இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்  தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் நேற்று (26.05.2020) தமது 55 வயதில் மரணமானார்.

இவருடைய தீடிர் மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், எமது அயல்நாடான இந்தியாவில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல்,

இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு.ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் உடல்நலக் குறைவால் 26.5.2020 அன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆறுமுகன் தொண்டமான் மறைவு இலங்கை மக்களுக்கும், அந்நாட்டிற்கும் பேரிழப்பாகும். திறமைமிக்க அமைச்சரான ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர்கள் என்ற பெருமைக்குரியவர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும், இலங்கை மக்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.