(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
இலங்கை நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு எதிர்பார்க்காவிடின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துடனான காண்கானிப்புடன் தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியை  தீர்மானிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார். 

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் இவ்வாரம் நடைபெற்ற அமர்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

சிவாஜிலிங்கம் இந்த அமர்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இராணுவப் படையினர் இனப்படுகொலையை நடத்தினர்.   2008 ஆம் ஆண்டு முதல் 2009 மே மாதம் வரை 147000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையில் இவ் வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இது தொடர்பில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதாவது இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக இனப் படுகொலை நடத்தப்பட்டது என்று இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 

நீதியும் சமமான அரசியல் தீர்வும் இல்லாமல் இலங்கைத் தீவில் அமைதி ஏற்படாது. ஏன்   மோதல் இடம்பெற்றது என்பதை புரிந்து கொண்டு அதற்கு பொருத்தமான அரசியல் தீர்வை வழங்க வேண்டும். இது சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் செயற்பட வேண்டும். 

எங்களுக்கு உங்கள் உதவி தேவை. உங்கள் உதவியின்றி எங்களுக்கு நீதியும் அரசியல் தீர்வும் கிடைக்காது. நிரந்தர அரசியல் தீர்வை பெறுவதற்கு இலங்கை ஐக்கிய நாடுகளின் தொழில்நுட்ப உதவியை பெற வேண்டும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலையீட்டுடன் அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்த பேச்சுவார்த்தைகளானது ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட வேண்டும். 

2002 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ஆம் திகதி இரண்டு தரப்புக்களும் சமஷ்டி முறையில் தீர்வுகாண இணக்கம் கண்டதுடன் இதனை சர்வதேச சமூகமும் வரவேற்றது. இப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அப்போதும் பிரதமராகவிருந்தார். இலங்கை நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு எதிர்பார்க்காவிடின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துடனான காண்கானிப்புடன் தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியை  தீர்மானிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.