நாடு சுதந்திரமடைந்த காலம் தொட்டு தமிழ் பேசும் மக்களின், பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் அவ்வாறு கபளீகரம் செய்யப்பட்ட இடங்களில் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் நிறுவப்படுவதாகவும் தமிழ்பேசும் மக்கள் தொடர்சியாக  குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக யுத்தம் முடிவடைந்த கையோடு  வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பௌத்தமக்கள் வாழாத இடங்களில் கூட விகாரைகள் அமைக்கப்பட்டு, மிகுந்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. மேலும் தொல்பொருள் பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.  இது பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் அநாவசியமான கருத்து மோதல்களுக்கும் பிளவுகளுக்கும் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . 

இந்நிலையில் பூர்வீக வரலாற்று சிறப்புமிக்க கிழக்கு மாகாணத்தின், பல்வேறு பிரதேசங்களை தொல்பொருள் பாதுகாப்பு என்ற போர்வையில், பௌத்த மயமாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பா.அரியநேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.  

இது தொடர்பில் அவர் கூறுகையில், தொல்லியல் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகளை முற்றுமுழுதாக அபகரித்து, இலங்கையை பௌத்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி முற்பட்டுள்ளார்.   

இதன் பொருட்டு நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கமால்குணரட்ண தலைமையில், விசேட செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

புனித பூமி என்ற ரீதியில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காக அம்பாறையில் 247 இடங்களும் திருகோணமலையில் 74 இடங்களும் மட்டக்களப்பில் 28 விகாரைகள் உட்பட 55 இடங்களும் பௌத்த மதத்துடன் தொடர்புடைய தொல்லியல் இடங்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் பல திட்டமிட்ட குடியேற்றங்கள் எல்லைப்புறங்களில் ரகசியமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.

 வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இவ்வாறு தமிழ் பூர்வீக இடங்கள் அபகரிக்கபடுவதும், பின்னர் அங்கு சட்டவிரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது .  

இது தொடர்பில் தமிழ்த்தரப்புக்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு அவ்வப்போது கொண்டு வந்துள்ளன . அதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் அகிம்சை வழியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர் .  எது எவ்வாறிருந்த போதிலும் மாறி மாறி பதவிக்கு வந்த இரு பிரதான கட்சிகளும், இவ்விடயத்தில் எவ்விதமான ஆக்கபூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை . மாறாக குறித்த நடவடிக்கைகளுக்குஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளன.

இது தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த விரக்தியையும் வெறுப்பையும் உருவாக்கி வந்துள்ளது . 

இதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தொடராமல் இருக்கவும் தமிழ் மக்களின் பூர்வீக  பிரதேசங்கள் தொல்பொருள் பாதுகாப்பு என்ற போர்வையில் கபளீகரம் செய்யப்படாது இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்