மக்களின் கோரிக்கையையே நாங்கள் முன்வைக்கின்றோம் ; மக்கள் வேறு நாங்கள் வேறு இல்லையென்கிறார் சிவாஜிலிங்கம்

By T Yuwaraj

29 May, 2020 | 02:48 PM
image

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை போர் குற்றங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பதைத்தான் நாங்கள் கூறிவருகின்றோம் நாங்கள் சுயமாக வாழ்வதற்கே இதைக்கோருகின்றோம்.

இதைத்தான் எமது மக்களும் அரசியல் தலைமைகளும் முன்வைத்து வருகின்றார்களே தவிர மக்கள் வேறு நாங்கள் வேறு இல்லை என தமிழ்தேசிய மக்கள் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிதார்.

தனிநாட்டுக் கோரிக்கை சாத்தியமில்லை கள நிலவரங்களை புரிந்து கொண்டு தமிழ் அரசியல் வாதிகள் செயற்படவேண்டும் எனவும் தமிழ் மக்களின் விருப்பம் வேறு அரசியல் வாதிகளிகள் விருப்பம் வேறு என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தங்களுக்கான உரிமைகள் வேண்டும் என்பதைத்தான் அவர் சார்ந்த கட்சி தலைவர்கள் ஊடாக 1956 ஆம் ஆண்டில் இருந்து வற்புறுத்தி வந்துள்ளார்கள்.

இதுதான் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைவர்கள் தமிழ்த்தலைவர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்து ஏமாற்றியதன் பின்னர்தான் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது மாத்திரமன்றி 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதை ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக கோரிய போது அதற்கு மக்கள் மிகப் பெரிய ஆதரவை வழங்கியிருந்தார்கள். 

ஆனால் அதன் பின்னரும் கூட தமிழ் தலைமைகள் தமிழீழ தனிநாட்டுக் கோரிக்கையைவிட்டு மாவட்ட அபிவிருத்தி சபை போன்ற திட்டங்களை ஏற்பதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தி தங்களைத் தாங்களே பலவீனப்படுத்திக் கொண்டமையால் மற்றும் இனப் படுகொலையைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் பெருமளவில் 1983 விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

ஐந்து தமிழ்ப் போராளிகள் இயக்கத்திற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஆறு அமைப்புக்ளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கூட நாங்கள் தனித் தமிழீழக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. இதன் பின்னணியில் தான் 1983 ஆம் ஆண்டைத் தொடர்ந்து ஆறாவது திருத்தம் தமிழ்த் தனிநாடு கோரிக்கையை தடுக்கின்ற வகையில் அன்றைய ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்த்தன கொண்டு வந்தார்.

இதை ஏற்க மறுத்துத்தான் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியை இழந்தார்கள். பின்னரும் தொடர்ச்சியாக தனிநாட்டு விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடைபெற்று 2009 இல் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கூட இன்று வரை 11 ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு சரியான மறுவாழ்வு இல்லை, நீதி கிடைக்கவில்லை இந்தச் சூழ்நிலையில் தான் நாங்கள் இப்பொழுது சர்வதேச ரீதியாக நடைபெற்ற இனப்படுகொலை போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவில் நீதிமன்றத்திற்கு இந்த விடையம் கொண்டு செல்லப்படவேண்டும். இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

இதனை விட இலங்கை அரசாங்கம் இலங்கைத் தீவுக்குள்ளே புதிய அரசியல் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான முயற்சி கூட தோல்வியடைந்துள்ளது. வரலாற்றில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து நல்லாட்சி அரசாங்கதிற்கான ஒரு தீர்வுத் திட்டத்தை கொண்டுவரமுடியவில்லை என்றால் அல்லது இருக்கக்கூடிய திட்டத்திலே ஏதாவது முன்னேற்றங்களை காணவில்லை. 

குறிப்பாக 13 ஆம் திருத்தத்திலே காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரத்தைக் கூட கொடுக்கக்கூட தயாராக இல்லாத நிலையில் சூழலில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் 13 ஆவது திட்டத்தை தொடர்ந்த மகிந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தை காலி முகத்திடலில் நடத்திய போது மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையில் ஞாபகம் இருந்தது.

அதில் என்னுடன் அமைச்சரவையில் இருந்த டக்ளஸ் தேவானந்தா தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவர் ஆனந்தசங்கரி போன்றவர்களின் கேட்டது போன்று இந்தியாவில் இருப்பது போன்ற மாநில சுயாட்சியாவது வழங்கவேண்டும் என்றார்.

இப்பொழுது இந்தியா வற்புறுத்தியும் மாநில சுயாட்சியும் இல்லை , 13 ஆவது சட்டமும் இல்லை.

மாகாண சபை பெறிமுறையை தற்போதைய ஜனாதிபதி ஒழிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலமைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் ஆகவே தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதைத்தான் தமிழ் அரசியல் தலைமைகள் பிரதிபலிக்கின்றார்கள். தமிழ் மக்கள் வேறு தமிழ்தலைமைகள் வேறு என்று கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.

நாங்கள் வற்புறுத்துவது போன்று இனப்படுகொலை போர் குற்றங்களுக்கு நீதி விசாரணை வேண்டும் இதனை விடுத்து இலங்கையின் சிங்கள பௌத்த அரசுகளின் வெறித்தன செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் இந்த நாடு துண்டாடப்படமாட்டாது என்று எவராலும் கூறமுடியாது. 

அரசாங்கம் தான் மக்களின் மனநிலையை பிரிவினையை நோக்கிக் தள்ளுகின்றீர்கள் என்பதுதான் கள யதார்த்தம் சிங்கள பெளத்த மேலான்மை மேலோங்க மேலோங்க இந்த நாடு பிளவு படுவதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right