ஐந்து மில்லியனுக்கும் மேலான மக்களை பாதித்து, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று கர்ப்பிணிகளையும் பாதிக்குமா? அவர்களின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கும் கொரோனாத் தொற்று ஏற்படுமா? என்ற கவலை மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக மகப்பேறு வைத்திய நிபுணர் விளக்கமளிக்கையில்,“ கொரோனா வைரஸ் தொற்று கர்ப்பிணி பெண்களை மட்டும் இலக்காகக் கொண்டு தாக்குவதில்லை. அனைவரையும் பாதிப்பது போல தான் கர்ப்பிணிப் பெண்களையும் பாதிக்கிறது. 

கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பொழுது, அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்போது ஒருசிலருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. 

சிலருக்கு அதற்கான அறிகுறிகள் இல்லாதிருந்தாலும், அவர்களுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தோம். இதனைத்தொடர்ந்து கர்ப்பிணியாக இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அரச வைத்தியசாலையில் மட்டுமல்லாமல், தனியார் வைத்தியசாலையில் தொடர் பரிசோதனை மேற்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் கூட கொரோனாத் தொற்று பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை மூலம் வலியுறுத்தப்படுகிறது. 

பொதுமக்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் மூலம் வழங்கப்பட்டு வரும் விழிப்புணர்வு, கர்ப்பிணி பெண்களுக்கும் பொருந்தும். இவர்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முக கவசத்தை அணியவேண்டும். அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ள வேண்டும். 

அதேபோல் கூட்டம் மிகுந்த இடங்களில் பயணிப்பதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று பாதித்த பெண்களிடமிருந்து அவர்களது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு இத்தகைய தொற்று பரவாது. ஏனெனில் இது இரத்தம் வழியாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதனால் குழந்தைக்கு தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. 

இருப்பினும் தாயிடமிருந்து இருமல், தும்மல், சளி மூலம் பிறந்த குழந்தைக்கும் பரவ வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்பொழுது, கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பிறகே குழந்தைகளை கையிலேந்தி தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.” என்றார்.

தொகுப்பு அனுஷா