(இராஜதுரை ஹஷான்)

இலங்கை அரசாங்கம்  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உரிய நேரத்தில், உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தமையினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியுள்ளது என  இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் தெரிவித்தார்.

இந்திய பிரதமருக்கும்,  பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான 30 நிமிட தொலைபேசி உரையாடல்  கடந்த புதன் கிழமை (27) இடம்பெற்றது.

இவ் உரையாடல் தொடர்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் 50 ஆவது வருட அரசியல் வாழ்க்கை நிறைவிற்கு வாழ்த்தினையும், கொவிட்-19 வைரஸ் பரவலை இலங்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதற்கும் இந்திய பிரதமர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு பாராட்டினை தெரிவித்தார்.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவிற்கு இந்திய பிரதமர் இதன் போது தனது அனுதாபத்தை தெரிவித்தார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சார்க் வலய நாடுகளை இணைத்து நிதியத்தை ஸ்தாபித்ததற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராட்டினை தெரிவித்ததுடன், இவ்வாறான செயற்பாடுகள் இரு நாடுகளின் நல்லுறவை மேலும் பலப்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அனுப்ப இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கையினை துரிதமாக முன்னெடுத்ததற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச  இந்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.

மலையத்தில் வீடு, உட்கட்டமைப்பினை துரிதமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

மலையகத்தில் உட்கட்டமைப்பு துறையினை அபிவிருத்தி செய்ய உரிய நிவாரணம் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர  மோடி குறிப்பிட்டார்.