அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது இறுதி நேரத்திலும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காகவே செயற்பட்டுள்ளார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டு என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஒரு  வருடகாலமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்  தோட்டத் தொழிலாளர்களுக்கு  நாளாந்த  சம்பளம் 1000ரூபாவை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் அயராது ஈடுபட்டு வந்தார்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நாட்கூலி 1000ரூபாய்  வழங்கப்படுவதுடன்  பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு  நாட்கூலியாக குறைந்தபட்சம் 2000ரூபாய்  வழங்கப்பட்டு வருகின்றது.  

மறைந்த அமைச்சர்  ஆறுமுகன் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதற்காக தனது  இலங்கை தொழிலாளர்  காங்கிரஸ் கட்சியின்  மூலம்  தோட்டத்  தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து தோட்ட முதலாளிமார்களுடன்  நடத்திய பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்காதமை தொடர்பாக மிகுந்த  கவலையுடன்  காணப்பட்டார். 

 மேலும்  இவ்விடயம்  தொடர்பாக  அரச தலையீட்டைப்  பெற்றுக்  கொள்வதற்காக வேண்டி  அவர்  இறந்த  தினத்திலும் பிரதமருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இன்றைய காலகட்டத்தில் பெருந்தோட்டத்துறை ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் பாரிய இலாபத்தை  முகாமைத்துவக் கம்பனிகள்  தனியாக அனுபவிக்க  இடமளிக்காமல் குறைந்தபட்சம் தொழிலாளர்களுக்கு  1000ரூபாவை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை  எடுக்கவேண்டும். காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் தொழிலாளர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக எமது  ஜனநாயக  இடதுசாரி  முன்னணியும்  ஐக்கிய  தொழிலாளர்  சங்கமும்  மற்றும் ஜனநாயக  தொழிலாளர்  சங்கங்களும்  ஒன்றிணைந்து செயற்படுவதுடன்  அன்னாரின் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்