(எம்.மனோசித்ரா)

2021 ஆம் ஆண்டில் அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் தமது பிள்ளைகளை அனுமதிக்க எதிர்பார்க்கும் பெற்றோர் அல்லது சட்டரீதியான பாதுகாவலர்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமையவும் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரிக்கு ஏற்ப தயார் செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமக்குப் பொருத்தமான பாடசாலைகளின் அதிபர்களுக்கு  ஜுலை 15 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்புதல்  வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து தகுதிகளும் பூர்த்தியாக்கப்படவேண்டியது ஜூன் 30 திகதிக்கு செல்லுபடி ஆகுமாறு இருப்பதோடு அனைத்து எழுத்து ஆவணங்களும் அத்தினத்துக்கு இணங்க சமர்ப்பிக்கப்படவேண்டும்.

பிள்ளையின் பிறப்பு சான்றிதழின் பிரதி ஒன்றினையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விபரங்களை சான்றுதிப்படுத்த தேவையான ஆவணங்களின் பிரதிகளையும் சத்தியக்கடதாசி மூலம் உறுதிப்படுத்தி விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.

முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதித்தல் தொடர்பான அறிவுறுத்தல்களும், ஆலோசனைகளும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை அவதானித்து விண்ணப்ப படிவங்கள் பூரணப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.