ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக மக்களுக்கு மாத்திரமல்ல, இலங்கை வாழ் அனைத்து  சிறுபான்மை சமூகங்களுக்கும் பேரிழப்பாகும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன்  தொண்டமான், திடீர் உடல் நலக் குறைவினால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது காலமான செய்திகேட்டு கவலையடைந்தேன்.

மலையகத்தின் மூத்த  தொழிற்சங்கவாதியாகவும்,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக இருந்து அவர் செயற்பட்டு வந்தார்.

அத்துடன்,  தற்போதைய அரசாங்கத்தின் மிகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சராகவும்  ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அமரர் ஆறுமுகன் தொண்டமான், 1994 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்தவர். தனது பாட்டனார் சௌமிய மூர்த்தி தொண்டமானால் முறைமையாகப் பயிற்சியளிக்கப்பட்டவர்.  1999 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவியை ஏற்றதிலிருந்து, சுமார் இருபது வருடங்கள் அவர் மலையக சமூகத்தில் மாற்றங்களை  ஏற்படுத்தியவர். 

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்று கற்றுத் தேர்ந்தவர். அவரிடம் சமூகத் தலைவனுக்குரிய ஆளுமைகள் நிறையவே இருந்தன.

மலையக மக்களுக்கு  விசுவாசமான முறையில் சேவையாற்றிய ஒரு அரும் பெரும்  தலைவர் என அவரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தோட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அரும் பாடுபட்டவர். மக்களை நேசித்தவர். நேர்மையான நிர்வாகி. அவரது இழப்பு, மலையக மக்களுக்கு மாத்திரமல்ல,  இலங்கை வாழ் சிறுபான்மைச்  சமூகங்களுக்கும் பேரிழப்பாகும். 

நான் அவருடன் 1999 ஆம் ஆண்டு முதல் நெருங்கிப் பழகியிருக்கின்றேன். மிகவும் நன்மதிப்புமிக்க உயர்ந்த தலைவராகத் திகழ்ந்தார்.

அமரர்  அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினால் துயரில் சிக்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கும், தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றுள்ளது.