இந்திய அரசாங்த்திடம் வரி விலக்கு (duty free) அனுமதி வாங்காவிடில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் உலக இருபதுக்கு 20 போட்டித் தொடரை இந்தியாவுக்கு வெளியே வேறு நாடொன்றில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி)  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு (பி.சி.சி.ஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

20201 ஆம் ஆண்டு இந்தியாவில் உலக இருபதுக்கு 20 போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஐ.சி.சி. மேற்கொள்ளும். டிக்கெட் விற்பனை, தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு உரிமம், அனுசரணையாளர்கள் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஒவ்வொரு கிரிக்கெட் சபைகளுக்கும் ஐ.சி.சி. பகிர்ந்தளிக்கும்.

பொதுவாக ஒரு நாடு போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்தால், அந்த நாட்டின் கிரிக்கெட் சபை தங்கள் நாட்டு அரசாங்திடம் பல்வேறு வரி விலக்குச் சலுகைகளை பெற்றுக்கொள்ளும். இதனால் வரியாக செலுத்தக்கூடிய கோடிக்கணக்கான பணம் ஐ.சி.சி. க்கு எஞ்சும்.

இந்த முறை இந்திய அரசாங்கம் வரி விலக்குக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் வரி விலக்குக்கு அனுமதி வாங்கி தந்தால் மாத்திரமே போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்க எடுப்போம். இல்லை என்றால் வேறு நாட்டுக்கு  மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பி.சி.சி.ஐ.க்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்திருந்தது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது 2019 டிசெம்பர் மாதம் வரை ஐ.சி.சி. அவகாசம் அளித்திருந்தது. அதன்பின் ஏப்ரல் 17 ஆம் திகதி  வரை அந்த அவகாசத்தை நீட்டித்தது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமுலில் இருப்பதால் பி.சி.சி.ஐ. மேலும் அவகாசம் கேட்டுள்ளது. ஒருவேளை இம்முறை அனுமதி வாங்கத் தவறினால் 2021 உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இந்தியாவுக்கு வெளியே வேறொரு நாட்டில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.சி.சி. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.