(லியோ நிரோஷ தர்ஷன்)

மூன்று மாதங்கள் மாத்திரமே ஆயுட்காலம் கொண்ட ஜனாதிபதியின் வர்த்தமாணி அறிவிப்பு , அரசியலமைப்பின் பிரகாரம்  ஜுன் மாதம் 2 ஆம் திகதியுடன் காலாவதியாகின்றது. அன்றிலிருந்து பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் சபாநாயகர் வசமாகின்றது என தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , இந்த அரசியல் நெருக்கடியை தவிர்க்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியமாகின்றது.

17 ஆவது அரசியலமைப்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டாலும் 19 ஆவது அரசியலமைப்பின் ஊடாகவே வலுப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டிய இல்லத்தில் இன்று புதன்கிழமை  கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியப்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெளிவுப்படுத்துகையில் , 

உலக பொருளாதார சுட்டெண்ணுக்கமைவாக இலங்கை படுமோசமானதொரு நிலையிலேயே உள்ளது. எனவே தான் நாட்டின் உண்மை நிலையை தெரியப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரினேன்.

பாரியதொரு கடன் பொறிக்குள் சிக்கிவிட்டுள்ளோம். சுற்றுலாத்துறை மற்றும் ஆடை உற்பத்தி என்பவற்றின் மீது மாத்திரம் நம்பிக்கை வைத்து செயற்பட முடியாது. உரிய திட்டமொன்று அவசியம் .

அந்நிய செலாவணியை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் தேடப்பட வேண்டும். இதனை மையப்படுத்திய வெளிவிவகார கொள்கையொன்று அவசியமாகவுள்ளது. 

ஆகஸ்ட் மாதம் 15 மற்றும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதிற்கு இடைப்பாட்ட காலப்பகுதியிலேயே பொதுத்தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. நீதிமன்றத்தின்  தீர்ப்பின் பிரகாரமே தேர்தல் ஆணைக்குழு செயற்பட வேண்டியதுள்ளது. 70 நாட்கள் அவசியம் என்பதையும் சுயாதீன தேர்தல்கள்  ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

எனவே ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே நாம் தற்போது செயற்பட வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவை பாதுகாத்தல் மாத்திரமே நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். ஆணைக்குழுவை தற்போது விமர்சிப்பவர்கள் எதிர்க்கட்சிக்கு சென்ற பின்னர் அதன் தேவையை உணர்வார்கள்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழு மக்கள் குறித்து சிந்தித்தே செயற்பட வேண்டும். அதே போன்று மக்களின் உரிமைகளுக்காக நாம் எப்போதும் முன்னிக்க வேண்டும்.  அரசியல் கட்சி என்ற வகையில் தற்போது நாம் தேர்தல்கள் அணைக்குழுவை பாதுகாக்க வேண்டும். ஆணைக்குழுவை இல்லாதொழிக்கும் வகையிலேயே தற்போது செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

ஏனெனில் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டாலும் அதிகார கட்டமைபொன்று காணப்பட வில்லை. ஆனால் 19 ஆவது அரசியலமைப்பின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவும் வலுப்பெற்றது. 

பாராளுமன்றத்தை களைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு காலாவதியாகாது என்றே சட்டமாதிபர் கூறுகின்றார். ஆனால் எதிர்வரும் ஜுன் மாதம் 2 ஆம் திகதியுடன் அரசியலமைப்பின் அடிப்படையில்   பாராளுமன்ற தேர்தலுக்காக ஜனாதிபதியின் குறித்த வர்த்தமானி காலாவதியாகி விடும். ஏனெனில் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு மூன்று மாதகாலம் மாத்திரமே செல்லுப்படியாகும். அன்றிலிருந்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு செல்கின்றது. இந்த சிக்கலை தவிர்க்க உயர் நீதிமன்ற தீர்ப்பு முக்கியமாகின்றது. 

எனவே பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் அதிகாரம் சபாநயகருக்கு உள்ளது என்ற கட்டளையை நீதிமன்றம் ஊடாக பெற்றுக்கொள்ளவே நாம் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறானதொரு கட்டளை  ஏற்பட்டால் மீண்டும் பாராளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதிக்கு தீர்மானிக்கவும் முடியும். அவ்வாறு இல்லையென்றால் ஆகஸ்ட் மாதத்துடன் களைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைகின்றமையினால்  தேர்தல் குறித்த முழு அதிகாரமும் ஆணைக்குழுவிற்கு செல்லும்.