யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்ட முடக்க நிலைமைகள் காரணமாக வழமையான மீன் பிடி உற்பத்தியின் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியே காணப்பட்டது.

என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் த.சுதாகரன் தற்போது யாழ்ப்பாணத்தின் மீன்பிடி வழமைக்கு திரும்பி வருவதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் மாதாந்தம் ஒரு இலட்ச்சத்து 60 ஆயிரம் கிலோ மீன் பிடி உற்பத்தி இடம்பெறுவது வழமை.எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சில நாட்கள் மீன்பிடி தடைப்பட்டிருந்தது.எனினும் கடற்தொழில் அமைச்சரின் முயற்சியின் பலனாக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட்னர்.

எனினும் சில மீனவர்கள் தாமாக கடலுக்கு செல்வதை தவிர்த்து வந்தனர்.மீன்கள் ஏற்றுமதி செய்வதிலும் சில தடங்கல்கள் இடம்பெற்றன. இதனால் கடந்த இரு மாதங்களாக 50 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் கிலோ வரையான மீன்பிடி உற்பத்தியே இடம்பெற்றது.எனினும் தற்போது உற்பத்தி வழமைக்கு திரும்பியுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் வீசிய அதிக காற்றின் காரணமாக சில மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.சிலரது படகுகளும் சேதமடைந்துள்ளன. இவ்வாறு சேதமடைந்த படகுகள் காப்புறுதி செய்யப்பட்டுள்ளமையினால் அவர்களுக்கான காப்புறுதிகள் கிடைத்துள்ளன.

சிலரது வாடி வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த காற்றின் தாக்கம் காரணமாக பாதிப்படைந்த குடும்பங்களின் விபரங்கள் கடற்தொழில் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.