தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார கால பகுதியில் மக்களை ஒன்று கூட்டி நிகழ்வுகளை மேற்கொண்டமை , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன் வைத்து கடந்த 17ஆம் திகதி பொலிசார் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதன் போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உள்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. பீற்றர் போல்  அன்றைய தினம்  கட்டளையிட்டிருந்தார்.   

மறுநாள் குறித்த கட்டளைக்கு எதிராக நகர்த்தல் பத்திரம் அணைத்து, குறித்த கட்டளையை மீள பெற வேண்டும் என மன்றிடம் கோரினார்கள். அன்றைய தினம் இரு தரப்பின் வாதங்களை அடுத்து, தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. 

அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் உள்ளாகக் கூடும். அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை மன்றினால் மீளப்பெறப்படுகிறது" என்று நீதிவான் ஏ.பீற்றர் போல், மீளாய்வு விண்ணப்பம் மீது கட்டளை வழங்கினார். 

அதேவேளை வழக்கினை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்ட போது , தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மன்றில் முன்னிலையானர்கள். 

அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , குறித்த வழக்கினை தொடர்ந்து முன்னேடுத்து செல்ல ஏதுவான காரணிகள் இல்லாதமையால் வழக்கினை தள்ளுபடி செய்து,  வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 11 பேரினையும் வழக்கில் இருந்து முற்றாக விடுவித்து விடுதலை செய்தார்.