(இராஜதுரை ஹஷான்)

மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்க, தேர்தல் ஆணைக்குழு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுத்தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் நீதிமன்றம்  சிறந்த தீர்வினை வழங்கும் என்பதே பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும். மக்களின் வாழ்வினை நெருக்கடிக்குள்ளாகி தேர்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. தற்போது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை கேள்விக்குற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலை விரைவாக நடத்தி பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணைக்குவிற்கு உண்டு.

பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போடும் விதமாகவே எதிர்தரப்பினர் செயற்படுகிறார்கள். ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் இவர்களது நோக்கத்திற்கு சாதகமாக காணப்படுகின்றது.

பொதுத்தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உரிய ஆதரவினை வழங்கும் என்றார்.