நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் இன்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் திட்டம் சீரற்ற  வானிலை காரணமாக  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ரொக்கெட் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விண்ணுக்கு செல்வதாக இருந்தது .

இந்த நிகழ்வைக் காண அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

ஆனால் இது சீரற்ற வானிலை காரணமாக விண்ணுக்கு ஏவப்படுவதற்கு 17 நிமிடங்களுக்கு முன்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனால் வரும் சனிக்கிழமை இந்த ரொக்கெட் ஏவப்பட உள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து இந்த ரொக்கெட் சனிக்கிழமை ஏவப்பட்ட உள்ளது.

இங்கு இருந்துதான் அப்போலோ 11 மூலம் நிலாவிற்கு நாசா மனிதர்களை அனுப்பியது.

வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்கள் இருவரும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

9 வருடங்களுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து முதல் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ரொக்கெட் புறப்படுகிறது.

2011 இல் இருந்து நாசா தன்னுடைய விண்வெளி ரொக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது இல்லை. ரஷ்யாவின் சோயஸ் விண்வெளி ரொக்கெட்டைதான் நாசா நம்பி இருக்கிறது.

நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் செல்ல இருக்கிறார்கள். அதிக அனுபவம் கொண்டவர்கள் இவர்கள்.

இவர்கள் 2000 ஆம் ஆண்டே இதற்கு தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பயிற்சிகளை செய்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் விண்ணுக்கு பறந்தவர்கள். இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள். அனுபவத்தின்படி இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.