின் 70 ஆம் சரத்தில் உள்ள அனைத்து உப உறுப்புரைகளிலும்  பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும், அது அரசியலமைப்பு ரீதியிலான அவசியம் கருதியே அவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய தெரிவித்தார்.

 இதன்போது பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய,  சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரியவிடம் , உங்கள் சேவை பெறுநர், மனுதாரர்கள் கோரியுள்ள  நிவாரணங்களை வழங்கினால் தமக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளதாக ஞாபகப்படுத்தினார்.

அவ்வாறு இருக்கையில் நீர், முன்வைக்கும் விடயங்கள்,  இடையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு நேர் மாற்றமாக இருப்பதாக சுட்டிக்காட்டியதுடன், சேவை பெறுநரின் ஆலோசனையின் பேரிலேயே விடயங்களை முன்வைக்கின்றீர் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய கேள்வி எழுப்பினார்.

 இதனையடுத்து, தனது சேவை பெறுநரிடம் கலந்துரையாட சட்டத்தரணி வர்ணசூரிய காலன் அவகாசம் கோரிய நிலையில் மனு மீதான பரிசீலனைகள் 10 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.

 இந்நிலையில் மீள மனு மீதான பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,  குறித்த மனுவூடாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளுக்கு உதவப் போவதில்லை என்பதை கருத்தில் கொண்டு குறித்த இடையீட்டு மனு மீதான வாதங்களை கேட்பது நிறுத்தப்பட்டது.

 இந்நிலையிலேயே  அனைத்து இடையீட்டு மனுக்கள் மீதான வாதங்களும் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மனுக்கள் மீதான  மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் திங்கள் மு.ப.10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.  அன்றைய தினம் மனுதாரர்களின் பதில் வாதங்களும் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் விஷேட வாதமும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.