இன்றைய திகதியில் பெண்கள் தங்களது எடையை குறைக்க ஒரு உணவு முறை, தங்களது ஆரோக்கியத்தைப் பராமரிக்க ஒரு உணவு முறை, தங்களது தோற்றப் பொலிவை பராமரிக்க ஒரு உணவு முறை... என ஒவ்வொரு உணவு முறையை, குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்பற்றி வருகிறார்கள். 

இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு குறைபிரசவம் ஏற்படாதிருக்க கடைபிடிக்க வேண்டிய உணவு முறை குறித்து, மகப்பேறு மற்றும் ஊட்டசத்து மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய திகதியில் உலகளவில் குறைபிரசவத்தில் பதினைந்து மில்லியன் குழந்தைகள் பிறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கிறது.பொதுவாக பெண்கள் கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாத காலத்தின் முடிவில் தான் வயிற்றில் இருக்கும் சிசு முழுமையாக உருவாகின்றன. 

இதனால் பெரும்பாலான மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கருவுறத் தொடங்கும் காலகட்டத்திலேயே பின்பற்ற வேண்டிய உணவு முறை குறித்து, பெண்களிடம் ஒரு வகையினதான உணவு முறையை எடுத்துரைக்கிறார்கள். அதிலும் மூன்றுவித சத்துக்களைக் கொண்ட காய்கறி உணவு முறையை பிரதானமாக வலியுறுத்துகிறார்கள். 

இத்தகைய காய்கறி உணவு முறையில் கேரட் ,காலிபிளவர், பிராக்கோலி, பூசணிக்காய், முட்டைகோஸ், பச்சை பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும், இதனுடன் கால்சியம் மற்றும் இரும்புச் சத்துள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்று எடுத்துரைக்கிறார்கள். 

இத்தகைய உணவு முறையை தவறாது மேற்கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படுவதில்லை என்று அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.