கொரோனாவை அடுத்து கடந்த இரண்டு மாத காலமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்டம் கடந்த 26 ஆம் திகதி தொடக்கம் தளர்த்தப்பட்டது.

இதனை அடுத்து மக்கள் உற்சாகமாக தமது கடமைகளை மேற்கொள்ளும் விதமாக தமது வீடுகளிலிருந்து வெளியேறி வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலும் விட்ட பாடில்லை, நாட்டில் அன்றாடம் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது.

இந்நிலையில் மக்கள் சமூக இடைவெளியைப்  பேணத் தவறினாலோ அன்றேல் சுகாதார பழக்க வழக்கங்களைப் பின்பற்ற தவறினாலோ மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதை தவிர்க்க முடியாது போகும்.

இதேவேளை தென்கொரியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகளும் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு அமுலுக்கு வர உள்ளது.

கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி உலகிற்கு முன் உதாரணமாக விளங்கிய நாடு தென் கொரியா எனப் புகழப்பட்டது .

இதனையடுத்து கடந்த மே மாதம்  6 ஆம் திகதி சமூகக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனைத் தொடர்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

தென்கொரியாவின் மக்கள் தொகையில், அரைப் பங்கு மக்களை கொண்ட சியோலின் பெரும் நகரங்களில், கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து சமூக இடைவெளியை மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தொடக்கம் இரண்டு வாரங்கள் அங்கு முக்கிய இடங்கள் மூடப்படவுள்ளன.

உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  கொரோனாவை கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருந்தது தென்கொரியா, குறிப்பாக  வைரஸை பரிசோதித்து சிகிச்சை அளித்தல் போன்ற நடவடிக்கைகளில்  தென் கொரியா வெற்றிகரமாக செயல்பட்டது. 

எனினும் மக்கள் தொடர்ந்தும் சமூக இடைவெளியை, சுகாதார பழக்க வழக்கங்களை கையாளத் தவறியமை, மீண்டும்  கொரோனா தலைகாட்டக் காரணமானது என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தென்கொரியாவுக்கு மாத்திரமல்ல உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமே பொருத்தமானதாக இருக்கும். இலங்கையிலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அரசின் பாதுகாப்பு அறிவித்தல்களை பின்பற்றத் தவறினால், மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதை தவிர்க்க முடியாது போகும்.

எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்