(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை வல்லவர் போட்டிக்கான தகுதி பெறுவதற்கான லேடன் கிண்ண குத்துச்சண்டை போட்டித் தொடரை எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சம்மேளனத்தின் லேடன் கிண்ண குத்துச் சண்டை போட்டித் தொடர் முலமாக 5 முதல் 8 வரையான வீர, வீராங்கனைகளை ஆசிய குத்துச்சண்டை வல்லவர் போட்டியில் பங்கேற்கச் செய்வது இலங்கை குத்துச்சண்டை எதிர்பார்ப்பாகும்.

எவ்வாறாயினும், வீர, வீராங்களைகளின் தெரிவுக்கான இறுதித் தீர்மானத்தை எடுப்பது இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் தெரிவுக் குழுவே என இலங்கை குத்துச் சண்டை சம்மேளனத்தின் உப தலைவரான ஹேமன்த்த வீரசிங்க தெரிவித்தார்.


இந்த ஆண்டுக்கான ஆசிய குத்துச்சண்டை வல்லவர் போட்டி எதிர்வரும் நொவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் வீர, வீராங்கனைகளை தெரிவு செய்வது குறித்து இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மட்ட குத்துச்சண்டை போட்டிகள் முதல் தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டிகளை நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் தேசிய மட்ட போட்டிகள் 5 , பாடசாலை மட்ட போட்டிகள் 7 என மொத்தமாக 12 போட்டித் தொடர்களை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

போட்டித் தொடர்கள்  மட்டுமல்லாது, இலங்கை குத்துச் சண்டை சம்மேளனத்தின்  அபிவிருத்திப் பணிகள் மற்றும் பாடசாலைகளை மட்டத்தில் மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்திப் பணிகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக இலங்கை குத்துச்சண்டை சம்மேளம் குறிப்பிடுகிறது.