( மயூரன் )

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பில் புதிய சாட்சியம் ஒன்று கிடைத்துள்ளதாக குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். 

இந்த வழக்கு விசாரணையின் போதே குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் தற்போது குறித்த வழக்கு தொடர்பில் புதிய சாட்சியம் கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்றில் தெரிவித்தனர். 

அத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் அறிந்தவர்கள் தாமாக முன் வந்து சாட்சியம் அளித்தால் வழக்கு விசாரணைகளை துரிதகதியில் மேற்கொள்ள முடியும். எனவும் தெரிவித்தனர். 

அதேவேளை மாணவி படுகொலை செய்யப்பட்ட தினத்தை அண்டிய கால பகுதியில் மாணவி வசித்த கிராம சேவையாளர் பிரிவில் குடியிருந்த குடும்பங்களின் விபரம், சம்பவத்தின் பின்னர் குடும்பங்கள் எவையேனும் வெளியேறி இருந்தால் அவற்றின் விபரம், சம்பவம் நடைபெற்ற காலத்தை அண்டிய கால பகுதியில் வெளியில் இருந்து வந்து எவரேனும் குறித்த பகுதியில் வசித்திருந்தால் அவற்றின் விபரம் ஆகியனவற்றை அடுத்த தவணை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என கிராம சேவையாளருக்கு நீதிவான் பணித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.