சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பான பிரபலமான காடு தொடர்பான சாகச நிகழ்ச்சியில் முதன்முதலாக பங்குபற்றினார். 

அவரைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜும் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் காடு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான ‘இன்டூ த வைல்ட்ஸ் வித் பியர் கிரில்ஸ்’ என்ற சாகச நிகழ்ச்சியில் பங்குபற்றினார். 

மார்ச் மாதம் ஒளிப்பரப்பான இந்நிகழ்ச்சி அதிகளவு பார்வையாளர்களால் பார்வையிடப்பட்ட தொலைகாட்சி சாகச நிகழ்ச்சி என்ற சாதனையும் படைத்தது. 

இதனை தொடர்ந்து ஜூன் மாதம் ஐந்தாம் திகதியன்று இரவு 8 மணி அளவில் ‘உலக சுற்றுச்சூழல் தின’த்தை முன்னிட்டு,‘வைல்ட் கர்நாடகா’ என்ற பெயரிலான காடு மற்றும் அதனை சார்ந்த வாழ்வியல் குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. 

இந்த நிகழ்ச்சிக்கு முன்னணி நடிகரான பிரகாஷ்ராஜ் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இவர் தன்னுடைய சொந்த குரலில் பின்னணி பேசி இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இதுதொடர்பாக பிரகாஷ்ராஜ் தெரிவிக்கையில்,“ என்னுடைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள விடயத்தை மேற்கொண்டிருக்கிறேன். முதன்முதலாக இயற்கைக்காக குரல் கொடுத்திருக்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

இவர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘அண்ணாத்த’ என்ற படத்திலும், பொலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கும் ‘தலைவி ’படத்திலும் நடித்து வருகிறார்.