இலங்கை றோட்டரிக் கழகம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களைக் கையாள்வதற்கான மருத்துவ உபகரணங்களை இலங்கை  மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனத்திடம் வைபவ ரீதியாக அண்மையில் கையளித்துள்ளது.

 கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த  வைபவத்தில் சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் நாயகம், மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனத்தின் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சினதும் ரோட்டரி கழகத்தினதும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

றோட்டரிக்கழகத்தால்  மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனத்திற்கு முதலாவது கட்டமாக  அன்பளிப்புச் செய்யப்பட்டவற்றில் 6 பகுதி குருதியியல் பகுப்பாய்வு உபகரணங்கள், 3 உயர் அழுத்த வெப்ப கருவி, வைரஸ் சேகரிக்கும் கருவி மற்றும்  வைரஸ் மரபணுவைப் பிரிக்கும் சிறிய கருவிகள் என்பன உள்ளடங்குகின்றன.

மேற்படி நிகழ்வு குறித்து றோட்டரிக்கழகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் தினேஷ் குமாரால் வெ ளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கையிலுள்ள றோட்டரிக்கழகம் கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த கட்டத்தில்  அது தொடர்பில் செயலாற்றிய இலங்கையின் முதலாவது சேவை அமைப்பாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

அந்த  வகையில்  றோட்டரிக்கழகம் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகளை விரைவாகவும் மேலும் துல்லியமானதாகவும் மேற்கொள்வதற்கு  இலங்கை மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனத்திற்கு மீள் உபகரண வசதிகளை செய்து தரவும் அந்த ஸ்தாபனத்தின்  உபகரணங்களை  நவீனமயப்படுத்தவும்  உதவுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் இது அந்த ஸ்தாபனத்தை மேலும் வினைத்திறனுடனும்  மேலும் நிறைவாகவும் செயற்படவும் அந்த ஸ்தாபனம் பரிசோதனைத் தொழில்நுட்பங்களில் தன்னை சர்வதேச நியமத் தராதரத்திற்கு உயர்த்திக் கொள்ளவும் உதவும் என அவர் கூறினாhர்.

மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனத்துடன் தொடர்புபட்ட மருத்துவ உபகரணங்கள், நாடெங்கிலுமுள்ள  மருத்துவமனைகள்; மற்றும் சுகாதார அமைச்சு அலுவலகங்களுக்கான ஏனைய அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்கள் என்பன  உள்ளடங்கலாக  மேற்படி மொத்தத் திட்டத்திற்கும் சுமார் 150 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.