(இராஜதுரை ஹஷான்)

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு பெருந்தோட்டத் துறை மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என்னை சந்தித்து கலந்துரையாடிய கடைசி நேரத்திலும் தன்னுடைய மக்கள் மீது கொண்டிருந்த பொறுப்புணர்வை நான் பெரிதும் போற்றுகிறேன்.

கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைமைக்குக் கொண்டுவருவது தொடர்பாக தனது வாழ்க்கையின் இறுதி மணி நேரத்திலும் என்னுடன் கலந்துரையாடியதை மறக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் குடும்பத்திற்கும் பெருந்தோட்ட மக்களுக்கும் இடையிலான உறவானது மரம் மற்றும் பட்டையைப் போன்று பிரிக்க முடியாத உறவாகும்.

ஆறுமுகன் தொண்டமானின் தாத்தா சௌமிய மூர்த்தி தொண்டமான் தொடக்கம் தற்போது வரை பெருந்தோட்ட மக்களுக்கு ஆற்றிய சேவை சிறப்பானதாகும்.

பெருந்தோட்ட மக்கள் இன்று அனுபவிக்கும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் தொண்டமான் குடும்பம் செய்த பல தியாகங்களின் பிரதிபலனாகும்.

பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்படுவதிலிருந்து, இந்த நாட்டு குடிமக்களாக வாழ சூழலை உருவாக்கியது வரை தொண்டமானின் குடும்பம் செய்த சேவைகளின் சிறந்த சேவையாகும்.

தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஜனநாயகத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டவராகும்.

பெருந்தோட்ட மக்களிடையே பயங்கரவாதிகள், அதன் சிந்தனையாளர்களுக்கும் இடம்கொடுக்கப்படாதமைக்கான கௌரவத்தை எப்போதும் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் நிகழ்ந்த காலத்தில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒரு ஜனநாயகத் தலைவராக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆதரவு அப்போது நமது அரசாங்கத்திற்கு முக்கியமானதாக காணப்பட்டது.

பாராளுமன்றத்திற்கு செல்வதற்காக தன்னுடைய மக்களை அடிப்படைவாத கனவுகளுக்கு தள்ளிவிட்டு இனவாதத்தை தோற்றுவித்து, வாக்குகளை பெறும் கொள்கை அவரிடத்தில் இருக்கவில்லை.

தன்னுடைய பிரதேசத்திற்குள் அனைத்து தேவாலயங்கள், அனைத்து இனங்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்தது. விகாரைகள் கட்டும் போது ஆறுமுகன் தொண்டமான் முன்னின்றதுடன், பெருந்தோட்ட மக்களிடையே இன மற்றும் மத வேறுபாடுகளை ஒதுக்கி வைக்கும் உன்னத மனிதர்கள் இருப்பதாக அவர் உலகுக்கு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நடைமுறை தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்க்கையை பாதுகாத்து, மகிழ்ச்சியானதாக மாற்றுவதற்கான நடைமுறைப்பார்வை அவரிடத்தில் இருந்தது.

பெருந்தோட்ட வீடுகள், சிறந்த வேலைவாய்ப்பு, சம்பளம், நெடுஞ்சாலைகள், மின்சாரம் மற்றும் ஒரு பல்கலைகழகத்தை பெறுவது போன்ற நடைமுறைக்கு சாத்தியமானவற்றை பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

அவர் பெருந்தோட்ட மக்களை எப்போதும் எங்கள் மக்கள் என்றே அடையாளப்படுத்துவார்.

அவருடன் எங்களுக்கு நீடித்த நட்பு உள்ளது. ஆகவே, அவர் தொடர்பான நினைவை மனதில் நிறுத்திக் கொண்டு ஆறுமுகன் தொண்டமானுக்கு விடைகொடுப்போம்.