இசையமைப்பாளரும், நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து நடித்திருக்கும் ‘ஜெயில்’ படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கிறது.

‘காவியத்தலைவன்’ என்ற படத்தை இயக்கிய பிறகு, சில ஆண்டுகள் கழித்து தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஜெயில்’. கொமர்ஷல் எக்சன் ஜேனரில் தயாராகி வரும் இந்தப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி நடிக்கிறார். 

இவர் இந்த படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு, ரோபோ சங்கர், பிரேம்ஜி அமரன், சூரி,  ஆனந்த்பாபு, பிரகாஷ்ராஜ், பொபி சிம்ஹா, வம்சி கிருஷ்ணா  உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘ஜெயில்’ படத்தின் அப்டேட் குறித்து, இப்படத்தின் இசை அமைப்பாளரான ஜிவி பிரகாஷ் தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்திருப்பதாவது...

‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்ற ‘காத்தோடு...’ எனத் தொடங்கும் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகவிருக்கிறது. அந்த பாடலை கபிலன் எழுத, நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார்.” என பதிவிட்டிருக்கிறார்.

இதனால் தனுசின் ரசிகர்களும், ஜிவி பிரகாஷ் குமாரின் ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.