(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடும் அனைத்து விடயங்களுக்கும் அடிபணிய முடியாது. அத்துடன் ஜனநாயக உரிமைகளை ஆணைக்குவின் சுயாதீன தன்மைக்காக விட்டுக் கொடுக்கவும் முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் பழிவாங்கலை இலக்காக கொண்டு கடந்த அரசாங்கத்தின்  முக்கிய தரப்பினர்கள் கைது செய்யப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரச அதிகாரம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கு உரிய ஆதாரங்கள் காணப்படுகின்றன.

5000 ரூபா நிவாரண நிதி வழங்கப்படுவதில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. அரச அதிகாரிகளை இவ்விடயத்தில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடும் அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கம் அடிபணிய வேண்டிய தேவை கிடையாது. ஆணைக்குவின் சுயாதீன தன்மைக்காக ஜனநாயக உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது.

தேர்தல் ஆணைக்குவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட துறைகளின் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே அனைவரும் பாதுகாப்பான முறையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது அவசியமாகும் என்றார்.