(இரா. செல்வராஜா)

நாட்டில் நாளையும் மழையுடனான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுடன் 260 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி குக்குலே கங்கையிலும், 160 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எஹலியகொடையிலும் பதிவாகியதாக வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில்,

'நாளை  கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யும்.

கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற் பிராந்தியங்களில் 2.5 முதல் 3 மீற்றர் வரை அலைகள் மேலெழும்பக்கூடும்.

குறித்த கடற் பிராந்தியங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் திடீரென காற்று அதிகரித்து வீசும். அத்துடன் கடும் மழை பெய்வதுடன் கடலும் கொந்தளிப்பாக காணப்படும்.

இதனால் ஆழ் கடலுக்குச் செல்லும் மீனவர்களும்இ ஆழமற்ற கடற் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களும் கடும் அவதானத்துடன் தொழில்களில் ஈடுபடவேண்டும்' என்றார்.