மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான இயன் பிஷப்பின் கனவு அணியில் இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான லசித் மலிங்க பெயரிடப்பட்டுள்ளார்.

இயன் பிஷப் கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு தனது கனவு அணியொன்றை உருவாக்கியுள்ளார். அந்த கனவு அணியில் இந்தியர்கள் மூவர், தலா இரண்டு அவுஸ்திரேலியர்கள் மற்றும் தென் ஆபிரிக்கர்கள், இலங்கை, நியூஸிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து தலா ஒருவருமாக இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உடனான சமூகவலைத்த உரையாடலில், தன்னுடைய தலைசிறந்த ஒருநாள் அணியின் விபரங்களை பகிர்ந்துகொண்டார். 

அதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் ஷர்மாவும், அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னரும் இடம்பெறுகின்றனர். இவர்கள் இருவரும் 2019 உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள்.

இதற்கடுத்து மூன்றாம் நிலை வீரராக விராட் கோஹ்லியை தெரிவு செய்துள்ளார் இதற்குக் காரணம் கோஹ்லியின் சீரான ஓட்டக் குவிக்கும் திறனே என பிஷப்  தெரிவித்துள்ளார்.

அதற்கடுத்த வரிசையில் தென்  ஆபிரிக்காவின் ஏ.பி. டி வில்லியர்ஸ், நியூஸிலாந்தின் ரொஸ் டெய்லர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் அதிரடித் துடுப்பாட்டத்துக்கும், அதேவேளை நிலையான துடுப்பாட்டத்துக்கும் சொந்தக்காரர்கள் என விளக்கமளித்துள்ளார்.

இதற்கடுத்தபடியாக சகலதுறை ஆட்டக்காரராக பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் இடம் பிடித்துள்ளார்.  மஹேந்திர சிங் தோனியை விக்கெட் காப்பாளராக தெரிவுசெய்துள்ள பிஷப், அவரை இவ்வணியின் தலைவராகவும் நியமித்துள்ளார்.

பிஷப்பின் அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் மிச்செல் ஸ்டார்க், லசித் மாலிங்க தென் ஆபிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பிடித்துள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத்கான் சுழற்பந்துவீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.