அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இயக்கத்தில்,‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகிவரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் மூத்த நடிகை கனிகா ஈழ ஏதிலியாக நடிக்கிறார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில்,“ அண்மையில் எம்முடைய இயக்கத்தில் வெளியான ‘மா’ என்ற குறும்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. உண்மையில் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக தாய்மார்களின் பாராட்டு எம்மைச் சிலிர்க்க வைத்தது. 

இந்த குறும்படத்தின் படப்பிடிப்பை லொக் டவுனுக்கு முன்னதாகவே முடித்துவிட்டேன். படத்தின் ஏனைய பணிகளை லொக்டவுன் காலகட்டத்தில், தொலைபேசி மற்றும் இணையவழியாகப் பேசிக் கொண்டே பணியாற்றினோம். முதலில் பதற்றமாக இருந்தது. பிறகு இயல்பானது. 

திரைப்படத்துறையில் 17 ஆண்டுகாலமாக நடித்தும், பின்னணிப் பேசியும், பாடியும் வருகிறேன். குறும்படத்தை இயக்கியது ஒரு பரிசோதனை முயற்சி தான். இந்த அனுபவத்தை வைத்து, திரைப்படத்தை இயக்குவதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை.

தற்போது நான் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துவரும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற படத்தில், தமிழகத்தில் வாழும் ஈழ ஏதிலியாக நடித்திருக்கிறேன். நான் அந்த கதாபாத்திரத்திற்காக இலங்கைத் தமிழில் பேசவிருக்கிறேன். விரைவில் அதற்கான பின்னணி பேசுவேன் என்று எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘கோப்ரா’ என்ற படத்திலும் நடித்துவருகிறார்.