(ஆர்.யசி)

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை காலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு கொண்டுவரப்படவுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில்  அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என சகலரும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின்  இறுதிக்கிரியை நிகழ்வுகள் இன்றில் இருந்து எதிர்வும் ஞாயிற்றுக்கிழமை வரையில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் அவரது பூதவுடல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 

நாளை காலை 10.45 மணி தொக்கம் காலை 11.30 மணி வரையில் அவரது பூதவுடல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்படும்.

இந்த அஞ்சலி நிகழ்விற்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய  தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற அதிகாரிகள் என சகலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று செய்யப்பட்டுள்ளதுடன்  அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாத  முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 11.30 வரையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்படும்  அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  அதன் பின்னர் கொழும்பு ஆனந்த குமாரசிறி மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான "சௌமிய பவன் " இல் நாளையதினம் முழுவதும் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.